2020 பாடசாலை சீருடை முதலாம் தவணை ஆரம்பத்தில்

2020 பாடசாலை சீருடை முதலாம் தவணை ஆரம்பத்தில்-School Uniform for Academic Year 2020 on 1st Term

2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை வழங்கும் நடவடிக்கையை அடுத்த ஆண்டின் முதலாம் தவணையின் ஆரம்பத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு  பாடசாலை தவணைக் காலம் இன்னும் மூன்று நாட்களில் நிறைவடையவுள்ளது. எனினும் 2020 ஆம் ஆண்டுக்காக மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்காமை கவலைக்குரிய விடயமாகும். இதற்குரிய  முழுமையான பொறுப்பை கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என,  கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.

முன்னைய ஆட்சியின்போது பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கு பதிலாக வவுச்சர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை காரணமாக அரசாங்கத்தின் செலவு அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு  அடுத்த வருடங்களில் சீருடை துணி வழங்குவதா அல்லது வவுச்சர் வழங்குவதா என்பது தொடர்பில் இன்னும்  தீர்மானம் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக    கடந்த ஆண்டின் விலை பெறுமதிக்கு ஏற்ப 2020 ஆண்டுக்காக  சீருடை வவுச்சர்  வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட போதும் அதற்காக அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதன்படி நாளை (27) கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக அறிவுறுத்திய பின்னர், 2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை வழங்கும் நடவடிக்கையை அடுத்த ஆண்டின் முதலாம் தவணையின்  ஆரம்பத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் இதற்கான முழு பொறுப்பை தான் ஏற்பதாகவும் அவர் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...