புத் 64 இல. 18

கர வருடம் சித்திரை மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஜமாதுல் ஆகிர் பிறை 04

SUNDAY MAY 08,  2011

 

பொன்னர் சங்கர்

பொன்னர் சங்கர்

திரை விமர்சனம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்றால் அது இயக்குநர் ஷங்கர்தான்.

ஆனால் அந்த ஷங்கரே இதுவரை சரித்திரத்தின் பக்கம் ஒதுங்கவில்லை. என்றாலும், சர்வசாதாரணமாக ஒரு சரித்திரக் கதையை படமாக்கியிருக்கும் தியாகராஜன் ஷங்க ரையே மிஞ்சும் அளவுக்கு தனது இயக்குநர் முகத்தை அழுத்தமாக பதிய வைத்திருக்கும் படம்.

ஒவ்வொரு காட்சிகளிலும் பிரமாண்டத்தை கையாண்டு, கலைஞர் கைவண்ணத்தில் உருவான இந்த கதையை திரைப்படம் என்னும் காவியமாக்கி தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். ஜெயராமை காதலித்ததால் தனது தந்தையின் கோபத்திற்கு ஆளான குஷ்பூ, நாட்டை விட்டே வெளியேற்றப்படுகிறார். வெளியேறும் இந்த காதல் தம்பதிகளுக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகள்தான் பொன்னர் - சங்கர். குஷ்பூ - ஜெயராம் காதலுக்கு எதிரியான பிரகாஷ்ராஜ், நெல்போலியன், விஜயகுமார் ஆகியோருக்கு இந்த குழந்தைகளும் எதிரியாக, இவர்களை கொலை செய்ய திட்டமிடு கிறார்கள்.

இதை அறியும் ராஜ்கிரண், யாருக்கும் தெரியாமல் இந்த குழந்தைகளை காப்பாற்றி போர் பயிற்சி அளித்து வளர்த்து வருகிறார். இப்படி தங்களது பெற்றோர் களுக்குக் கூட தெரியாமல் வளர்ந்து வரும் பொன்ன ரும், சங்கரும் தங்களை அழிக்க நினைத்த எதிரிகளை கொன்று தனது தாயின் சபதமான மாமன் மகள்களை கைப் பிடிப்பதுதான் கதை.

இதுபோன்ற சரித்திர கதைகளில் முக்கியத்துவம் பெறும் வர்ணனைகளை நம்பும்படியாக காட்சிப்படுத் தியிருக்கிறார் தியாகராஜன். பொன்னர் - சங்கர் என்ற வீரர்களாக பிரஷாந்த் இரட்டை வேடத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார். காதலிக்காக முதலையுடன் சண்டை போடுவதும், மலைப்பாம்பை வளைப்பதும் என அசர வைத்திருக்கிறது அவருடைய ஆளுமை.

போர்க்கால காட்சிகளிலும் பிரஷாந்தின் ஆக்ரோஷமும், தியாகராஜனின் இயக்கமும் இணைந்து நம்மை பிரமிக்க வைத்திருக்கிறது. அதுவும் கோட்டை மதில் சுவரின் மீது ஏறும் பிரஷாந்த், எதிரிகளின் அம்புகளுக்கு மறைந்து கொண்டு கோட்டையினுள் முன்னேறும் காட்சியில் அசத்தியிருக்கிறார். திவ்யா பரமேஸ்வரன், பூஜா சோப்ரா என்ற இரண்டு கதாநாயகிகள். மாடலிங்கில் இருந்து இறக்குமதியான இந்த மாடல் மங்கைகளை அரச குமாரிகளாக்கியிருக்கிறார்கள். இவர்களது முதல் படம் என்பதாலோ என்னவோ நிஜமான அரச அழகிகளைப் பார்த்தது போல நம்மை அசர வைத்திருக்கிறார்கள்.

ராக்கி அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் போர் பயிற்சியாளராக நடித்திருக்கும் ராஜ்கிரணின் தோற்றமும், முகபாவனையும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நரைத்த முடியும், நரைக்காத பலமும் என மாயவர் என்ற வேடத்தில் நம்மை மலைக்க வைத்திருக்கிறார் நாசர்.

அரசராக நடிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததுபோல இருக்கும் நெப்போலியனின் கதாபாத்திரம் வலிமை இருந்தும் சுற்றியிருக்கும் சூட்சியாளர்களின் சூட்சியால் மதியை இழந்த அரசர்களை ஞாபகப்படுத்துகிறது. பிரசாந்துக்கு தங்கையாக நடித்திருக்கும் சினேகா தனது அழகுடன் ஆக்ரோஷத்தையும் சேர்த்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

படை வீரர்களை பந்தாடும் இந்த அருக்கானியை, ஜான்சி ராணி கதாபாத்திரத்திலும் வைத்து பார்க்கலாம் போல குஷ்பூ, ஜெயராம், பொன்வண்ணன், விஜயகுமார் ஆகிய கதாபாத்திரங்கள் கதையின் உருவாக்கத்திற்கு பக்கபலமாக இருப்பதோடு சரி, மற்ற கதாபாத்திரங்களான பிரபு, ரியாஸ்கான், போஸ் வெங்கட், சீதா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் காட்சிகளை நிரப்ப பயன்பட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட படத்திற்கு இசை எந்த அளவுக்கு முக்கியம் என்பதை தியாகராஜன் உணர்ந்திருக்கிறார். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா தான் மறந்திருக்கிறார். படத்தின் டைடில் காட்டிலையே இது சரித்திரப் படம் என்பதை காட்ட வேண்டிய இளையராஜா, படம் முழுக்கவும் அதை காண்பிக்கவில்லை என்பதுதான் வருத்தம்.

பின்னணி இசையில் ராஜா பின்னியிருப்பான் என்று நினைத்தால் அதை எண்ணி வருந்த வைத்துவிட்டார். கம்பியூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை மிகவும் நுட்பமாக கையாண்டு இருக்கிறார்கள்.

இந்த துறையை கையாண்டு இருப்பவர் பிரஷாந்த். இரண்டு பிரஷாந்த் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் இந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநர். ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமாரின் ஒளிப்பதிவும் நம்மை மிரட்டியிருக்கிறது.

கமர்ஷியல் ஃபார்முலாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நம்ம தமிழ் சினிமாவின் வரலாற்றை புத்தகமாக எழுதும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட வரலாற்று கதையை படமாக்கியிருக்கும் தியாகராஜன், பிரஷாந்த் ஆகியோருக்காகவே ஒரு வரலாற்று காவியம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.