ரயில் மோதி இளைஞன் பலி | தினகரன்


ரயில் மோதி இளைஞன் பலி

யாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்

புகையிரதக் கடவைக்குக் குறுக்காகச் சென்ற இளைஞனொருவர் ரயிலில்  மோதுண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து  ஏற்பட்ட களேபரத்தினால் யாழ்ப்பாணம்  -காங்கேசன்துறை மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்தன.  

நேற்றுக்  காலை, காங்கேசன்துறை -_  கொழும்புக்கிடையில் சேவையிலீடுபட்டிருந்த   ரயில் யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்க முயன்ற வேளையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞனொருவர் படுகாயமடைந்து  வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்திருந்துள்ளார். 

சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட  கடுகதி ரயில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் ஸ்தம்பித்தது.  

இதே கடவையில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவை  பொதுமக்கள் காயப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகளும்  தாக்கப்பட்டுமுள்ளன.  

சம்பவ இடத்துக்கு  உடனடியாக விரைந்த ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள்  பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அத்துடன்  யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்தனர். பொலிசாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...