கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளருக்கே 2ஆவது விருப்பு வாக்கை அளிப்போம்

தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ளும் பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு எமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கப் ​போவதாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். இது தொடர்பில் சிவில் சமூக குழுவினர் நேற்று முன்தினம் முதல் பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் வேட்பாளர்களின் முடிவை அறிவிக்க ஐந்து நாட்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின்

'நமது கனவு 'எனும் 8 பிரதான திட்டங்களைக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் இலங்கை மன்றக்கல்லூரியில் வெ ளியிடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர், எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயாட்சியையோ தனி பிராந்தியத்தையோ கோரவில்லை. மாறாக எமது உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு மார்க்கக் கடமைகளை சுதந்திரமாக மேற்கொண்டு வாழ இடமளிக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்தேசிய ஒருமைப்பாடும் பாதுகாப்பும்,நிலையான அபிவிருத்திக்கான பொருளாதாரக் கட்டமைப்பு, முஸ்லிம் சமூக விவகாரங்களும் பைத்துல்மால் நிதியமும், அதியுயர்சபை, கல்வி,அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டம்,நமது உரிமைகள்,புராதன,பாரம்பரிய கலை,கலாசார பண்பாடுகள்,காணிப்பிரச்சினைகள், நிர்வாக அலகு, கலவரங்கள், வன்முறைகளளால் வாழ்வைத் தொலைத்த சகலருக்கும் புனர்வாழ்வு, போன்ற முக்கிய அம்சங்கள் அதில் உள்ளடங்கியுள்ளன.

35 வருடங்களாக நாம் நேரடியாக வாக்குகளை அளித்து இந்நாட்டின் ஜனாதிபதிகளை தெரிவுசெய்துள்ளோம். 1988 இல் ரணசிங்க பிரேமதாசவை ஜனாதிபதியாக்கவும் 1994 இல் சந்திரிக்கா குமாரதுங்கவை ஜனாதிபதியாக்கவும் மர்ஹூம் அஷ்ரப் நிபந்தனையுடன் ஆதரவளித்தார். அதன் பின்னர் நாங்கள் எந்த ஜனாதிபதிகளுக்கும் நிபந்தனைகளை விதிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் 2015 ஜனாதிபதி தேர்தலில் அவரை தோற்கடித்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த ஆட்சியில் 340 சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ளன.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 97 தடவைகள் தேசிய புலனாய்வுத்துறை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவித்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...