ஐ.தே.க. காலத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதே வரலாறு | தினகரன்


ஐ.தே.க. காலத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதே வரலாறு

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த சகல காலக்கட்டங்களிலும்  முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் திகன, அளுத்கம, குளியாப்பிட்டிய போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்கள் போன்று  நடக்கலாம் என்ற யூகத்தை வைத்தே 'அம்பானட லெபே' என்ற கதை திரிவு படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

கண்டி, மடவளை பஸார் சிரிமல்வத்தை பகுதியில்  இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதவு தெரிவித்து (02) இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட முஸ்லிம் பிரிவு இதனை ஒழுங்கு செய்திருந்தது.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது-,

தற்போதைய அரசியல் நிலைமையில் நாம் மேலும் முன்னேறிச் செல்வதா அல்லது மீண்டும்பழைய பாதைக்கு 'யூ ட்ரேன்' போடுவதா என்று முடிவெடுக்கும் நிலையில் இருக்கி​ேறாம். கடந்த உள்ளுராட்சி தேர்தல் புள்ளி விபரங்களை எடுத்துக் கொண்டால்  கோட்டாபய ராஜபக்ஷ  போட்டியிடுகின்ற   மொட்டுச்  சின்னத்திற்கு சுமார் 50 இலட்சத்திற்கும் மேல்  வாக்குகள் கிடைத்தன.

ஐ.தே.க. ஆட்சி காலத்தில்   யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. 1983ல் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள், 13 இராணுவ வீரர் கொலையை வைத்து 300 முதல் 400 பேர்வரை மொத்தமாக நாடு முழுவதும் கொல்லப்பட்டார்கள், 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வீடு,  கடைகள் தாக்கப்பட்டன. இவ்வாறு  ஐ.தே.கவின் அடாவடித்தனங்களை  அடுக்கிக்கொண்டே போகலாம். இனியுமா நாம் ஐ.தே.கவுக்கு வாக்களிக்க வேண்டும்.

முன்னாள்  ஜனாதிபதி  மஹிந்தவின் காலத்தில் அளுத்கமவில் மட்டுமே ஒரு சம்பவம் முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தது. அது பற்றிப் பேசப்பட்ட திலந்த விதானகே இன்று ரவி கருணாநாயக்காவுடன் உள்ளார். எனவே குழப்பவாதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

திறைசேரி காலியாகியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச எப்படி சமுர்த்தியையும், ஜனசவியையும் சேர்த்து இரண்டையும் வழங்க முடியும்? பயங்கரவாதி சஹ்ரானுக்கு எதிராக 97 முறைப்பாடுகள் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காத அரசு எப்படி நல்லாட்சி புரிய முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

(அக்குறணை குறூப்  நிருபர்)  


Add new comment

Or log in with...