Friday, March 29, 2024
Home » மூடப்பட்ட சகல தேயிலை தொழிற்சாலைகளும் தொழில்பயிற்சி நிலையமாக மாற்றப்பட வேண்டும்

மூடப்பட்ட சகல தேயிலை தொழிற்சாலைகளும் தொழில்பயிற்சி நிலையமாக மாற்றப்பட வேண்டும்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஷேன் பிரதீஷ் வடிவேல் சுரேஷ் கோரிக்கை

by Gayan Abeykoon
February 15, 2024 6:07 am 0 comment

மலையகத்தில் பல்வேறு இடங்களிலும் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகள் அனைத்தும் தொழில்பயிற்சி மையமாக மாற்றப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஷேன் பிரதீஷ் வடிவேல் சுரேஷ் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இளைஞர்/யுவதிகளின் சந்திப்பின் போது மேற்படி கருத்தை ஷேன் பிரதீஷ் வடிவேல் முன்வைத்தார்.

அவர் அங்கு தொடந்து கருத்துத் தெரிவிக்கையில், “இன்று மலையக இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மலையகத்தில் மூடிக்கிடக்கின்ற தேயிலைத் தொழிற்சாலைகளை திறந்து அவற்றில் தோட்ட வாரியான தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் போது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.

எனவே முதல்கட்ட நடவடிக்கையாக பதுளை மாவட்டத்தில் இருந்து இத்திட்டத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துத் தருமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரிடம் நான் கோரிக்கை முன்வைக்கின்றேன். மிக விரைவில் பதுளை மாவட்டத்திற்கான இளைஞர் மாநாடு ஒன்றை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் அமைச்சின் ஊடாக நடத்த வேண்டும். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரின் வழிநடத்தலில் பல்வேறு அமைச்சுக்களின் உதவிகளின் மூலம் இளைஞர் மாநாடு நடைபெற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் மூடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலைகளையும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கான பயிற்சி நிறுவனமாக மாற்றும் போது நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியும்” எனவும் ஷேன் பிரதீஷ் வடிவேல் சுரேஷ் கூறினார்.

இந்கழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபை உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் மலையக இளைஞர்களின் முழு பங்களிப்பும் மிக அவசியம் என்றும் அவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்” எனக் கூறினார்.

இந்நிகழ்வின் போது இளைஞர், யுவதிகளின் கருத்துரைகளும் இடம்பெற்றன.

(ஊவா சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT