புத் 63 இல. 39

விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 17

SUNDAY SEPTEMBER 26,  2010

 
.
சங்கத் தமிழ் பெருமை மட்டும் பேசாமல்

சங்கத் தமிழ் பெருமை மட்டும் பேசாமல்
அறிவியல் தமிழ் வளர்ச்சியிலும் அக்கறை வேண்டும்

காலவகையாலும் இடவகையாலும் கொண்டு

வரப்படும் எழுத்துப் பிரிவுகள்

உலக மொழிகளில் எழுத்தின் வடிவம் காலந்தோறும் திரிபடைகின்றன. ஒரே நாட்டில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கையெழுத்துப் பாங்குகள் அமைவது இயல்பு. சீன மொழிப் பட எழுத்துகளில் காலந்தோறும் ஒரே ஒலிப்புக்குரிய வெவ்வேறு வடிவங்கள் மாறி மாறி வந்திருப்பதை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள் ளனர். சுமேரிய அரபு எழுத்துகளிலும் எகிப்திய மொழியின் பட எழுத்துகளிலும் கால வகையாலும் இட வகையாலும் திரிபுற்ற வரிவடிவங்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

சிந்துவெளி எழுத்தின் காலம் கி.மு. 3000 முதல் கி.மு. 1800 எனக் கூறினாலும் குறிப்பாக எழுத்துக்குரிய வரிவடிவம் காலந்தோறும் அல்லது இடந்தோறும் எப்படியெல்லாம் திரிபடைந்துள்ளது என்பதைச் சிந்துவெளி எழுத்து ஆராய்ச்சியாளர்கள் எவரும் வகைப்படுத்திக் காட்டவில்லை. நான் அம்முயற்சியில் ஈடுபட்டுச் சிந்துவெளி எழுத்து காலந்தோறும் பெற்ற வரிவடிவத்தினைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளேன்.

மருங்கூர் முதுமக்கள் தாழியில் “அம்மூவன்”

விழுப்புரம் மாவட்டத்து மருங்கூரில் கிடைத்த முதுமக்கள் தாழியில் முதலிரு எழுத்துகள் “அம்” (தென்பிராமி) தமிழியிலும் அடுத்த மூன்று எழுத்துகள் “மூவன்” சிந்துவெளி எழுத்திலும் அமைந்துள்ளன. இதனை அம்மூவன் எனப் படித்தல் வேண்டும்.

கீறல் (Graffiti) குறியீடுகள்

கீறல் எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளே. சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகளிலும் தமிழ்நாடு, ஈழம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளிலும் ஏராளமான கிராபிட்டி எனப்படும் கீறல் குறியீடுகள் கிடைக்கின்றன. இவற்றை வெறும் அடையாளக் குறியீடுகள் என ஒதுக்கி விட்டனர். தமிழ்நாட்டில் கொடுமணல் உள்ளிட்ட அகழ்விடங்களில் காணப்பட்ட கீறல் வெளியீடுகள் சொல் வடிவிலே இருப்பதைப் பேராசிரியர் குருமூர்த்தியும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இவற்றில் சிந்துவெளி எழுத்துகளே உள்ளன என பி.பி. லால் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கிடைத்த 300 கீறல் குறியீடுகளையும் சிந்துவெளி முத்திரைகளிலுள்ள கீறல் குறியீடுகளையும் சிந்துவெளி எழுத்தாகவே நான் படித்துக் காட்டியிருக்கிறேன். கீறல் குறியீடு என்பது தனி மாந்தரின் கையெழுத்து வேறுபாடாகவே (Varied individual handwriting form) உள்ளது என இவற்றை நான் காட்டியிருக்கிறேன். எனவே, கீறல் குறியீடுகளைச் சிந்துவெளி எழுத்து என்றே குறிப்பிட வேண்டும்.

கலப்பு எழுத்துகள்

சிந்துவெளி எழுத்திலிருந்து தென்பிராமி என்னும் தமிழ் எழுத்து உருவாக்கப்பட்ட பிறகு பழைய எழுத்து முறையை உடனே மாற்றிக்கொள்ள முடியாதவர்கள் இருவகை எழுத்துக்களையும் கலந்து எழுதிய கலப்பு எழுத்து முறை ((Mixed type) எழுத்துச் சான்றுகள் தமிழ் நாட்டில் கிடைத்துள்ளன. சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன.

சிந்துவெளி எழுத்திலிருந்தே தமிழி (பிராமி)

தோன்றியது என்பதற்கான காரணங்கள்

சிந்துவெளி எழுத்தில் இன்றைய தமிழைப் போலவே 12 உயிர்களும் 18 மெய்களுமாகிய 30 எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏனையவை கோடுகளாகவும் காலந்தோறும் மருவிய திரிபு எழுத்துகளாகவும் உள்ளன என்பதை என் நூல்களில் புலப்படுத்திக் காட்டியுள்ளேன். சிந்துவெளி அசையெழுத்து முறையை மாற்றித் தனி எழுத்து முறையாகத் தமிழ்ப் புலவர்கள் கி.மு.

1850 வாக்கில் அமைத்திருக்கிறார்கள். அதைப் பின்பற்றி ஐந்திரனார் எழுதிய ஐந்திரம் எனும் தமிழ் இலக்கணம் சிந்துவெளி எழுத்திலிருந்து பிறந்த தமிழி (பிராமி) எழுத்து அமைப்புகளுக்கு இலக்கணம் சொல்கிறது. இதனை வட இந்தியப் பாலி, பிராகிருதம், திபெத்து, தமிழ் ஆகிய நான்கு மொழிகளும் பின்பற்றியுள்ளன. பிராகிருத மொழியின் காதந்திர இலக்கணமும் பாலிமொழியின் கச்சாயண இலக்கணமும் திபெத்திய மொழியின் சன் - சு - பா இலக்கணமும் தமிழில் தொல்காப்பியமும் ஐந்திரம் எனும் தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர். வடஇந்திய மொழிகளில் சிந்துவெளி மொழியினுடைய இலக்கணக் கட்டமைப்பும் ஐந்திர இலக்கணத்தின் வாயிலாக இன்றளவும் கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. சிந்துவெளி மொழியிலுள்ள தமிழ் இலக்கணக் கட்டமைப்பும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் எழுத்து முறையாக இருந்த தமிழி இலக்கணக் கட்டமைப்பு எழுத்தமைப்புகளும் ஒன்றாக உள்ளன என்பதற்கான எடுத்துக் காட்டுகள் என் நூல்களில் தரப்பட்டுள்ளன.

இதிலிருந்து தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்தே வட இந்திய அசோகனின் பிராமி போன்ற வற்றுக்கு மூலமாக அமைந்தது என்பது உறுதிப்படுகின்றது.

தமிழ் எழுத்துகளின் தொன்மை வரலாறு

சுவசுதிக் எனப்படும் ஓங்காரக் குறியீடு சிந்துவெளிக் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து நீடிக்கிறது. இதனைத் தமிழ் எழுத்துகளாகப் பிரித்து ஓம் என்று படித்துக் காட்டியிருக்கிறேன். இந்தக் குறியீடு கி.மு. 6000 சார்ந்த மெகர்கார் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து சுவசுதிக் எனப்படும் ஓங்கார எழுத்து கி.மு. 6000 முதல் தமிழ் மொழி எழுத்தாக வழங்கியது என்று காட்டுவதற்குச் சான்றாக உள்ளது. உலகில் கி.மு. 6000 முதல் தொடர்ந்த எழுத்து வரலாறு கொண்ட மொழி தமிழ் அன்றி வேறெதுவுமில்லை. எனவே, தமிழ் எழுத்தின் தொடர்ச்சி இன்றுவரை 8000 ஆண்டு காலமாகத் தொடந்து வந்திருக்கிறது. இதனை மேலும் உறுதிப்படுத்த தமிழ் எழுத்துக்களின் வரலாறு தனி நூலாக எழுதப்பட வேண்டும்.

சிந்துவெளி எழுத்து தமிழ் எழுத்தே என்பதையும், சிந்துவெளி எழுத்திலிருந்தே தமிழி (தென் பிராமி) எழுத்து ஐந்திரனார் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதையும் தென் பிராமி எனும் தமிழி எழுத்திலிருந்தே பாலி மொழிக்காக அசோகனின் பிராமி தோன்றியது என்பதையும் நான் எழுதியுள்ள ஆய்வு நூல்களில் தெளிவுபடுத்தியுள்ளேன். இவ்வாறு தன் ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார் பேராசிரியர் இரா. மதிவாணன்

செம்மொழி மாநாடு நிறைவுற்ற பின்னர் ஜூன் 29ம் திகதி கலைஞர் கருணாநிதி ஊடகவியலாளர்க ளுக்கு பேட்டியளித்தார். அம்மாநாட்டில் நிகழ்ந்தவற்றை பட்டியலிட்டுச் சொன்னார். வாசகர்களின் கவனத்துக்கு அவற்றைக் கொண்டு வருவது பிரயோசனமாக இருக்கும். இவை அதிகாரபூர்வமான தகவல்கள்.

மாநாடு நடைபெற்ற ஐந்து தினங்களில் மொத்தமாக நான்கு லட்சம் பேருக்கு ரூ. 30 விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் 92 ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மொத்தம் 1,642 அறைகளில் அவர்கள் தங்கியிருந்தனர். இந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 2,065. மாநாட்டுக்கு 68 கோடியே 52 லட்சம் செலவு செய்யப்பட்டது. மாநாட்டின் பொருட்டு நகர் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு 243 கோடி செலவு செய்யப்பட்டது.

23ம் திகதி மாநாடு துவக்க விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். மாலை யில் இனியவை 40 ஊர்வலத்தை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 23,24ம் திகதிகளில் கருத்தரங்கம், கவியரங்கத்தில் சராசரியாக 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.

பொது கண்காட்சி, இணைய மாநாட்டை தினமும் 13 மணி நேரம் காத்திருந்து சராசரியாக 40 ஆயிரம் பேர் என கண்காட்சிக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். மாநாட்டு சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மாநாட்டில் கலந்துகொண்ட கட்டுரையாளர் களுக்கு 3200 மலர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2300 விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இணையத்தள மாநாட்டில் மொத்தம் 110 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கலந்துகொண்ட ஆய்வறிஞர்கள் 300 பேர். தமிழ் ஆய்வரங்கில் கலந்துகொண்ட அறிஞர்கள் 200 பேர் தினம் ஒரு முகப்பரங்கு வீதம் நாள் முகப்பரங்கில் 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இணைய மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட சிறப்புமலரில் 130 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

24 முதல் 27ம் திகதி வரை நடந்த ஆய்வரங்கின் மொத்த அமர்வுகள் 239. மொத்த கட்டுரைகள் 913, மொத்த பொருண்மைகள் 55, வருகை தந்த வெளிநாட்டினர் 840 பேர், கலந்துகொண்ட நாடுகள் 50, கட்டுரை தாக்கல் செய்தவர்கள் 150 பேர்.

இலங்கை 38, மலேசியா 23, சிங்கப்பூர் 22, அமெரிக்கா 14, கனடா 11, இங்கிலாந்து 9, அவுஸ்திரேலியா 4, பிரான்ஸ், மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் தலா 3, ஜப்பான், நெதர்லாந்து நாடுகளில் தலா 2, ஜெர்மனி, கிரீஸ், ஹொங்கொங், இத்தாலி, நியூசிலாந்து, ஓமான், ரஷ்யா, தென்கொரியா, சீனா, செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவர் என ஆய்வறிஞர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு கலைஞர் புள்ளிவிவரங்களைத் தந்திருந்தார். ஜூன் 27ம் திகதி நிறைவு நிகழ்வின்போதும் கலைஞர் பொருள் பொதிந்த உரையொன்றை ஆற்றினார்.

உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்புக்குரியது தமிழ் மொழி. இன்று உலக மொழியாகத் திகழும், ஆங்கில மொழியின் முதல் எழுத்து வடிவம், கி.பி. 7வது நூற்றாண்டைச் சார்ந்தது.

பிரெஞ்சு மொழியின் முதல் எழுத்து வடிவம், 9வது நூறாண்டிலும், ரஷ்ய மொழியின் பழமையான எழுத்து வடிவம், பத்தாவது நூற்றாண்டிலும் கண்டறியப்பட்டன. லத்தீன் மொழியில் இருந்து உருவான இத்தாலிய மொழி, பத்தாவது நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, முதல் எழுத்து ஆவணமாக தொல்காப்பியம் நூலைப் பெற்று, இலக்கண வரம்புகொண்டு வாழ்ந்த தமிழ் மொழி இன்று வரை வாழும் மொழியாகவும், வளரும் மொழியாகவும், வரலாற்று மொழியாகவும் திகழ்கிறது.

காதல், வீரம் இரண்டும் தமிழர்களுக்கு எத்தகைய உணர்வுபூர்வமான பெருமை அளித்தது என்பதற்கு சங்கப்பாடலில் பல காட்சிகள் உள்ளன.

ஒரு குழந்தை இறந்தால் கூட, விழுப்புண் படாமல் இறந்துவிட்டதே என வருந்தி வீரச்சின்னம் விளங்க, அதை வாளால் பிளந்து புதைத்து வீரத்தைப் போற்றும் நாடு தமிழ்நாடு என்று புறநானூற்று பாடல் கூறுகிறது. வள்ளுவர் கூறியபடி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமதர்ம சமுதாய நெறியைப் போற்றி பின்பற்றிய நாடு, தமிழ்நாடாகும்.

கி.பி. இரண்டு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள், தமிழர்களோடு நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பழைய ரோம் நாணயங்கள், தமிழகக் கடற்கரைகளில் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மற்ற இடங்களில் கிடைத்தவற்றை விட ரோமானிய நாணயங்கள் இந்த கொங்கு நாட்டில்தான் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இதிலிருந்து கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து மூன்று, நான்கு நூற்றாண்டுகள் ரோமர்கள், கொங்கு பகுதியுடன் வணிகம் செய்து வந்தனர் என்பதை அறியலாம்.

கிழக்கே சீனா முதலிய பல நாடுகளுடனும் ஜாவா, சுமத்ரா, மலேசியா முதலிய தீவுகளுடனும், தமிழகம் வணிகம் காரணமாகத் தொடர்பு கொண்டிருந்தது. இரண்டாம் நூற்றாண்டளவில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, தமிழரின் பொறியியல் கலைத்திறனுக்கு சான்று. ஆறாம் நூற்றாண்டு கால மாமல்லபுரச் சிற்பங்கள், தமிழரின் அரிய சிற்பக் கலைச் சின்னங்களாக திகழ்கின்றன.

அழகோவியமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோவில், பத்தாம் நூற்றாண்டில், கட்டடக் கலையில் தமிழகம் பெற்றிருந்த ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது. தமிழ்ச் சமுதாயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் முத்திரைக் குறியீடாக விளங்குவது தமிழ்மொழி.

நம் மொழி, செம்மொழியாகத் தகுதி பெறுவதற்கு இலக்கியச் செல்வங்களைப் படைத்த சங்ககால புலவர்கள், சான்றோர்கள் அனைவரையும் ஆதரித்துத் தமிழ் வளர்த்த வேந்தர்களை போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு தனது உரையில் தெரிவித்திருந்த கலைஞர் கருணாநிதி, தன் உரையின் இறுதியில் எதிர்காலத்தில் நம் தமிழ் அறிவியல் தமிழாகவும் விளங்க வேண்டும் என்பதைத் தொட்டுக் காட்டினார். உண்மையைச் சொன்னால் இந்தத் தமிழ் ஆய்வு மாநாடு ஆற்றவேண்டிய முதல் காரியமும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். இதைக் கலைஞர்,

“அன்னைத் தமிழ் மொழியை, எதிர்வரும் காலத்தில், நாளை மலரும் அறிவியல் புதுமைகளுக்கேற்ப வளர்த்துக் கட்டிக் காப்போம். வருங்காலத் தலைமுறைக்கு வற்றாத செல்வமாய், வழங்கிக் களிப்போம் என இந்த மாநாட்டில் சபதமேற்போம்” என்று அறிவித்தார்.

அடுத்த வாரம் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்குக்குச் செல்வோம். அதற்கு முன்னர் இலக்கிய மாதம் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் இம்மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

செம்மொழி மாநாட்டு பிரதான அரங்குக்கு எதிரே சி.ஐ.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமான நூல் கண்காட்சி இடம்பெற்றிருந்தது. இக்கண்காட்சியில் 140 காட்சியகங்கள் இடம்பெற்றிருந்தன. 120 பதிப்பகங்கள் இங்கே காட்சியகங்களை அமைத்திருந்தன. இவற்றில் ஒருகோடி புத்தகங்கள் விற்பனைக்கு விடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கப் பொருளாளர் ஷாஜஹான் இதுபற்றிக் கூறியபோது, ஒரு ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபா வரை விலையுள்ள நூல்கள் இங்கு விறபனைக்கு இருப்பதாகவும் தினசரி ஒரு லட்சம் பேர் கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டு நூல்களை வாங்கிச் செல்வதாகவும் கூறியதோடு தமது இலக்கு மூன்று கோடி ரூபா வருமானம் என்றும் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.