பீகாரில் ஐக்கிய ஜ.தளவுடன் இணைந்து பா.ஜ.க போட்டி

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புக்களை சமாளிக்கவும் வியூகம்

பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணியாக பாரதீய ஜனதா போட்டியிடுமென, உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் நிலையில்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே பாரதீய ஜனதா கட்சி இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. குடியுரிமைச் சட்டத்தின் அம்சங்களை மக்களுக்கு விளக்கும் வகையிலும்,சட்டத்தை ஆதரித்தும் பாஜக சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.

இவ்வகையில் பீகார் மாநிலம் வைஷாலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றியதாவது:-

குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படமாட்டாது.

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும். ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திப்போம் எனவும் அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.

இதன்மூலம் பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி நீடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணியை வீழ்த்த ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...