ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்; தொழிலாளர் மகிழ்ச்சி

22 கம்பனிகளிடம் அரசாங்கம் பேச்சு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இதை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையிலான இந்த அரசாங்கம் சொல்வதையே செய்யும், செய்வதையே சொல்லும். இந்த கொள்கையின் அடிப்படையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த கால அரசாங்கத்தில் இழுத்தடிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் புதிய அரசாங்கம் கவனமெடுத்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிக்கு அமைய பொங்கல் தினத்தில் தோட்ட தொழிலாளர்கள் சந்தோஷப்படும் விதத்தில் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு நிச்சயம் வழங்கப்படும்.

மலையகத்தில் பல்கலைகழகம், கல்வித்துறை, வீடமைப்பு என பல்வேறு அபிவிருத்திகளுக்கு நாம் வாக்குறுதி வழங்கினோம்.இவை கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும்.

அதேநேரத்தில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்போகும் இந்த ஆயிரம் ரூபாய் தொடர்பில் மாற்றுக்கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கலாம்.

ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை கொடுப்பதற்கு மலையகத்தை முகாமைத்துவம் செய்யும் 22 கம்பனிகளிடம் அரசாங்கம் பேசியுள்ளது. நானும் இதுதொடர்பில் பேசியுள்ளேன். வரிச் சலுகைகளை புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்தவகையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இவ்வாறான சலுகைகளை வழங்கி இந்த ஆயிரம் ரூபாவை தொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...