ரூ.1,000 தோட்ட கம்பனிகளின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்க வேண்டும் | தினகரன்


ரூ.1,000 தோட்ட கம்பனிகளின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்க வேண்டும்

தொழிற்சங்கங்கள் கோரிக்ைக

1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொழிலாளர்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவந்துவிடாது. பெருந்தோட்டக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். அன்று சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்ட கம்பனிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்த விடயத்தில் அறிய வேண்டியுள்ளதாக மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கமும், மலையக மக்கள் முன்னணியும் தெரிவித்தன.

இதேவேளை, அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இச் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

இந்த விடயம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கம்பனிகளுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள சலுகைகளுக்கமைய 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பை வெளியிடாதென நினைக்கின்றோம் எள்றார்.

இந்த அறிவிப்பு தொடர்பில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் கூறுகையில்,

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆயினும் அதனை வழங்க வேண்டிய கம்பனிகள் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. எனவே, இதன் நடைமுறை சாத்தியம் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இத்தகைய அறிவிப்புகளின்போது கம்பனிகள் காட்டிய எதிர் வினைகளை நாம் மறந்துவிடவில்லை. அரசாங்கம் அறிவிப்புகளைச் செய்து நிதி ஒதுக்கீடுகள் செய்த போதும் கூட கம்பனிகள் பல்வேறு காரணங்களைக் கூறி மறுத்தன. இந்த அறிவிப்புத் தொடர்பில் கம்பனிகளினதும் நிலைப்பாட்டையும் அறிய வேண்டியுள்ளது.

அதேநேரம் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை அரசாங்கம் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தில் உறுதிப்படுத்த முடியுமானால் இத்தனைக் காலம் நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறை குறித்த கேள்வி எழும்புகிறது. அது இல்லாமல் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடிந்தால் அரசாங்கமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இனி திகழவேண்டும். இடையில் கூட்டு ஒப்பந்தம் எனும் பேச்சுவார்த்தை நாடகம் அவசியமற்றது. அதற்கான உறுதிப்பாட்டையும் அரசாங்கம் வழங்க வேண்டும். எது எப்படி ஆயினும் இறுதியாக தொழிலாளர் கைகளுக்குரிய தொகை சென்று சேரும் வரை உறுதியான எந்த விடயத்தையும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ்,

1000 ரூபா சம்பள அதிகரிப்பென தம்பட்டம் அடித்தாலும் நாம் ஒரு நாளைக்கு 50 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு முன்வைத்த தொகையின் அளவே இறுதியில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும். தொழிலாளர்களுக்கு கிடைக்கும் எந்தவொரு நன்மைக்கும் நாம் எதிர்ப்பை வெளியிட மாட்டோம். அன்று கம்பனிகள் 50 ரூபா சம்பள உயர்வை எதிர்த்திருக்காவிடின் கடந்த கூட்டு ஒப்பந்தத்திலேயே தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைத்திருக்கும். காலம் தாழ்த்தப்பட்டாவது இது கிடைத்தால் வரவேற்பளிப்போம்.

தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக ஆக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடும் தொழிலாளர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ள பாரிய எதிர்பார்ப்புமாகும். அதனை தடுக்கும் வகையில் இந்தச் சம்பள அதிகரிப்புகள் இருக்க கூடாதென்பதில் தெளிவாகவுள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்Add new comment

Or log in with...