ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரச உடமை | தினகரன்


ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரச உடமை

அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட 12.5% பெறாத 33 பேர் கட்டுப்பணம் இழந்தனர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை ஆக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கு அமைய, அங்கீகரிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகளை பெற தவறும் வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடைமையாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை ஆக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 12.5சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரினால் மாத்திரமே பெற முடிந்துள்ளது.

மூன்றாமிடத்தைப் பெற்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு, 3.16% வாக்குகளே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 20 வேட்பாளர்களும், மேலும் 15 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 50ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர்.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர் 75 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர்.

அதற்கு அமைவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குளை பெறமுடியாமல் போன 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...