அவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு | தினகரன்


அவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன்போது வழக்கின் முதல் பிரதிவாதியான மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தபோதிலும், இரண்டாவது பிரதிவாதியான  நிஸ்ஸங்க சேனாதிபதி முன்னிலையாகி இருக்கவில்லை.

தமது கட்சிக்காரர் மற்றுமொரு வழக்கில் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக, நிஸ்ஸங்க சேனாதிபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரசிங்க தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய நிஸ்ஸங்க சேனாதிபதி, கடந்த 16ஆம் திகதி இரவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விசேட மேல் நீதிமன்றத்தினால் நவம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தின்போது, அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்குவதற்காக, அந்நிறுவனத்தால் ரூபா 355 இலட்சம் பணத்தை பெற்றமை மற்றும் வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...