வீரஇராசமாணிக்கத்தின் “ஆடகசௌந்தரி” | தினகரன்


வீரஇராசமாணிக்கத்தின் “ஆடகசௌந்தரி”

கூத்து நூல் வெளியீட்டு விழா

கிராமிய கலையின் தாயகமாக திகழும் புகழ் பூத்த எருவில் கிராமத்தில் பிறந்து 72வயது கடந்தும் மத்தளம் ஏந்தி கூத்துக் கலையின் மகத்துவத்தை பறைசாற்றும் இராசமாணிக்கத்தினால் அரங்கேற்றப்பட்ட  கூத்துப் பண்புகள் சிதையாமல் அரங்கேற்றிய பத்துகூத்துக்களின் தொகுப்பு ‘ஆடசௌந்தரி’யின் பெயர்தாங்கி ஐங்கரா கலைக்கழகத்தினால் கூத்துக்கலையின் ஒரு மைல் கல்லாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

பிரதம விருந்தினராக மண்முனை தென் எருவில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம்கலந்துகொள்ள  முக்கிய இலக்கிய பிரமுகர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

நூலாசிரியர் அறிமுக உரையை அதிபர் சா.பரமானந்தம் ஆற்றுகையில்: சிறுபராயத்திலேயே அண்ணாவிமார் இருவர் மத்தளத்தை தாங்கி நிற்க மத்தளம் வாசித்து இராசமாணிக்கம்

இன்று அதில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கின்றார். இவர் வீரஅபிமன்யு கூத்தில் பிரதான பாகம் ஏற்று அறிமுகமாகி முதற் தடவையிலேயே அனேகரின் பாராட்டைப் பெற்றவர். கர்ணன் வதம் கூத்தில் கர்ணன் பாத்திர மேற்று நவரசங்களையும் பிரதிபலித்து கண்களை குளமாக்கி பிரமிக்க வைத்தவர் என்று குறிப்பிட்டார்.

மத்தளம் வாசிப்பு இவரது கைவந்த கலை என்று குறிப்பிட்டதுடன் சிறந்த கூத்து பிரதிகள் எழுதி கூத்துக்கலைக்கே புத்தெழுச்சியும்  புதுமெருகும் கொடுத்தவர் என குறிப்பிட்டார்.

நூல் நயவுரையை நிகழ்த்திய கவிஞர் ஆழிவேந்தன் தனதுரையில் அவரை பாரதியின் மறுபிறவி என வர்ணித்தார். மட்டக்களப்பை ஆட்சிபுரிந்த வீரம்மிகு ஆடகசவுந்தரியை எம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி எமது மாட்டத்திற்கே பெருமை சோத்துள்ளார்.  இத்கைய நூல் எதிர்கால சந்ததிக்காக பேணிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம் என குறிப்பிட்டார்.

கூத்துப் பண்புகள் எதுவும் சிதைவுறா வகையில் படைப்புக்களை யாத்து எளிய மொழி நடையில் கூத்துக்களை அரங்கேற்றியது இவரின் தனித்துவ பண்பாகும்.

அவற்றில் மட்டக்களப்பு மண்ணணுக்குபெருமை சேர்க்கின்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருமையை முன்னிறுத்தி அவர் அமைத்த கூத்து அவரது படைப்புக்களுக்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முதுமையிலும் இன்றும் கூத்துக்கலைக்கு புத்துயிர் அளிக்க ஆயத்தமாக இருக்கும் இந்த கலைஞரின் அர்ப்பணிப்பும் தணியாத தாகமும் அடுத்த பரம்பரைக்குபெரும் எடுத்துக்காட்டு.

இந்த நூல் தாள நயத்துடன் ஒலிப்பேழையாக வெளிவரவேண்டும் என்ற தனது வாஞ்சையையும் அவர் வெளியிட்டார். 

வி.கே.ரவீந்திரன்
(படங்கள்:கல்லாறு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...