புத் 63 இல. 10

விரோதி வருடம் மாசி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 20

SUNDAY MARCH 07, 2010

 
.

தமிழ் வாக்காளர்களுக்கு சாதகமாக இருக்குமா?

பதுளை மாவட்டத்தில் களமிறங்கியுள்ள 47 தமிழ் வேட்பாளர்கள்:

தமிழ் வாக்காளர்களுக்கு சாதகமாக இருக்குமா?

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் அநாதையாகி விடலாம். எனவே மக்களின் நலன்கருதி தமிழ் அரசியல் தலைமைகள் வாக்குகள் சிதறடிக்கப்படாத வகையில் சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

பதுளை மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர் தொகை 5,74,814 பேராகும். இவர்களில் ஒரு இலட்சத்து இருபத்தேழாயிரத்து பதினாறு பேர் தமிழ் வாக்காளர்களாவர். இவ்வாக்காளர்களில் சுமார் 13 ஆயிரம் பேருக்கு, வாக்களிப்பதற்கு அடையாள அட்டைகள் இல்லாததால், வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக ஐ. தே. க. பட்டியலில் போட்டியிட்ட இரு தமிழர்கள் வெற்றிபெற்று, நாடாளுமன்றம் சென்றனர். இவ்விருவரும், ஆளும் கட்சியில் இணைந்ததினால், இரு பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. பிரதி சுகாதார அமைச்சராக வடிவேல் சுரேசும், பிரதி கல்வி அமைச்சராக எம். சச்சிதானந்தனும் இருந்துவந்தனர். இவ்விருவரில், பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். ஐ. ம. சு. கூட்டமைப்பில், வடிவேல் சுரேஷ் நேரடி வேட்பாளராகவே களமிறங்கியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கூட்டமைப்பு அரசாங்கத்தில் பிரதிக் கல்வி அமைச்சராக இருந்த எம். சச்சிதானந்தன், ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து அமைச்சுப் பதவியைத் துறந்து ஐ. தே. கட்சியில் இணைந்து கொண்டார்.

நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்ற முறை போலவே, ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் களம் இறங்குகின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புப் பட்டியலில் மூன்று தமிழர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கூட்டமைப்பின் நேரடி வேட்பாளர் வடிவேல் சுரேஷ், இ. தொ. கா. சார்பில் டி. வி. சென்னன், சுவாமிநாதன் சந்திரமோகன் ஆகிய மூவர் மட்டுமே, கூட்டமைப்பின் தமிழ் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

வடிவேல் சுரேஷ் முன்னாள் பிரதி சுகாதார அமைச்சராக இருந்தவர். பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பசறைத் தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

டி. வி. சென்னன் :-

முன்னாள் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவராகவும் இருந்தவர். கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ. தே. கட்சி பட்டியலில் போட்டியிட்டு தோல்வி கண்ட இவர், இ. தொ. கா.வில் இணைந்து அவ் அமைப்பின் ஆலோசகராகவும் இருந்து வருகின்றார்.

சுவாமிநாதன் சந்திர மோகன் :-

பதுளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயராக இருந்தவர். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊவா மாகாண பிரதம இணைப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

கூட்டமைப்பு பட்டியலிலுள்ள இம் மூன்று தமிழர்களும் புரிந்துணர்வுகளுடன் செயல்படுவார்களேயானால், மூவரும் வெற்றி பெறக்கூடிய ஆரோக்கியமான சூழல் நிலவுகின்றது.

ஆனால், இவர்களிடையே புரிந்துணர்வுகள் ஏற்படுமாவென்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கூட்டமைப்பின் நேரடி வேட்பாளராக இருந்து வரும் வடிவேல் சுரேசிற்கு பெருமளவிலான தமிழ் வாக்குகளும், தொகுதி அமைப்பாளரென்ற ரீதியில் கணிசமான சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தமிழர்கள் மூவர் போட்டியிடுகின்றனர். நேரடி வேட்பாளர்களாக க. வேலாயுதம் எம். சச்சிதானந்தன், எப். எம். ரஸாக் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். க. வேலாயுதம், தற்போது ஊவா மாகாண சபை உறுப்பினராக இருந்து வருகின்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர் சிறு எண்ணிக்கையிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தவர்.

மலையக மக்கள் முன்னணி, பதுளை மாவட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றது. இதன் தலைமை வேட்பாளராக ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்த்குமார் களம் இறங்கியுள்ளார். இம் முன்னணி பதுளை மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் பட்டியலில் 11 பேரை உள்ளடக்குகின்றது. கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலிலும், இம் முன்னணி தனித்து போட்டியிட்டு ஒன்பதாயிரத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று, ஊவா மாகாண சபை உறுப்பினராக அ. அரவிந்த்குமார் தெரிவானார்.

அரவிந்த் குமாரின் மகன் சுராஜும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியும் சரத் பொன்சேகாவும் இணைந்து ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் பொன்னுசாமி பூமிநாதன், கிட்ணன் செல்வராஜ், இராசையா ராமசாமி ஆகிய தமிழ் வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இரண்டு தமிழ் சுயேச்சைக் குழுக்களும் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

இரு குழுக்களிலும் 22 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பதுளை மாவட்டத்தில் மொத்தமாக 47 தமிழ் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதால் தமிழ் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றன.

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதுடன், கடந்த பொதுத் தேர்தலை விட இம்முறை நடைபெறவுள்ள பொதுத்rதேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று பேர் நாடாளுமன்றத்திற்கு எம்மவர்கள் செல்லும் பட்சத்தில், அது பெரும் சாதனையாகவே கணிக்கப்படும்.

எம்மவர்களுக்கு வாக்களிக்கத் தெரியாதென்று எவ்வகையிலும் கூறமுடியாது. எமது மக்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பது வெகு சொற்பமே என்பதும் தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு எமது மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.