தாயானவள் குழந்தைக்கு கற்றுத்தர வேண்டியவை

குழந்தைக்கு போஷாக்கான உணவளித்து ஆரோக்கியமாக வளர்ப்பதும் சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதும் மட்டும் ஒரு தாயின் கடமையாகி விடாது. அவையனைத்துக்கும் மேலாக இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதை ஒரு தாயானவள் தனது குழந்தைக்கு கற்றுத்தர வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு தாயும் தனக்கு நேர்ந்துள்ள, பார்த்த மற்றும் கேட்ட அனுபவங்களை குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துக்கூறி அவர்களை நல்வழியில் வழிநடத்துவது அவசியம். அதற்காக குழந்தைகளிடம் எதிர்மறையான எண்ணங்களை திணிக்கக்கூடாது. 

எமது தோற்றம், நிறம், அழகு, செயல், அறிவு, குடும்பம் அனைத்தையும் முதலில் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை தாய் முதலில் குழந்தையிடம் ஏற்படுத்த வேண்டும். நாம் முதலில் நம்மை நேசித்தால் தான் பிறரையும் பிற செயற்பாடுகளையும் நேசிக்க முடியும் என்பதை குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.

பிறருடன் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தை குழந்தைகளிடமிருந்து முற்றாக நீக்கி அவர்கள் இந்த உலகின் தனித்துவமானவர்கள் என்ற மனஉறுதிப்பாட்டை தோற்றுவிக்க வேண்டும்.

எப்போதும் நேர்மறையான சிந்தனைகளும் வார்த்தைகளும் மட்டுமே அவர்களிடத்தே உருவாகுவதை தாயானவள் உறுதிசெய்ய வேண்டும்.

வாழ்க்கையை திட்டமிட கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு உதவியாக ஒவ்வொரு நாள் வேலையையும் திட்டமிட அவர்களுக்கு சிறுவயது முதலே பழக்கப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் எதிர்கால இலட்சியத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக அவர்களுக்கு சிறந்த முன்னுதாரணங்களை காட்டி வளர்க்க வேண்டும்.

வீணான வெட்டிப் பேச்சுக்கள், பிறரை அவமானப்படுத்தல், கேலி செய்தல், துன்புறுத்தல் போன்ற பழக்கங்களை விட்டொழித்து நேரத்தை முறையாக பயன்படுத்த அவர்களை வழிநடத்த வேண்டும்.

பொய் பேசுதல், பொறாமை கொள்ளுதல் போன்ற தீய குணங்களை அறவே அவர்களிடமிருந்து நீக்கிவிடுதல், பெரியவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கும் அதேநேரம் ஏழைகளுக்கு உதவுதல் ஆகிய நற்குணங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த தாயானவள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும்.

லக்‌ஷிமி 


Add new comment

Or log in with...