ரஞ்சன் ராமநாயக்கவின் இறுவட்டுகளில் அடங்கியுள்ள தனிநபர் அந்தரங்கங்கள்! | தினகரன்


ரஞ்சன் ராமநாயக்கவின் இறுவட்டுகளில் அடங்கியுள்ள தனிநபர் அந்தரங்கங்கள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தெற்கு குற்றச் செயல் தடுப்புப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்த ஏராளமான தொலைபேசி

உரையாடல்கள் பதிவாகிய இறுவட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் நாட்டின் முக்கிய மற்றும் பிரபலஸ்தர்கள் பலருக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்களே இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர் இப்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் இப்போது பூதாகரமாகியிருக்கிறது. அமெரிக்காவில் ரிச்சர்ட் நிக்ஸனின் ஜனாதிபதி காலத்தில் இது போன்ற தொலைபேசி உரையாடல் பதிவுகள் ரிச்சர்ட் நிக்ஸினின் பதவிக்கே உலை வைத்தன. அந்தப் பதிவுகள் ‘வோட்டர் கேட்’ (Water Gate) என்று அழைக்கப்பட்டன. அதேபோல் இந்தப் பதிவுகளுக்கு கொலம்போ கேட் (Colombo Gate) மற்றும் ‘ரஞ்சன் கேட்’ என்று ஊடகங்கள் பெயர் வைத்துள்ளன.

பொலிஸார் கைப்பற்றி எடுத்துச் சென்ற பதிவுகள் இன்னும் பொலிஸாரிடமே கவனமாக இருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். ஆனால் அந்தப் பதிவுகளில் சில இணையத்தின் மூலம் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றில் சில முக்கிய தகவல்களை உள்ளடக்கியுள்ள நிலையில், மற்றவை ரஞ்சனின் தனிப்பட்ட தகவல்களை கூறுபவையாக உள்ளன. இந்த தொலைபேசி உரையாடல்களை மற்றைய தரப்புக்கு தெரியாமலே, அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே ரஞ்சன் அவற்றைப் பதிவு செய்தமை தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

அவற்றில் சில முக்கிய பிரமுகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய அந்தரங்கத் தகவல்களும் உள்ளடங்கியிருப்பதால் தனிப்பட்ட உரிமைகள் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுப்பட்டு வருகின்றன.

தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே ரஞ்சன் ராமநாயக்க பதிவு செய்துள்ளார். அப்படியாக இருப்பின் இது முறையற்றது என்று டிஜிட்டல் ஊடக பகுப்பாய்வாளர் ஒருவர் கூறுகிறார். அத்துடன் அது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்.

ஆனால் இலங்கையில் அவ்வாறான சட்டம் இன்னும் அமுலில் இல்லை என்பதால் ரஞ்சனின் செயற்பாட்டின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இல்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

'அந்தரங்கம் பேணல்' தொடர்பான சட்டம் இலங்கையில் ரோமன் டச்சு சட்ட அதிகாரத்தின் கீழேயே உள்ளது. எனினும் அது சட்டப் புத்தகத்தில் இல்லை. எனவே அது ஒருவரின் உடல் மற்றும் செயலெல்லை ஆகியவற்றுக்கு மட்டுமே உரிமை தருகிறது. குரல் பதிவு என்பது அதில் உள்ளடக்கப்படவில்லை என்று சட்டத்தரணியொருவர் கூறுகிறார்.

படங்களைப் பிடித்தல், ஒலி மற்றும் ஒளிப் பதிவு செய்தல் ஆகியவை தற்போது பொதுவான விடயங்களாகியுள்ளன. அத்துடன் எளிதானவையாகவும் மாறியுள்ளன. அத்துடன் இதில் பயன்களும் உள்ளன, பாதிப்புகளும் உள்ளன என்கிறார் அந்த சட்டத்தரணி.

மேற்படி விடயங்களில் பொதுமக்கள் தொடர்பான அக்கறை எங்கே முடிகிறது? தனிப்பட்ட உரிமை எங்கே ஆரம்பிக்கிறது? என்பது தொடர்பான முறையான விளக்கம் இல்லை. இது போன்ற தொலைபேசி உரையாடல் பதிவுகள் அடுத்து பெருமளவில் வரப் போகின்றன. அவை தனிப்பட்ட உரிமையை எந்த வகையில் பாதிக்கின்றன என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டிய நிலையை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல் பதிவு போல் பதிவுகள் இடம்பெறுவது இது முதல் தடவையல்ல. தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளமை ஏற்கனவே இடம்பெற்றுள்ளதுதான்.

தனிப்பட்ட உரிமை பாதுகாப்பை எந்தவொரு சட்டமும் நூறு சதவீதம் பயன் தரும் என்று கூறுவதற்கில்லை. 2010 இல் விக்கிலீக்ஸ் ‘கேபிள்கேட்’ சர்ச்சை ஏற்பட்ட போது, 2,50,000 க்கு மேற்பட்ட அமெரிக்க இராஜதந்திர பதிவுகள் கசிந்தன. நாங்கள் இருப்பது இணைய யுகம். இதில் எந்தவொரு இரகசியத்தையும் நீண்ட காலம் மறைத்து வைக்க முடியாது என்று அந்த சட்டத்தரணி மேலும் கூறுகிறார்.


Add new comment

Or log in with...