சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகத் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு
வாக்களிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம்.
திருகோணமலையில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ர்வதேச சமூகம் எதை அங்கீகரிக்க வேண்டும் என்பது அவருக்குத் தான் வெளிச்சம். ஆனால்
இது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கதை. சர்வதேச சமூகம் உதவிக்கு வரும் என்றும்
அதன் பின் எல்லாம் சாதகமாக முடிந்துவிடும் என்றும் தலைவர்கள் தமிழ் மக்களைக்
காலங்காலமாக ஏமாற்றி வருகின்றார்கள்.
மக்கள் இவர்களின் பேச்சுகளை நம்பிச் சர்வதேச சமூகம் சாதிக்கும் என்று எதிர்பார்த்து
ஏமாந்ததுதான் மிச்சம்.
இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் சர்வதேச சமூகம் ஒரு கானல் நீர்.
இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாகச் சர்வதேச சமூகத்துக்கு விண்ணப்பிப்பதும்
விளக்கம் அளிப்பதும் இன்று நேற்றைய நிகழ்வுகளல்ல. மிக நீண்ட காலமாக நடந்து
வருகின்றது. பிரச்சினை பற்றிய ‘புரிகையை ஏற்படுத்துவதற்காக’ தலைவர்கள் பல தடவைகள்
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்கள். இலங்கையில் வெளிநாட்டுத் தூதுவர்களைச்
சந்தித்து விளக்கங்கள் அளித்தார்கள். எதுவும் நடக்கவில்லையே.
எங்கள் பிரச்சினையைச் சர்வதேச சமூகம் தீர்த்து வைக்கும் என்று நம்புவதைப் போன்ற
முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. வெளிநாடுகளுக்கு எங்கள் நலனில் அக்கறை
இல்லை. தங்கள் நலனுக்கு எங்கள் பிரச்சினையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதிலேயே
அக்கறை.
அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும். பிறர் பெற்றுத் தர முடியாது.
இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமைப் பிரச்சினையும் வாக்குரிமைப் பிரச்சினையும்
தேசிய இனப் பிரச்சினையைப் போலவே பழமையானவை. இதைப் போலவே பாரதூரமானவையும் கூட.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அம்மக்களின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குக்
காவடி தூக்கவில்லை. சர்வதேச சமூகம் பிரச்சினையைத் தீர்க்கும் என்று சும்மா
இருக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு
காணலாம் என்பதை விளங்கிக் கொண்ட மலையகத் தலைமை நேரடியாக அரசாங்கத்துடன் பேசியது.
கட்டங்கட்டமாக மக்களுக்குப் பிரசாவுரிமையைப் பெற்றுக் கொடுத்தது. இன்று மலையக மக்கள்
எல்லோரும் பிரசாவுரிமையை அனுபவிக்கின்றார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
தலைவர்கள் கற்கின்றார்களோ என்னவோ, மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். எங்கள்
பிரச்சினையைச் சர்வதேச சமூகம் தீர்த்து வைக்கும் என்று நம்புவது இலவம் பழத்துக்குக்
காத்துக் கிடந்த கிளியின் கதை போலாகிவிடும்.
சர்வதேச சமூகம் தீர்த்துவைக்கும் என்று அன்று கூறியதையே இன்றும் கூறுகின்றார்கள்.
எதிர்காலத்திலும் இதையே கூறுவார்கள். உள்ளூர் மட்டத்தில் பிரச்சினைக்குத் தீர்வு
காணக் கூடியவர்களை இனங்காண வேண்டிய காலம் வந்து விட்டது.