இறைவார்த்தையை வாழ்வாக்குவோம் | தினகரன்


இறைவார்த்தையை வாழ்வாக்குவோம்

“நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.” என்பது திருக்குறள்.(குறள் 334)

நாள் என்பது ஒரு கால அளவு. ஒவ்வொரு நாளும் உடலில் இருந்து உயிரை வாள் கொண்டு அறுப்பது போல் வாழ்நாட்கள் குறைந்து கொண்டே வருகிறது. என்பது பொருள்.

மற்றுமொரு குறள்:

“குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு.” (குறள் 338)

உடலுடன் உயிர்க்கு உள்ள உறவு தான் இருந்த கூடு தனியே இருக்க, அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தார் போல் போன்றது.என்பது  அதன் பொருள்.

உயிர் பறவை கூட்டை விட்டுப் பறந்தது என்று வழக்கில் கூறுவது உண்டு. உயிர், கூடு விட்டுப் பறந்து வந்த இடத்தை நோக்கிச் செல்கிறது. இறைவனில் ஐக்கியமாகிறது.

இறைவனுடைய சாயலாகப் படைக்கப்பட்ட நாம் உடலும் உயிரும் பிரியும் காலத்தில் ஆன்மா உயிர்த்து வான் வீட்டில் இறைவனோடு என்றென்றும் மகிழ்வில் திளைக்கும்.

நவம்பர் 2ஆம் திகதி நீத்தார் நினைவு தினம். ஆலயத்துக்குள் போனதும் இயேசுவின் உயிர்த்த சுருபம் அழகாக அலங்கரிக்கப்பட்டுப் பீடத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்தது. இது என்ன உயிர்த்த சுருபம் வைத்திருக்கிறார்களே! இதற்கும் நமது கல்லறைத் திருவிழாவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தேன்.

மறையுரையாற்றிய அருள்பணியாளர் மிகவும் அழகாக அதற்கு விளக்கமளித்தார்.

மறை உண்மைகளில் ஒன்றான உடலின் உயிர்ப்பு பற்றி அறிந்து கொள்ள நமது திருச்சபை அழைக்கின்றது. இறைமகன் மூன்றாம் நாள் எப்படி உயிர்த்தெழுந்தாரோ அது போல நமது உடலும் உயிர்க்கும்.

அழியாத ஆன்மா அழியும் உடலுக்குள்... இந்த உலகில் பிறந்தாலும் சாவு மட்டுமே உறுதி என புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும்.

ஒரு நாள் இறப்போம். இறந்த பின் நம் உடல் உயிர் பெறும் என்பதும் உறுதி. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்போது நம் வாழ்நாளில் ஒரு நாள் குறைகிறது.

வாழும் காலத்தை அற்புதமாகச் செலவிடுவோம். நிலையான அறங்களைச் செய்வோம். அச்சமின்றி, மகிழ்வோடு வாழ்வோம். இறைவார்த்தையை வாழ்வாகக் கொள்வோம். நிலையாமை ஒன்றே நிலையானது.

நிலையான உலகிற்குச் செல்லும் வழிகளைக் கையாண்டு வாழ்ந்து இறைவனில் கலந்திடுவோம். புனிதர்களின் குழுமத்தில் நாமும் புனிதர்களாக இணைந்திடுவோம்.


Add new comment

Or log in with...