கரோலின் ஜூரியின் தடைகளை தாண்டிய வெற்றி | தினகரன்

கரோலின் ஜூரியின் தடைகளை தாண்டிய வெற்றி

திருமதி உலக அழகியாக(Mrs World) இலங்கையைச் சேர்ந்த ரோசி சேனநாயக்க தெரிவு செய்யப்பட்ட 35 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக திருமதி உலக அழகியாக இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி கடந்த சனிக்கிழமை திருமதி உலக அழகுராணி 2020 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் உள்ள லாஸ்வெசாஸ் நகரில் திருமதி உலக அழகியை தெரிவு செய்யும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

1984 இல் திருமதி உலக அழகிப் போட்டி முதல் முறையாக நடைபெற்ற போது இலங்கையில் இருந்து இப்போட்டிகளில் பங்குபற்றிய ரோசி சேனநாயக்க திருமதி உலக அழகி பட்டத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடித் தந்தார். ரோசி சேனநாயக்க இப்போது கொழும்பு நகரில் மேயராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் ஒரு குழந்தைக்குத் தாயான 27 வயதுடைய கரோலின் லூஸி ஆன் ஜூரி திருமதி உலக அழகியாக தெரிவாகியுள்ளார்.இவரது வெற்றியின் மூலம் 2 ஆவது முறையாக இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுக்கப்பட்டுள்ளது.

51 நாடுகளில் இருந்து திருமணமான 51 பெண்கள் இம்முறை போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இதில் இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி முதலிடத்தையும் அயர்லாந்தின் திருமதி அழகி இரண்டாவது இடத்தையும் வேர்ஜின் தீவுகளின் திருமதி அழகி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

கந்தானையில் பிறந்த கரோலின் அவரது குடும்பத்தில் உள்ள நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர். கந்தானை சென் செபஸ்டியன் பெண்கள் பாடசாலையின் பழைய மாணவியான இவர், துபாயில் உள்ள வேர்ஜின் மெகா நிறுவனத்தில் விற்பனை நிறைவேற்று அதிகாரியாக பணிபுரிகிறார்.

தனது வெற்றி தொடர்பாக பேட்டியளித்த கரோலின் “நான் வெற்றி பெற்றது ஒரு அதிசயம் போல் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். "எனக்கு எந்தவொரு நிறுவனமும் அனுசரணை வழங்கவோ ஆதரவு வழங்கவோ இல்லை. இதனால் ஆரம்பத்தில் இருந்தே நான் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருந்தது. எனினும் எனது குடும்பத்தினரின் ஆதரவும், திருமதி இலங்கை போட்டியின் போது நடுவராக இருந்த முன்னாள் திருமதி உலக அழகியான ஹொங்கொங்கை சேர்ந்த அலிகா லீ கியனெட்டாவின் உதவியும் பெரிதும் உதவின.

ஆரம்பம் முதலே அவர் எனக்கு ஆதரவும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். எனது விசா ஆவணங்கள் அமெரிக்க தூதரகத்தினால் நிராகரிக்கப்பட்டன. அதனையடுத்து அலிக்காதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நிலைமையை விளக்கி எனக்கு விசா கிடைப்பதற்கு வழி செய்தார். இல்லையேல் நான் போட்டியிலேயே பங்குபற்றியிருக்க முடியாது. அவர் வழங்கிய ஆதரவு மற்றும் ஆலோசனைக்கு நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் திருமதி உலக அழகி போட்டியை இலங்கையில் நடத்தும் உரிமையை பெற்றுள்ள சந்திமால் ஜயசிங்கவுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்" என்று கரோலின் கூறுகிறார். "திருமணமானவுடன் பெண்களின் வாழ்க்கை முடிந்து போவதில்லை. வாழ்க்கையைப் பற்றி சாதகமான நிலைப்பாட்டை எடுத்து உங்கள் மேல் நம்பிக்கை வைப்பதன் மூலமே உங்கள் கனவுகளை நனவாக்க முடியும். வெற்றிக்காக முயற்சி செய்ய வேண்டும் என்பதே இந்த அழகிப் போட்டியில் வென்றதன் மூலம் பெண்களுக்கு நான் சொல்ல வேண்டிய கருத்தாகும்" என்கிறார் கரோலின்.

கரோலின் ஜூரி ஒருபோதும் ​ெமாடலாக இருந்ததில்லை. போட்டியாளார்களிடையே ஆகக் குறைந்த அனுபவம் அவருக்குத்தான் இருந்திருக்கிறது. அத்துடன் தன்னை அழகுபடுத்திக் கொள்ள அவர் அதிகளவு பணத்தை செலவிட்டதும் இல்லை.

தன்னைப் பற்றி கரோலின் கூறி கொண்ட விடயங்கள் இவை.


Add new comment

Or log in with...