மனிதனுக்காக அல்லாஹ்வின் அருள் | தினகரன்


மனிதனுக்காக அல்லாஹ்வின் அருள்

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா தன் படைப்புக்கள் மீது அதிக இரக்கமும் கருணையும் கெண்டவனாவான். அதிலும் மனிதன் மீது மிக அதிக இரக்கம் கொண்டிருக்கின்றான் அவன். தன் கரங்களால் படைத்த மனிதனுக்கு பகுத்தறிவையும் தெரிவு சுதந்திரத்தையும் வழங்கியுள்ள அல்லாஹ், பூமிக்கான தனது பிரதிநிதியாகவும் அவனை ஆக்கி வைத்துள்ளான்.  அத்தோடு அவனது வாழ்வுக்குத் தேவையான  அத்தனை வஸ்துகளையும் உலகில் அவனுக்கு வசப்படுத்தி கொடுத்துமுள்ளான்.  

அதேநேரம், உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் இம்மை, மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டும். விமோசனம் அடைய வேண்டும் என்பதிலும் அவன் விஷேட கவனம் செலுத்தியுள்ளான். அதற்கு தேவையான   முழுமையான இறைவழிகாட்டலை அவனே வகுத்தளித்தும் இருக்கின்றான். அவ்வழிகாட்டலான அல் குர்அனை அவனது இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக உலகிற்கு அருளி அதனை  செயலுருப்படுத்தி காட்டி  எல்லா கால சூழலுக்கும் ஏற்ற நடைமுறைச்சாத்தியமான வாழ்க்கை நெறியாகவும் ஆக்கி வைத்திருக்கிறான்.

மேலும், உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டத்துடன் இருக்கும் இந்த அருள்மறையின் புனிதத்தன்மையையும் தூய்மையையும் பாதுகாப்பதிலும் அவன் உச்ச கவனம் செலுத்தியுள்ளான். ஏனெனில் இஸ்லாத்திற்கு முன்னர் அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறைவேதங்களில் இடம்பெற்ற மனிதக் கையாடல்களால் அவற்றின் தூய்மையும் புனிதத்தன்மையும் பாதிக்கப்பட்டதோடு அவற்றின் அசல்தன்மையையும் அவை இழந்தன. அவ்வாறான நிலமை புனித அல் குர்ஆனுக்கு ஏற்படாதிருப்பதை அவன் உறுதிப்படுத்தி உத்தரவாதப்படுத்தியுள்ளான்.  இதன் நிமித்தம் அவன் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளான்.  

 ‘முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைதூது அருளப்படுவதற்கு முற்பட்ட காலம் அதாவது ஈஸா (அலை) அவர்கள் விண்ணுலகத்திற்கு உயர்த்தப்பட்டது தொடக்கம் முதல் வானத்தில் மலக்குகள் பேசுவதை ஜின்கள் ஒட்டு கேட்பது தடுக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் அங்கு இடம்பெறும் உரையாடல்களை ஒட்டுக்கேட்கவென ஜின்கள் அமரக்கூடிய பல இடங்கள் காணப்பட்டன. அதனைப் பயன்படுத்தி ஒரு வார்த்தையை ஒட்டு கேட்டுவிட்டால் அதில் ஒன்பது வார்த்தைகளை சேர்த்து கூடுதல்படுத்தி விடக்கூடியனவாக   ஜின்கள் இருந்தன. அவற்றை பூமியிலுள்ள தம் சோதிட நண்பர்களிடம் அவை போட்டு வந்தன. அவர்களும் பொய்யையும் கலந்து மக்களிடம் கூடுதலாகக் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.  

இவ்வாறான சூழலில் அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருள் மறையை அருளத் தொடங்க முன் ஜின்களின் ஒட்டுக்கேட்கும் செயலும் அதற்காக அவை அமரும் இடங்களும் தடைசெய்யப்பட்டன. ஏனெனில் ஒலி வடிவில் அருளப்படும் அல் குர்ஆனை ஜின்கள் ஒட்டுக்கேட்க இடமளித்தால் அது குர்ஆனின் தூய்மைக்கும் புனிததன்மைக்கும் சவாலாக அமைந்துவிடும். அதனால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஜின்களும் ஷைத்தான்களும் இத்தடையை மீறிய போது அவை எரிகற்களாலும் தீபந்தங்களாலும் தாக்கப்பட்டன. இந்நடவடிக்கை ஜின்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அதனால் அவை பூமியில் என்ன மாற்றம் நேர்ந்துள்ளதென நாலாபுறமும் பரந்து சென்று ஆராய்ந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதை ஜின்கள் அறிந்து கொண்டன’ என்று இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் ‘அல் பிதாயா வன்நிஹாயா’ (நபிகளார் வரலாறு) என்ற நூலில் பல ஹதீஸ்களை ஆதாரம் காட்டி குறிப்பிட்டிருக்கின்றார்.  

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உக்காள் சந்தையை நோக்கி சென்று கொண்டிருந்த போது ‘இறைதூது அருளப்பட்டது. அச்சமயம் ஷைத்தான்களுக்கும் வானுலக செய்திக்கும் இடையில் திரையிடப்பட்டு அச்செய்தியை அவை செவியேற்க முடியாதபடி தடுக்கப்பட்டது. வானுலகச் செய்தியை ஒட்டுக்கேட்க சென்ற ஷைத்தான்கள் மீது எரிகற்கள் தீபந்தங்களாக எரியப்பட்டன’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.  

(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)  

மேலும் அல் குர்ஆன் லஹுபூல் மஹ்பூலில் என்ன ஒழுங்கில்? எவ்வாறான வடிவமைப்பில்? உள்ளதோ அதே வடிவில், ஒழுங்கைப்பில் தான் உள்ளது. அதற்கேற்பவே அது தொகுக்கப்பட்டிருக்கின்றது.  இக்குர்ஆன் நூல் வடிவில் முழுமையாக அருளப்பட்டதல்ல. அது காலசூழ்நிலைக்கு ஏற்ப கட்டம் கட்டமாக ஒலி வடிவில் இறக்கி அருளப்பட்டன. அதுவும் குர்ஆன் கொண்டிருக்கும் அத்தியாய வடிவிலும் அருளப்பவில்லை. மாறாக ஒரு தடவை ஒரு அத்தியாயத்திலுள்ள சில வசனங்கள்  அருளப்பட்டால் அடுத்த தடவை மற்றொரு அத்தியாயத்தின் வேறு சில வசனங்கள் அருளப்படும். ஆனால் ஏற்கனவே அருளிய அத்தியாயத்தின் ஏனைய வசனங்கள் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்த பின்னர் அருளப்பட்டன. இவ்வாறு ‘கால இட சூழல் தேவைக்கு ஏற்ப அல் குர்அன் வசனங்கள் அருளப்பட்டதோடு அவற்றை முஹம்மத் (ஸல்) அவர்கள் எழுத்தர்களை கொண்டு உரிய ஒழுங்கில் எழுதி வந்தார்கள்’ என மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்) அவர்கள் தமது அல் குர்ஆன் தப்ஸீரான ‘ததப்புரல் குர்ஆனில்’ குறிப்பிட்டிருக்கின்றார். 

இக்குர்ஆன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஒலி வடிவில் அருளப்பட்ட போதிலும் அதில் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒரு சொல் கூட கலந்திட அல்லாஹ் இடமளிக்கவில்லை.  லஹுபூல் மஹ்பூலில் இருக்கும் ஒழுங்குக்கு ஏற்ப ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆனை ஒதிக்காட்டி சரிபார்த்து முழுமைப்படுத்தினார்கள் என்பது பல ஹதீஸ்களின் ஊடாக உறுதிப்படுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில்  மாற்றங்களோ  கலப்படங்களோ ஏற்பட  அவன் அணுவளவும் இடமளிக்கவில்லை. இது எல்லா காலங்களுக்கும் நடைமுறைச்சாத்தியமான வாழ்க்கை நெறியாகும். இதில் குறைகள் எதுவுமே கிடையாது. இவ்வாறு குர்ஆனின் தூய்மையும் புனிதமும் உயிரோட்டமும் உச்சளவில் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. 

இதனை அல்லாஹ் தன் அருள் மறையில், ‘நிச்சயமாக நாம் தான் இவ்வேதத்தை (உங்கள் மீது) இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாத்துக் கொள்வோம். 

(அல் குர்அன் 15:09)  

என்று குறிப்பிட்டிருக்கின்றான். இதன்படி குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அதன் ஆசானான அல்லாஹ்வே ஏற்றுக்கொண்டிருக்கின்றான். அதனால் தான் அவன் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி பின்வருமாறு சவால் விடுத்திருக்கின்றான்.  

‘(நபியே..!) நீங்கள் கூறுங்கள். மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டு வர முயற்சித்த போதிலும் இதைப்போன்று கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது.’  

(அல் குர்அன் 17:88)  

‘(நம்முடைய தூதர்) இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? அவ்வாறாயின் (நபியே.. அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள். இதைப்போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு சாத்தியமான அனைத்தையும் இதற்காக அழைத்து (உங்களுக்கு துணையாக)க் கொள்ளுங்கள். மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே).’  

(அல் குர்ஆன் 11:13) 

‘நாம் (நமது தூதர் முஹம்மது எனும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது இறைவனால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர்களையும்) நீங்கள் அழைத்து சேர்த்து கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்.’ 

(அல் குர்ஆன் 2:23) 

‘இதனை (நம்முடைய தூதராகிய) அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே..) நீங்கள் கூறுங்கள், நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்கு துணையாக) அழைத்துக்கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்’. 

(அல் குர்ஆன் 10:38) 

‘(நபியே..! இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களும் கற்பனை செய்து கொண்டு) இதைப் போன்ற யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வரவும்.’ 

(அல் குர்அன் 52:34) 

இவ்வாறு அல் குர்ஆனின் ஊடாக அல்லாஹ் சவால் விட்டிருக்கின்றான். இச்சவால் விடக்கப்பட்டு இற்றைக்கு 1400வருடங்கள் கடந்தும் இற்றைவரையும் அதனை நிறைவேற்ற முடியாதுள்ளது. இது மறுமை வரையும் மனிதனால் நிறைவேற்ற முடியாத சவாலாகும்.  

ஏனெனில் சர்வ வல்லமை படைத்த பரிபூரணமானவனான அல்லாஹ்வை ஆசானாகக் கொண்டு மனிதனின் சுபீட்சம், விமோசனம் மற்றும் ஈருலக வெற்றிக்காக அவனால் வடிவமைக்கப்பட்டிருப்பது தான் இக்குர்ஆன். அதனால் அவனது சவாலை  அவனது படைப்பான மனிதனால் ஒருபோதுமே நிறைவேற்ற முடியாது.  

ஆகவே அல் குர்ஆனின் வழிகாட்டல்களின் அடிப்படையில்  சிந்தனையையும், செயற்பாடுகளையும் அமைத்துக்கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக  அல்லாஹ்வின் அருளை ஈருலகிலும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அது அல்லாஹ்வின் கருணைக்கும் அன்புக்கும் உரிய படைப்பான மனிதனின் பொறுப்பாகும்.  

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...