வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 100,000 தொழில்வாய்ப்பு

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 100,000 தொழில்வாய்ப்பு-100,000 employment for Low Income Families

- திட்டம் இறுதிக் கட்டத்தில்; ஜனவரி 20 இற்கு முன் விண்ணப்பம்
- சொந்த ஊரிலேயே நியமனம்

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம்
அந்த வகையில் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேர்ப்பு முறை மற்றும் அதற்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளன.

நோக்கம்
மிகவும் வறிய நிலையில் உள்ள சமூர்த்தி உதவி பெறும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தகுதி பெற்றிருந்தும் சமூர்த்தி உதவி கிடைக்காத குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை கட்டியெழுப்புவது இந்த பல்நோக்கு அபவிருத்தி செயலணியின் நோக்கமாகும்.

6 மாத பயிற்சி; பின் நிலையான தொழில்வாய்ப்பு
அத்தகைய குடும்பங்களில் தொழிற் படையணிக்கு பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை இனம்கண்டு அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் 6 மாத கால பயிற்சியின் பின்னர் நிலையான தொழில் வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் வதியும் பிரதேசங்களிலேயே தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தகுதி
எவ்வித கல்வித் தகைமைகளையும் கொண்டிராத அல்லது குறைந்த கல்வி மட்டத்தில் உள்ள பயிற்றப்படாதவர்கள் இதற்காக தெரிவு செய்யப்படவுள்ளனர். முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் முதலாம் கட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தொழில்கள் வழங்கப்படவுள்ளன. இந்த விடயங்களை நெறிப்படுத்துவதிலும் முகாமைத்துவம் செய்வதிலும் பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி பெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.

தெரிவு செய்யும் முறை
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 300க்கும் 350க்கு இடைப்பட்டவர்கள் இதன் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர். விகாரைகளின் நாயக தேரர், ஏனைய சமயத் தலைவரொருவர், மாவட்ட செயலாளர்கள், கிராம சேவையாளர் உள்ளிட்ட கள அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் தகைமையுடையவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். தெரிவு முறை சரியாக இடம்பெறுவதை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு தரப்பில் திறமையான சிலரையும் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நியமனம்; பயிற்சி
தகைமை பெறுவோர் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் கல்வித் தகைமை தேவைப்படாத தொழில்களுக்காக நியமிக்கப்படுவர். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடி, வனப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்காகவும் அந்தந்த பிரதேசங்களுக்கு அவசியமான வகையில் பயிற்சிகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் கண்காணிப்பின் கீழ் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்றுவிப்பு இடம்பெறும்.


Add new comment

Or log in with...