பசறை பஸ் விபத்து: ஆராய மூவரடங்கிய குழு நியமனம்

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா

பசறையில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக மக்கள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளார். 

இக்குழு விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கூடியதாக இருக்குமென அமைச்சின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார். 

இதேவேளை விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரது மரணச் சடங்கு செலவுக்காகவும் சுமார் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை முன்வந்துள்ளது. 

விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரை தொடர்பு கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். 

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மரணச் சடங்குக்காக 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவையும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு அவசியமான உதவிகளையும் வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை முன்வந்துள்ளது. விபத்தில் உயிரிழப்பவர்களுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை இதுவரை காலமும் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவையே வழங்கி வந்தது. இதனை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறும் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு அவசியமான நஷ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் இ.போ.ச தலைவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். பசறையில் விபத்து இடம்பெற்ற இடத்தை இ.போ.ச தலைவர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

பசறை- மடுல்சீமை பிரதான வீதியிலுள்ள 06ஆம் கட்டையருகிலேயே நேற்று முன்தினம் (06) மாலை 5 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றது. தினமும் மாலை பசறையிலிருந்து எக்கிராவ நோக்கிச் செல்லும் பஸ்ஸே நேற்றும் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதன்போது எதிரே வந்த லொறியொன்றுக்கு இடம் விடுவதற்காக ஒதுங்கியபோதே பஸ் பாதையை விட்டு விலகி 100 அடி பள்ளத்துக்குள் உருண்டு விழுந்திருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்   


Add new comment

Or log in with...