கோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும் | தினகரன்


கோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில் முஸ்லிம் சமூகமும் பங்குகொள்ள வேண்டுமென பேருவளை நகர சபை உப தலைவர் முனவ்வர் றபாய்தீன் தெரிவித்தார்.  

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து பேருவளை மாளிகாஹேனை பகுதியில் திங்கட் கிழமை (11) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  

பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய முனவ்வர் றபாய்தீன்,  

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அளுத்கம சம்பவமே நாட்டின் அனைத்து தேர்தல் மேடைகளிலும் பேசுபொருளாக காணப்பட்டன. இதனை நம்பி முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்த அந்த வரலாற்றை நாம் ஒருமுறை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  

  முஸ்லிம் சமூகத்திற்கு கூடுதலான சேவைகள் மஹிந்த தலைமையிலான அரசில் நடந்ததை எம்மால் மறக்க முடியாது. அதேபோல் எமது பகுதிகளின் அபிவிருத்திகளும் அந்த ஆட்சியிலே நடைபெற்றதையும் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.  

நல்லாட்சியென்று பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கத்தினால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட இன்னல்களை நினைத்துப் பாருங்கள். நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு இந்நல்லாட்சியில் தான் அதிகமான துன்பங்கள் இழைக்கப்பட்டதை மறுப்பதற்கில்லை. 

பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் பெறுமதியான சொத்துக்கள் கூட ஒரே இரவில் அழிக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருந்தார்கள்? எந்த ஆட்சியில் அரங்கேற்றப்பட்டது என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா ? பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்  வழங்கப்பட்டதா? என்பதற்கான விடையை எமது முஸ்லிம் அமைச்சர்களிடம் கேட்டுப்பாருங்கள்.  

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் இந்நல்லாட்சியில் இருந்தும் இதற்கு தீர்வு காணப்படவில்லை.

முஸ்லிம்களாகிய நாம் தொடர்ந்தும் ஆட்சியாளர்களினால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்.  நாட்டின் பெரும்பான்மை சமூகம் இன்று கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக அணிதிரண்டுள்ள நிலையில் முஸ்லிம்களாகிய நாமும் அவரின் வெற்றியில் பங்காளராகுவதே காலத்தின் தேவையாகும் என்றும் அவர் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...