அரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம் | தினகரன்


அரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்

அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் அண்மையில்நடைபெற்றது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்திரன் மாநாட்டில் விஷேட பிரமுகராக கலந்து கொண்டார்.

நாடு பூராகவுள்ள சங்கத்தின் கிளைகளின் பிரதிநிதிகளும்,பெருமளவிலான சங்க உறுப்பினர்களும் யாழ் மாநாட்டில் கலந்து கொண்டனர். அரச துறைசார் சேவையாளர்கள் தொடர்பிலான பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்து இச்சங்கம் பணியாற்றி வருகிறது. தமது துறை சார்ந்த உத்தியோகத்தர்களின் பல்வகை உரிமைகள் மற்றும் வசதிகளுக்காகவும் இச்சங்கம் குரல் கொடுத்து வருகின்றது.                 

பொதுநிர்வாக, முகாமைத்துவ சேவைகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தையடுத்து அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையாக பெயர் மாற்றம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் அரச முகாமைத்துவ உதவியாளர்களின் பதவிப் பெயர் 'முகாமைத்துவ சேவை  உத்தியோகத்தர்' எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேற்படி அரச சேவை மற்றும் பதவிப் பெயர் மாற்றத்துக்கான சேவைப்  பிரமாணக் குறிப்பின் திருத்தம் தொடர்பான 2140/4இலக்க அதிவிசேட அரச வர்த்தமானப் பத்திரிகை பொது நிர்வாக அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வீ.பி.எம்.ஜே.கமகேயினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் முதல்தர பதவி உயர்வு,இரண்டாவது மொழி தேர்ச்சி தொடர்பிலான கோரிக்கைகளுக்கு சாதகமான நிலை காணப்படுவதாகவும், இரண்டாவது மொழி தேர்ச்சி விடயம் சம்பந்தமாக குறிப்பிட்ட இரண்டாவது மொழிக்கு 150மணித்தியால பயிற்சித் திட்டத்தை மாற்றீடாக செயல்படுத்துவதற்கான கோரிக்கை வெற்றியளிக்கும் நிலை காணப்படுவதாகவும் நிர்வாக குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஸீ.ஜே.விதாரன தெரிவித்தார்.

அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்க குடும்பத்தில் அங்கத்தவராக செயல்படுவதன் மூலம் தொழில்சார் பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதுடன், முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.எனவே அங்கத்துவம் பெறாத துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் அங்கத்துவம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கென  0112092777என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும்.                             

இச்சங்கத்தின் தலைவராக  என்.எம்.விஜேரத்னவும்,பிரதம செயலாளராக  எஸ்.கே.டீ.எஸ்.கனகரத்னவும் போட்டியின்றி ஏகமானதாக தெரிவாகினர். ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பதினான்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள்  வாக்களிப்பில் தெரிவு செய்யப்பட்டனர். இச்சங்கத்தின் கடந்த வருட மாநாடு திருகோணமலையில் நடைபெற்றது. மாவட்ட ரீதியில் மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 மேற்படி சேவை பெயர் மாற்றம் தொடர்பான விசேட அரச வர்த்தமானி மாகாண ஆளுநர்களின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்  சங்க மத்திய குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஸீ.ஜே.விதாரன தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்,முன்தஸிர்
பாணந்துறை மத்திய குறூப் நிருபர்   


Add new comment

Or log in with...