புதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் அவதரித்த 19ஆம் நூற்றாண்டு கால காரைதீவு இல்லம் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இலங்கையில் இராம கிருஷ்ண மிசன் வியாபிப்பதற்கும், 26 மிசன் பாடசாலைகளின் பரிபாலனத்திற்கும் ஆணிவேராகத் திகழ்ந்தவர் சுவாமி விபுலாநந்த அடிகளார் என்பதை உலகறியும்.

இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரசாங்க நிதியில் விபுலானந்த சுவாமியின் பிறந்த வீடும், சுவாமி விபுலாநந்த மணிமண்டமும் அதன் சுற்றுப்பிரகாரங்களும் அண்மையில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டன.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் பரந்து விரிந்த சேவை நோக்கத்தின் ஒரு பரிமாணமாக இதனைக் காணலாம். அதற்கு கால்கோள் அமைத்துக் கொடுத்தவர் இந்து கலாசார மாவட்ட உத்தியோகத்தரும் பணிமன்றச் செயலாளருமான கு.ஜெயராஜி ஆவார்.

இதற்கென திணைக்களம் சுமார் 50 இலட்சம் வரை நிதியொதுக்கியிருந்தது. கிழக்கு மாகாண கலாசார திணைக்களமும் 5 இலட்ச ருபாவை வழங்கியிருந்தது. இவற்றைக் கொண்டு புனரமைக்கப்பட்ட அவ்வளாகம் இன்று அழகாகக் காட்சியளிக்கின்றது.

பணிமன்றம் கட்டியெழுப்பிய மணிமண்டபம்:

சுவாமிகள் பிறந்த காரைதீவு மண்ணில் அவரது பணிகளை முன்னெடுக்கவும் ஞாபகார்த்தமாக சிலை மற்றும் மண்டபத்தை நிர்மாணிக்கும் நோக்கிலும் 1967இல் 'சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தப் பணிமன்றம்' உருவாக்கப்பட்டது. அப்போது கிராமத் தலைவராகவும் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தாவாகவும் இருந்த வைத்திய கலாநிதி மா.பரசுராமன் அவர்களைத் தலைவராகக் கொண்டு இப்பணிமன்றம் இயங்கத் தொடங்கியது.

1969இல் பிரதான வீதியிலுள்ள விபுலாநந்த பொது நூலகத்திற்கு முன்பாக சிற்பி புல்லுமலை நல்லரெத்தினத்தைக் கொண்டு அடிகளாரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு தவத்திரு குன்றக்குடி அடிகளாரைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. அச்சமயம் ம.சற்குணத்தை ஆசிரியராகக் கொண்டு 'அடிகளார் படிவ மலர்' என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக பிரதான வீதியிலிருந்த அச்சிலை 1990 இனவன்செயலில் சேதமாக்கப்பட்டது. பின்னர் சில காலம் தொய்வுற்றிருந்த பணிகள் 1991களில் மீண்டும் உத்வேகம் பெற்றன. 1991மார்ச்சில் அடிகளாரின் பிறந்த இல்லத்தை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்பதற்காக புதியதொரு நடவடிக்கை செயற்குழுவையும் நியமித்து பணிமன்றம் செயற்பட்டது. அதற்கும் ​ெடாக்டர் பரசுராமன் தலைமை வகித்தார்.

சுவாமிகள் பிறந்த இல்லம் 1932 இல் சுவாமிகளால் இ.கி.மிசனுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தாலும் 1967 முதல் தொடர்ச்சியாக யாரின் தலையீடுமின்றி 52 வருட காலமாக பணிமன்றமே அதனை முன்னெடுத்து வருகிறது.

அதற்கமைய சுவாமி பிறந்த வீட்டை புனரமைத்த அதேவேளை அருகிலுள்ள காணியை மன்றத்தின் முயற்சியின் பேரில் அரசநிதியில் கொள்வனவு செய்து மணிமண்டபம் அமைக்கும் பணியில் இறங்கினார்கள். அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.திவ்வியநாதனின் உதவியுடன் நிதி பெறப்பட்டது.

மணிமண்டபத்திற்கான அரசநிதி:

மணிமண்டபம் நிர்மாணிப்பிற்கு முதலில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா நிதியிலிருந்து 2இலட்ச ருபாவை முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பெற்றுத் தந்தார். மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை இ.கி.மிசன் இலங்கைத் தலைவராகவிருந்த சுவாமி ஆத்மகனானந்த ஜீ 23.11.1991இல் -நட்டு வைத்தார்.

தொடர்ச்சியாக பணிமன்றத்தின் முயற்சி காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த பி.பி.தேவராஜ், சுரேஷ் பிரேமச்சந்திரன், பி.ஸ்ரீனிவாசன் , மாவை சேனாதிராஜா, நீலன் திருச்செல்வம், கோ.கருணாகரம், எம்.ஏ.மஜீட் ஆகியோர் அரசநிதியை வழங்கினர்.

எனினும் இரண்டு மாடிகளைக் கொண்ட அம்மண்டபப் பணி பூர்த்தியாகவில்லை. அதற்காக முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப்பை அணுகிய போது அவர் இரு கட்டங்களாக 43இலட்ச ருபாவை ஒதுக்கி மண்டபத்தை 1999 இல் திறந்து வைத்தார். அச்சமயம் தலைவராக வெ.ஜெயநாதன் பணியாற்றினார்.

அச்சமயம் சிலையொன்றை நிறுவினர். அதனை மணிமண்டப முன்றலில் இ.கி.மிசன் தலைவர் ஆத்மகனானந்தா ஜீ திறந்து வைத்தார். அவ்வேளையில் பணிமன்ற நிருவாக சபை உறுப்பினர் வி.ரி.சகாதேவராஜாவை ஆசிரியராகக் கொண்டு 'அடிகளார் நினைவாலய மலர் ' என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதாவது சுமார் 8 வருடங்களாக அரச பிரதிநிதிகளிடம் நிதியுதவிக்காகக் கையேந்தி ஊருக்கான இந்நினைவாலயம் அரச நிதியிலே பணிமன்றத்தால் கட்டியெழுப்பப்பட்டது. இ.கி.மிசன் அல்லது வேறு தரும ஸ்தாபனங்கள் எதுவும் இப்பணிக்கு சிறு நிதியைக் கூட வழங்க முன்வரவில்லை.

எவ்வித வெளியார் தலையீடுகளுமின்றி தொடர்ச்சியாக 52 வருடங்கள் சுதந்திரமாக சுவாமி பிறந்த இல்லத்தை பராமரித்து வந்ததன் அடிப்படையிலும் பணிமன்றம் கட்டியெழுப்பிய மணிமண்டபத்தை சுமார் 30 வருடங்களாக பராமரித்து நிருவகித்து வந்ததன் அடிப்படையிலும் பணிமன்றத்தினரின் பணிகள் பாராட்டுக்குரியவை எனலாம்.

இன்று மணிமண்டபத்தில் பண்ணிசை வகுப்புகள், பரத நாட்டிய வகுப்புகள், நாயன்மார்களின் குருபூஜைகள், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா, சுவாமி விபுலாநந்தர், சுவாமி நடராஜானாந்தர் ஆகியோரின் ஜனன, சிரார்த்த, ஜெயந்திதின நிகழ்வுகள் மற்றும் ஆன்மீகக் கூட்டங்கள், விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுவாமி விபுலாநந்த அடிகளார் விட்டுச் சென்ற பணிகளை பணிமன்றத்தினர் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா ஆகும்.

 

வி.ரி.சகாதேவராஜா
(முன்னாள் தலைவர்)
சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம், காரைதீவு


There are 2 Comments

Add new comment

Or log in with...