6 மாதங்களின் பின் காலி தக்வா பள்ளிவாசல் தலைவர், பொருளாளருக்கு பிணை

6 மாதங்களின் பின் காலி தக்வா பள்ளிவாசல் தலைவர், பொருளாளருக்கு பிணை-Thakwa Mosque President and Treasurer Released on Bail-Galle

காலி தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷேக் அதாஉல்லாஹ் பஹ்ஜி, பொருளாளர் எம். ரிஷாத் ஆகியோர் 6 மாதங்களின் பின்னர் நேற்று (21) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும் நேற்று (21) காலி நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளவர்கள் காலி அத் தக்வா பள்ளிவாசலில் இருப்பதாகவும் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள அமைப்புகளிடமிருந்தே பள்ளிவாசலை நிர்மாணிக்க பணம் கிடைத்ததாகவும் காலி பொலிஸிற்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இங்கு தேடுதல் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் பள்ளிவாசலிலும் பள்ளிவாசல் பொருளாளரினதும் வீட்டில் இருந்து நூற்றுக்கணக்கான இறுவட்டுகள் மீட்கப்பட்டன. அவை பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜூம்ஆ பிரசங்கங்களின் இறுவட்டுகள் என பள்ளிவாசல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் பள்ளிவாசல் தலைவரும் செயலாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியிலில் வைக்கப்பட்டதோடு பிணை வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு பொலிஸார் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

சட்டபூர்வமான அமைப்பினூடாகவே பள்ளிவாசல் கட்ட பணம் கிடைத்திருப்பதாக பிரதிவாதிகள் தரப்பினால் ஆதாரபூர்வமாக நீதிமன்றத்திற்கு ஆவணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இறுவட்டுக்களை பரிசோதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இரு சந்தேகநபர்களும் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த இறுவட்டுகள் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டதோடு சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருந்தும் சந்தேகநபர்களிடம் இலஞ்சம் பெறும் நோக்கில் சில பொலிஸார் இந்த வழக்கை வேண்டுமென்று இழுத்தடித்ததாகவும் சந்தேகநபர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையிலே மேற்படி வழக்கு விசாரணை நேற்று (21) இடம்பெற்ற ​போது இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (பா)


Add new comment

Or log in with...