Thursday, March 28, 2024
Home » ரபா தாக்குதல் அச்சத்தால் காசா எல்லையில் எகிப்து தயார் நிலை

ரபா தாக்குதல் அச்சத்தால் காசா எல்லையில் எகிப்து தயார் நிலை

இஸ்ரேலுக்கு தொடர்ந்தும் அழுத்தம்

by gayan
February 17, 2024 11:28 am 0 comment

தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் படை நடவடிக்கைக்கு தயாராகி வரும் நிலையில் அதற்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு முறை எச்சரித்திருப்பதோடு, அவ்வாறான படை நடவடிக்கை ஒன்றினால் வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களை ஏற்பதற்கு எகிப்து தயாராகி வருகிறது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாக 1.5 மில்லியன் பேர் எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் சிறு நகரான ரபாவில் சிக்கியுள்ளனர். இந்த நகர் மீது வலுவான இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வியாழனன்று (15) நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதன்போது பொதுமக்களை பாதுகாக்கும் திட்டம் ஒன்று இன்றி ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறியது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, “காசாவுக்கு இராணுவம் நுழைந்தால் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள மனிதாபிமான பேரழிவு பெரும் கவலை அளிக்கிறது” என்று குறிப்பிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரபா மீது தாக்குதலை தொடுக்க வேண்டாம் என இஸ்ரேலை வலிறுயுத்தி பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன.

“நாங்கள் காசா நகரில் இருந்து தெற்குக்கு இடம்பெயர்ந்தோம்” என்று கூறிய அஹ்லம் அபூ அஸ்ஸி, “(பின்னர்) ரபாவுக்குச் செல்லும்படி அவர்கள் எமக்குக் கூறினார்கள், எனவே நாம் ரபா சென்றோம்.

போவதும் வருவதுமாக எம்மால் இருக்க முடியாது. இங்கு எமக்கு பாதுகாப்பான எந்த இடமும் இல்லை” என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

தயாராகும் எகிப்து

இதேநேரம் ரபாவில் இஸ்ரேலிய தாக்குதலால் வெளியேறும் பலஸ்தீன அகதிகளை ஏற்கும் வகையில் எகிப்து எல்லையில் பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

எனினும் அவ்வாறான தயார்படுத்தல்கள் பற்றிய செய்தியை மறுக்கும் எகிப்து காசாவில் இஸ்ரேலின் பேரழிவு நடவடிக்கைகளால் பலஸ்தீனர்கள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் நுழையும் வாய்ப்பு பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதனை எகிப்து முற்றாக நிராகரித்து வருவதோடு ஜோர்தான் போன்ற அரபு நாடுகளும் இதனை எதிரொலிக்கின்றன.

பலஸ்தீனர்களை காசாவுக்கு வெளியில் இடம்பெயரச் செய்வதை அமெரிக்காவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இவ்வாறான நெருக்கடிச் சூழலை தவிர்ப்பதற்கு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த எகிப்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் எகிப்து எல்லையில் அது தற்காலிகமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

எகிப்து பாலைவனப் பகுதியில் அடைக்கலம் பெறும் பலஸ்தீனர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் ஏற்பாடுகளை தயாரித்து வருவதாக அது தொடர்பில் அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான சினாய் அறக்கட்டளை உள்ளூர் ஒப்பந்ததர்களுடன் பேசியிருப்பதோடு, சினாய் தீபகற்பத்தில் ஏழு மீற்றர் உயரமான சுவர்களை சூழ இந்த வசதி உருவாக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது சுமார் 700,0000 பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட மற்றொரு நக்பா அல்லது பேரழிவை எகிப்து நிராகரித்து வருகிறது.

எனினும் காசாவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவது என்பது வெறும் மாயை என்று குறிப்பிட்ட ஐ.நா உதவித் தலைவர் மார்டின் கிரிபித்ஸ் ரபா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடுத்தால் பலஸ்தீனர்கள் எகிப்துக்குள் நுழைய சாத்தியம் உள்ளது என்று எச்சரித்தார்.

இதனை அவர் எகிப்தின் கெட்ட கனவு என்றும் விபரித்திருந்தார்.

மருத்துவமனை சுற்றிவளைப்பு

தெற்கு காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் நாசர் மருத்துவனையில் கடந்த வியாழக்கிழமை ஊடுருவிய இஸ்ரேலிய துருப்புகள் நேற்று அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இந்த மருத்துவமனையின் மகப்பேற்று பிரிவுக்குள் இஸ்ரேலியப் படைகள் நேற்று நுழைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய ஊடுருவலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒட்சிசன் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இதுவரை நான்கு நோயாளர்கள் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த மருத்துவமனைக்குள் பணயக்கைதிகளை வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேலிய இராணுவம் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. இந்த மருத்துவமனையைச் சூழ ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் படைகள் இடையே அண்மைய நாட்களில் உக்கிர மோதல் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

நோயாளிகள் உட்பட இந்த மருத்துவ வளாகத்தில் தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான மக்கள் அண்மைய நாட்களில் வெளியேற்றப்பட்டிருப்பதாக ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ரபா நகரின் கிழக்கில் உள்ள நசிர் பகுதியில் வீடு ஒன்றின் மீது கடந்த வியாழக்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் 112 பேர் கொல்லப்பட்டு 157 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு கூறியது. இதன்படி கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் காசா மீதான சரமாரித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணக்கை 28,775 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 68,552 பேர் காயமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.

காசாவில் தொடர்ந்து பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை சந்தித்து வரும் இஸ்ரேலிய படையின் மற்றொரு வீரர் கொல்லப்பட்டிருப்பதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. தெற்கு காசாவில் இடம்பெற்ற மோதலில் இருபது வயதான வீரர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இதன்படி காசாவில் இஸ்ரேல் தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்திருப்பதோடு 1361 வீரர்கள் காயமடைந்திருப்பதாக அந்த இராணுவம் கூறியது.

போர் நிறுத்தப் பேச்சு

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவதற்கு எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் பணிப்பாளர் பில் பர்ன் முன்னறிவித்தல் இன்றி நேற்று முன்தினம் இஸ்ரேலை சென்றடைந்தோடு அங்கு அவர் இஸ்ரேல் பிரதமர் மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுத் தலைவர் டேவிட் பர்னியை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.

சி.ஐ.ஏ. தலைவர் ஏற்கனவே மொசாட் தலைவர் மற்றும் எகிப்து, கட்டார் பிரதிநிதிகளுடன் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் தூதுக் குழு ஒன்று கடந்த புதன்கிழமை கெய்ரோவை சென்றடைந்தது.

இந்நிலையில் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கான சாத்தியம் இன்னும் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டோனியோ பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். “அதில் நாம் தீவிர கவனம் செலுத்தி இருப்பதோடு அது சாத்தியமானது என்று நான் நம்புகிறேன்” என்று அல்பேனியா சென்றிருக்கும் பிளிங்கன் கூறினார்.

இதேவேளை சர்வதேச அங்கீகாரம் பெற்ற பலஸ்தீன நாடு ஒன்றை நிராகரிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா போர் பிராந்தியம் எங்கும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக லெபனான், பாதுகாப்புச் சபையில் முறையிட்டுள்ளது. இஸ்ரேல் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிராகவே அது முறையிட்டுள்ளது.

தெற்கு லெபனானில் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்து 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குகின்றனர்.

காசா போர் வெடித்தது தொடக்கம் லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு இடையே பரஸ்பரம் மோதல் நீடித்து வரும் சூழலில் இஸ்ரேல் நடத்திய உயிர்ச்சேதம் மிக்க தாக்குதலாக இது இருந்தது.

“தமது வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் வேண்டுமென்று மற்றும் நேரடியாக நடத்திய தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதோடு ஒரு போர் குற்றமாகும்” என்று லெபனான் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT