சபையில் பெரும் அமளிதுமளி; சபை நடுவில் எதிரணி கோஷம் | தினகரன்

சபையில் பெரும் அமளிதுமளி; சபை நடுவில் எதிரணி கோஷம்

விஜயகலா மகேஸ்வரனின் உரை

* செங்கோலை அபகரிக்கவும் முயற்சி
* சபை ஒன்றரை மணிநேரத்தில் ஒத்திவைப்பு
* பதவி விலக்குமாறு கூச்சல்

வடக்கு கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. அவரை அமைச்சுப் பதவியிலிருந்தும் எம்.பி பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த எதிரணியினர் சபை நடுவில் திரண்டு போராட்டம் நடத்தியதால் சபையில் பெரும் குழப்ப நிலை உருவானது.

இதனால் நேற்று பாராளுமன்றம் ஒன்றரை மணி நேரமே கூடியதோடு சபை நடவடிக்கைகள் இன்று(04) வரை ஒத்திவைக்கப்பட்டன. இதேவேளை இராஜாங்க அமைச்சரின் உரை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட சபாநாயகர் கருஜயசூரிய இது தொடர்பில் கட்சித் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளதாகவும் சபையில் அறிவித்தார்.

ஆனால் சபாநாயகரின் இந்த அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் ஒன்றிணைந்த எதிரணியும் சு.க 16 பேர் அணியும் சபை நடுவில் கோஷம் எழுப்பியவாறு சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தனர். ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, செங்கோலை பறித்ததால் சபையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சபாநாயகர் சபையை இன்று வரை ஒத்திவைத்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடியது. தினப்பணிகளை தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. வாய்மூல விடைக்காக கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்த எஸ்.எம்.மரிக்கார் எம்.பி, இராஜாங்க அமைச்சரின் உரை தொடர்பில் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் பதிலளித்ததை தொடர்ந்து ஒன்றிணைந்த சபையில் பெரும் அமளிதுமளி... (தொடர்)

எதிரணியினரும் ஐ.தே.க எம்.பிக்களும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டனர். அவரின் உரை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சபாநாயகரை கோரினர்.

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிணைந்த எதிரணியினர் ஆசனங்களில் எழுந்து நின்று தொடர்ச்சியாக கோஷமெழுப்பியதையடுத்து பிற்பகல் 1.55 முதல் 2.10 வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் போது கட்சித் தலைவர் கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்றம் மீண்டும் பிற்பகல் 2.10 மணிக்கு கூடியது.

கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டதாகவும் அவரின் உரை தொடர்பில் விசாரணை நடத்தி இரு வாராங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் சபாநாயகர் இதன் போது அறிவித்தார். ஆனால் மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி இது தொடர்பில் கேள்வி எழுப்ப ஒன்றிணைந்த எதிரணி முற்பட்ட போதும் சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை.

வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு அவர் சந்தர்ப்பம் வழங்கினார். இதனையடுத்து ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்களும் சு.க 16 பேர் அணி உறுப்பினர்கள். சபை நடுவே வந்து இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி கோசமெழுப்பினர். முதலில் பிரசன்ன ரணவீர,விமல் வீரவங்ச அடங்கலான ஓரிரு எம்.பிக்களே சபை நடுவுக்கு வந்ததோடு அவர்களை தொடர்ந்து சுமார் 28 எம்.பிக்கள் சபை நடுவுக்கு வந்தனர். இருந்தாலும் சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இந்த நிலையில் விமல் வீரவங்ச, தயாசிறி ஜயசேகர,பிரசன்ன ரணவீர, போன்றோர் சபாநாயகருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு அவரை பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்தி விசாரணை நடத்துமாறு தொடர்ச்சியாக கோரினர். இராஜாங்க அமைச்சரின் உரை தொடர்பான வீடியோக்களை பரீட்சித்த பின்னரே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அறிவித்த சபாநாயகர், எம்.பிக்களை கலைந்து செல்லுமாறு பல தடவை கோரினார்.

செங்கோலை பறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டதும் செங்கோல் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. இந் நிலையில் பிற்பகல் 2.25 மணியளவில் சபை நடவடிக்கைகள் இன்று(04) வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...