மூளைசாலிகள் பெரும் சொத்து

நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, மூளைசாலிகள் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி பூண்டிருக்கிறார். மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கின்றார். மூளைசாலிகள் வெளியேற்றம் காரணமாக நாட்டின் முன்னேற்றம் மோசமாக பாதிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

கடந்த காலத்தில் நாட்டிலிருந்து பெருமளவான படித்தவர்கள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களான மூளைசாலிகள் வெளியேறியுள்ளனர். இது தேசத்தை பாரியளவில் பின்னடைவுக்கு இட்டுச் சென்றது. நாட்டின் நெருக்கடி நிலைமை காரணமாகவே பெரும்பான்மையான புத்திஜீவிகள் நாட்டிலிருந்து வெளியேறினர். இதன் விளைவாக நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புகள் இழக்கப்பட்டன.

இலவசக் கல்வித் திட்டம் எமது நாட்டில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியது. மக்கள் மத்தியில் கல்விச் செயற்பாடுகள் புத்துணர்வு பெற்றன. படித்தவர்கள் பரம்பரை மேலோங்கியது. நிறையவே புத்திஜீவிகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனை நாம் எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆசிய பிராந்தியத்தில் இலங்கை கல்வியில் நல்ல முன்னேற்றம் கண்ட நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் தலைநிமிர்ந்து நிற்கக் கூடிய பெருமையை எமது நாடு பெற்றுள்ளது.

நாட்டின் கல்வி முறைமையில் வளங்களை விரிவுபடுத்துவதற்கு நாம் நிறையவே பங்களிப்புச் செய்ய வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானது எமது புத்திஜீவிகள் வெளியேற்றத்தைத் தடுப்பதாகும். அவர்கள் பெற்ற புலமை நாட்டுக்குப் பயன்பட வேண்டும். அதன் மூலம் நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல முடியும். இந்த மண்ணில் பிறந்த எந்தவொரு பிரஜையும் தாய்நாட்டை மறந்து அல்லது புறக்கணித்துச் செயற்பட முடியாது. அப்படிச் செய்வது தேசத்துரோகச் செயலுக்கு ஒப்பானதாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் போர்க் காலச் சூழலை மீட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. வடபுலத்திலிருந்து முப்பதாண்டு கால யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான புத்திஜீவிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறினர். அன்றைய நிலையில் அவர்களுக்கு மாற்றுத் தீர்வெதுவும் காணப்படவில்லை. அதன் காரணமாக திறமையான புத்திஜீவிகளை நாம் இழக்கும் நிலைமை ஏற்பட்டது. வடபுலத்திலிருந்து வெளியேறிய புத்திஜீவிகளை நாட்டுக்குத் திருப்பி அழைக்க வேண்டும். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரும் கூட நாட்டுக்குத் திரும்பும் மனநிலையில் அவர்கள் காணப்பட்டாமை கவலையளிக்கின்றது.

கல்வித்துறையில் மலர்ச்சியும், முன்னேற்றமும் காணப்பட்டால் மட்டுமே நாடு செழிப்படைய முடியும். அத்துடன் படித்த இளைஞர்களும் கல்விமான்களும் நாட்டுக்காக தியாக மனப்பான்மையுடன் சேவையாற்ற முன்வர வேண்டியது அவர்களது கடப்பாடாகும். பெற்ற தாய்க்கு பணிவிடை செய்வது எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவத்தை தாய்நாட்டுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும். நாம் பெற்றுக் கொண்ட புலமையை எமது எதிர்காலச் சந்ததிக்கும் பெற்றுக் கொடுப்பதோடு நாட்டின் எழுச்சிக்கும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

இந்த 21 ஆம் நூற்றாண்டை உலகம் அறிவெழுச்சியின் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம், இணையம், உயர் தொழில்நுட்பம், தன்னியக்கத்துறை தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தின் முக்கிய தேவைப்பாடாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இனிவரக் கூடிய தசாப்தங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் அம்சங்களாகவே நோக்கப்படுகின்றன. வேகமான காலவோட்டத்தோடு நாமும் போட்டியிட்ட வண்ணம் ஓட வேண்டியுள்ளது.

இரண்டாம் நிலைக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரச வளங்களின் பற்றாக்குறை காரணமாக அமைந்து விடக் கூடாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார். நாட்டில் தரம் வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலமாக நாட்டிலிருந்து மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இனம், மதம், மொழி என்ற மூன்றையும் கடந்து நாடு என்ற நான்காவது கட்டமைப்புக்குள் அனைவரும் நுழைந்து கொள்ள முடிந்தால் நிச்சயமாக செழிப்பானதொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். எமது எதிர்காலச் சந்ததியினருக்கு வளம் கொண்ட தேசத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். புத்துலகுக்கு புதுமைகள் நிறைந்த அறிவாற்றல் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாடு புத்திஜீவிகள் நிறைந்த புதுயுகமாக மாற்றம் பெற வேண்டும்.

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தின்படி முன்பள்ளி கல்வி முதல் மூன்றாம் நிலை கல்வி வரை கல்வித்துறையில் மாற்றங் காண்பதன் மூலம் நாடு உரிய இலக்கை எட்டிப் பிடிக்க முடியும். அதற்கு புத்திஜீவிகள், கல்விமான்களின் மீள்வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.


Add new comment

Or log in with...