அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-Protest Against Principal Transfer-Akkaraipattu

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட ஒலுவில் அல்- ஹம்றா வித்தியாலய புதிய அதிபரின் நியமனத்தை நிறுத்தி, பழைய அதிபரையே நியமிக்குமாறு பெற்றோர்களும், மாணவர்களும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலம் முன்பாக இன்று (16) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய அதிபர் நியமிக்கப்பட்டதனைக் கண்டித்து கடந்த 06ஆம் திகதி முதல் பாடசாலையை மூடி, பெற்றேர்களும் மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்திருந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையிலான கல்வி அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் பாடசாலை சமூகத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-Protest Against Principal Transfer-Akkaraipattu

இதன் பின்னர் பாடசாலை திறக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்தளவிலேயே கடந்த சில தினங்களாக காணப்பட்டதுடன், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் முறையாக இடம்பெற்றிருக்கவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் சிறந்த முறையில் இயங்கி வந்த இப்பாடசாலையின் நிலைமை தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான தீர்வாக புதிய அதிபர் நியமனத்தை இரத்துச் செய்து, முன்பிருந்த அதிபரையே நியமிக்க வேண்டும் என இன்று (16) மேற்கொள்ளப்பட்ட கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-Protest Against Principal Transfer-Akkaraipattu

பழைய அதிபரின் 3 வருட கால சேவைக்குள் 70 இக்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள் எனவும் இப்பாடசாலை அனைத்து செயற்பாடுகளிலும் குறுகிய காலப்பகுதியில் பெரும் முன்னேற்றம் கண்டு வந்துள்ளதாகவும், இந் நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனா்.

இப்பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கத்தின் இடமாற்றக் கொள்கைக்கமையவே இவ்விடமாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது இப்பாடசாலை அதிபர் இடமாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றினை எட்டும் வரையில் பாடசாலையின் கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டுமென அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன் இப்பிரச்சனை தொடர்பில் மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறி தீர்வொன்றினை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

(அம்பாறை சுழற்சி நிருபர் - ரி.கே. ரஹ்மதுல்லாஹ்) 


Add new comment

Or log in with...