பயங்கரவாதிகளுடன் தொடர்பு; கொழும்பில் முக்கிய நபர் கைது | தினகரன்

பயங்கரவாதிகளுடன் தொடர்பு; கொழும்பில் முக்கிய நபர் கைது

காத்தான்குடியில் பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

ரூ 83 இலட்சம் பணம், 97 பவுண் நகைகள் மீட்பு

சொகுசு வீடு, வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத குழுவினரால் மிகவும் சூட்சுமமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை வெடிபொருட்களை காத்தான்குடியில் நேற்று பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து காத்தான்குடி கடற்கரையோர பகுதியில் மேற்கொண்ட பாரிய தேடுதல் நடவடிக்கையின் போதே மிகவும் சூட்சுமமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான வெடிபொருட்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு முக்கிய சந்தேக நபரான தெஹிவளை, கல்விகாரை வீதியைச் சேர்ந்த புஹாரி மொஹம்மட் ராபிக் என்பவரை கொம்பனிவீதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 10, மருதானை, டி. பி. ஜாயா வீதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி சந்தேக நபரின் தனிப்பட்ட அலுவலகத்தை சோதனையிட்ட பொலிஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 83 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தையும், 97 பவுண் தங்க ஆபரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

அத்துடன் மேற்படி சந்தேக நபரின் தெஹிவளை பிரதேசத்திலுள்ள சொகுசு வீடொன்றையும், வங்கிக் கணக்குகளையும் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

இதேவேளை, பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் மிகவும் நெருக்கமான உறவையும், நிதிகொடுக்கல் வாங்கல்களையும் பேணி வந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி மெத்தப் பள்ளி வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட மொஹம்மட் அலியார் என்ற சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

60 வயதுடைய இச் சந்தேகநபர் பயங்கரவாதிகளினால் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயன்படுத்திவந்த மறைவிடம் அல்லது பயிற்சி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் பங்குபற்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சஹ்ரானுடன் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்பை பேணிவந்த இச் சந்தேக நபர் பயன்படுத்தி வந்த பல்வேறு வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆயுதங்களையோ,வெடிபொருட்களையோ கண்டுபிடிக்காமல் விட்டுவைக்கப் போவதில்லையென்றும் அவற்றை எவ்வாறாவது கண்டுப்பிடித்தே தீருவோம் என்று உறுதியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று இந்த பயங்கரவாத குழுவுடன் தொடர்பு வைத்துள்ள அனைவரையும் கைது செய்யும் அதேசமயம் அவர்களுடன் தொடர்புபட்ட சகல சொத்துக்களையும் கைப்பற்றுவோம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

காத்தான்குடி மற்றும் மருதானை பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரினால் பல்வேறு கோணங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நாளுக்கு நாள் முன்னேற்றம் காணப்படுவதுடன் இந் நபர்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முப்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துவரும் தேடுதல் நடவடிக்கை தொடரந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் கடற்படை மற்றும் விமானப் படையின் பேச்சாளர்களும் கலந்துகொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்

 


Add new comment

Or log in with...