இலங்கையில் தற்பொழுது சமாதான சூழல் காணப்படும் நிலையில் பவ்வேறுபட்ட விளையாட்டுப்
போட்டிகள் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதியில் பல்வேறு தரப்பினரால்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் விளையாட்டுத் துறையில்
பிரகாசித்த சிலரும் தங்களுக்கு யுத்தம் விளையாட்டுக்கு தடங்கலாக இருந்தமையை
சுட்டிக்காட்டாமலும் இருக்கத் தவறவில்லை.
எது எப்படியோ வடக்கு, கிழக்குப் பகுதியில் விளையாட்டுத்துறையில் பின் தங்கிய
நிலையில் காணப்பட்ட விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க பல்வேறு தரப்பினர்
முன்வந்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் தற்போது மரதன், சைக்கிளோட்டம், கிரிக்கெட், உதைபந்தாட்டம்
என்பனவற்றை தேசிய ரீதியாக நடத்த தாருண்யட ஹெட்ட அமைப்பு, டயலொக் நிறுவனம்,
சைக்கிளோட்ட சங்கம், இலங்கை மவுண்டன் சைக்கிள் சங்கம் என்பன இப்பகுதியில் விளையாட்டு
நிகழ்வுகளை நடத்த முன் வந்திருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள விளையாட்டு வீரர்கள் தாங்கள் எதிர்காலத்தில்
விளையாட்டுத்துறையில் சாதிக்காமல் போய் விடுவோம் என்று அச்சப்பட்டனர். அது தற்போது
முடிவுக்கு வந்துவிட்டது.
இலைமறைகாயாக இருந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச ரீதியாக புகழ்பெறுவது அனைவரும்
பாராட்டத்தக்க விடயமாகும்.