உயர் தரம் சித்தியடைவோரின் விரக்தியைப் போக்கும் ஏற்பாடு | தினகரன்

உயர் தரம் சித்தியடைவோரின் விரக்தியைப் போக்கும் ஏற்பாடு

வருடம் தோறும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை போதாது என்பதே உண்மை.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 1,81,000 பேர் சித்தியடைந்திருந்தனர். ஆனாலும் வருடாவருடம் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழங்களுக்கு அனுமதி பெறுகின்றனர். ஏனையோர் பரீட்சையில் தோல்வியடைந்தவர்களாகவே எமது சமூகத்தினால் கருதப்படுகின்றனர்.

க.பொ.த உயர்தரத்தின் மூன்று பாடங்களிலும் ‘எஸ்’ என்ற சாதாரண சித்தியைப் பெறுபவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போவதல்ல இங்குள்ள பிரச்சினை. நான்கு பாடங்களிலும் ‘சி’ சித்திகள் பெறுகின்ற மாணவர்கள் கூட பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற முடியாத நிலைமை உள்ளது. இவ்வாறானவர்களின் பெறுபேற்றுக்கு அமைவாக ஏதேனுமொரு பட்டப்படிப்புக்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்பதே பலரதும் கருத்தாக இருக்கின்றது.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைகின்ற சுமார் 1,81,000 பேரில் 30 ஆயிரம் பேருக்கு மாத்திரமே அனுமதி கிடைக்கப் போகின்றது. ஏனையோர் திண்டாட்டமான நிலைமையொன்றுக்கே தள்ளப்படுகின்றனர்.

பல்கலைக்கழக அனுமதிக்கான பெறுபேறு கிடைக்காதவர்களில் பலர் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சை எழுதுவதற்குத் தயாராகி விடுகின்றனர். ஒரு தொகையினர் வெளிவாரி பட்டப்படிப்பைத் தொடங்குகின்றனர். ஓரளவு சிறந்த தகைமை பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விடுவதுண்டு. இவை எவற்றிலுமே உள்வாங்கப்படாதோரின் நிலைமைதான் பெரும் பரிதாபம்.

அவர்கள் தங்களது எதிர்காலத்துக்குரிய எந்தவொரு முடிவுக்குமே வர முடியாதவர்களாக விரக்தி நிலைமைக்கு உள்ளாகின்றனர். தங்களது வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் வாய்ப்பொன்றைத் தேடிக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி எதுவுமே கிடையாது.

இலங்கையின் கல்விக் கொள்கையில் உள்ள கோளாறு என்றுதான் இதனைக் கூற வேண்டியுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சையில், இரு வெவ்வேறு மாவட்டங்களில் ஒரேவிதமான பெறுபேற்றைப் பெறுகின்ற இரு மாணவர்களில் ஒருவருக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதும், மற்றையவருக்கு அனுமதி கிடைக்காமல் போவதும் சிந்திக்க வேண்டிய விடயமாகும். இவ்விருவரில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போகின்ற மாணவரின் மனக்கவலை பரிதாபத்துக்குரியது.

இவ்விடயத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழக கல்வியியலாளர்கள் சில நியாயங்களை முன்வைக்கக் கூடும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடெங்கும் மாவட்ட ரீதியில் வாய்ப்புகளை வழங்க வேண்டுமென்று அவர்கள் வாதமொன்றை முன்வைக்கிறார்கள். ஆனாலும் ஒரே விதமான தகைமையைப் பெற்றிருந்த போதிலும், ஒருவருக்கு அனுமதி மறுக்கப்படுவதும், மற்றவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதும் நியாயமாக இருக்கப் போவதில்லை.

இதன் காரணமாகவே பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதென்பது அவரவர் தலைவிதியைப் பொறுத்த விடயமென்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.

வருடம் தோறும் பெருந்தொகை மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைகின்ற போதிலும், அத்தனை பேருக்குமே பல்கலைக்கழகங்களில் அனுமதி கொடுத்து விட முடியாதென்பதும் மறுபுறத்தில் காணப்படும் நியாயம் ஆகும். இவ்வாறு பெருந்தொகையான மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.

இலங்கையில் வருடாந்தம் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து வெளியேறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை குறைவானதாகும். இந்நிலையில் மேலதிக பல்கலைக்கழகங்களை நிறுவாமல் கூடுதல் மாணவர்களை அனுமதிப்பதென்பது சாத்தியமற்ற விடயம். பலகலைக்கழகமொன்றில் உள்ள ஆளணி மற்றும் பௌதிக வளங்களுக்கு ஏற்பவே மாணவர்களை அங்கு அனுமதிக்க முடியும். எனவேதான் பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதி மட்டுப்படுத்தப்படுகின்றது.

ஆனாலும் இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியானது நியாயமானதல்ல. உயர்தரப் பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போவதென்பது கவலைக்குரியதாகும். இதற்கு மாற்றுத் தீர்வு அவசியம்.

எனவேதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பல இடங்களில் புதிதாக பல்கலைக்கழக வளாகங்களை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வருடம் தோறும் அதிக எண்ணிக்கையான மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியை வழங்க முடியுமென்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். பல்கலைக்கழக மாணவர் அனுமதியை எதிர்வரும் புதிய கல்வியாண்டிலேயே அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளமையும் மகிழ்ச்சி தருகின்ற செய்தியாகும்.

கடந்த மாதம் வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபெற்றில் திறமையான சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்படுவதற்கு இத்திட்டம் இடமளிக்காது என்பதில் ஐயமில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, வருடாந்தம் பல்லாயிரம் பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுவதனால நாட்டில் உருவாகி வருகின்ற மற்றொரு பாரிய பிரச்சினையையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அத்தனை பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதற்கான வாய்ப்புகள் எமது நாட்டில் கிடையாது.

அரசாங்கத் துறைகளில் அத்தனை பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதென்பது முடியாத காரியம். தனியார் தொழில்துறை பெருகுவதன் மூலமே நாட்டில் வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்க முடியும். இவ்விடயத்திலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.

எவ்வாறிருந்த போதிலும், பல்கலைக்கழக மாணவர் அனுமதியை அதிகரிப்பதென்பது மாணவர் பலருக்கு மகிழ்ச்சியும் நிம்மதியையும் ஏற்படுத்துமென்பது உண்மை.


Add new comment

Or log in with...