பாடலொன்றை இயற்றியவரைப் போன்றே பாடகருக்கும் அதில் முக்கிய பங்குண்டு
பாடலொன்றை இயற்றியவரைப் போன்றே பாடகருக்கும் அதில் முக்கிய பங்குண்டு
விளக்குகிறார் வெலிகாமம் தெளபீக்
நாகூர் ஹனீபா பற்றிய சிந்தனைகள் பிரஸ்தாபிக்கப்படுவது இன்று நேற்றல்ல நீண்ட காலமாக
இடம்பெற்றே வந்தன.
இருந்தாலும் அண்மையில் தினகரனில் பிரசுரமாகியிருந்த ஜனாப் எஸ். ஐ. நாகூர்கனி
அவர்களது கட்டுரை வாசகர் சிந்தனையை துண்டுவதாக அமைந்திருந்தது.
இதை அடுத்து ஜனாப் மானா மக்கீன் எழுதியிருந்தது வேறு கருத்திலாகும். அதைத் தொடர்ந்து
ஜனாப் எஸ். சஹாப்தீன் நாகூர்கனி யின் கருத்தை சரி கண்டிருந்தார். பதிலாக கவிஞர்
ஜனாப் இக்பால் ஒரு படி மேலே வந்து கலை இலக்கியம் தெரியாதவராக ஒரு கட்டுரையாளரை
சாடியிருந்தமை வருந்தத்தக்க விடயமாகும்.
மொத்தத்தில் மூன்று கட்டுரையாளர்களும், அவ்வப்போது நாகூர் ஹனீபாவை நேரில் சந்தித்து
கதைத்தவர்களாக இருக்கலாம் என்பதே எனது ஊகம். எவ்வாறாயினும் கட்டுரைகளில் எதிர்க்
கருத்தைப் பார்க்கின்ற பொழுது பாடகர் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியே
வெளிப்படையாகத் தெரிகிறது. கட்சி பேதமும், கொள்கை பேதமுமே தெரிகிறது.
நாகூர் ஹனீபா பாடல்கள் என்று கூறுவதை கசப்பாக எடுத்துக்கொள்ளும் மூத்த
இலக்கியவாதிகள் பற்றி ஓரளவாக நான் அறிந்து வைத்திருக்கிறேன்.
நாகூர் ஹனிபா, பாடல்கள் கருத்துள்ளவை, ஜனரஞ்சகமானவை என்று சொன்னால் இத்தகைய
இலக்கியவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை.
ஆனால் மக்கள் மனதில் நாகூர் ஹனிபா பாடல்கள் என்றோ பிரபல்யமாகிவிட்டன.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, தினகரன் வார மஞ்சரியில் வாசகர் பக்கத்தில் சிறு
கட்டுரையாக கருத்து தெரிவித்து நாகூர் ஹனிபா, பற்றி ஒரு ஆக்கம் நான் எழுதிய போது அது
காலதாமதமாகித்தான் பிரசுரமானது.
அதன் பிறகு பெரிய கட்டுரை ஒன்றை வாரமஞ்சரிக்கு அனுப்பியிருந்தேன். அது பிரசுரமாகாமல்
வீணாய்ப்போனது. பழைய கதை, பெரும்பாலானவர்களுக்கு நாகூர் ஹனிபாவின் குரல் தேனாகத்தான்
இருக்கிறது.
சில பேர்களுக்கு அது நச்சரிப்பாக உள்ளது.
ஒரு பாடலை இயற்றியதற்காக கவிஞருக்கு சொந்தமிருக்கலாம். ஆனால் அதை அறிமுகப்படுத்தி,
ஜனரஞ்சகம் செய்பவருக்கும் அது சொந்தமானது என்றே கொள்ள வேண்டும்.
கோழி முட்டை இடுகிறது. அவற்றில் சிறு பகுதியை சொந்தம் கொண்டாடி, குஞ்சு பொரித்து
இனத்தை பெருக்குகிறது. பெரும்பகுதிக்கு சொந்தக்காரன் மனிதனே. மனிதன் தான்
சாப்பிடுகிறான்.
கவிஞர்களின் திறமை வெளிப்படுவதற்கு பாடகர் துணை இன்றியமையாதது.
‘எங்கே நான் சென்று தேடுவேன்’ என்ற நாகூர் ஹனிபா பாடிய இஸ்லாமிய கீதத்தை, மற்றொரு
இலக்கியவாதி ஒருவரும், முஸ்லிம் சேவையில் பாடினாலும் பாடினார். நாகூர் ஹனீபா என்றால்
அவர் ஒரு நல்ல பாடகரா என்று கேட்கும் இந்த இலக்கியவாதி, தான் பாடுவதையாவது மக்கள்
கேட்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ!
பாடல் மக்கள் மனதில் இடம்பெறவேண்டுமே! கவிஞர் என்ன செய்வார்?
‘ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்’
‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’
இரண்டும் மதுரை எஸ். ஹுஸைன்தீன் பாடியவை. அப்போது இவை ஓரளவு ஜனரஞ்சகமாகியிருந்தன.
வீடுகள் தோறும் அதை ஒலிப்பதிவு செய்து, இளையோர் முதல் முதியோர் வரை கேட்க ஆவல்
கொள்ளும் ஒரு நிலை பிற்காலத்தில் ஏற்பட்டது. ஏன்? அதைமெருகூட்டிப் பாடினார் நாகூர்
ஹனீபா.
பெரியார் பிலால் பாடலென்றால் நின்று ரசிக்காதார் யார் உளர்? இந்த நிலைக்கு காரணம்
கவிஞர்கள் அல்ல. பாடகர்தான். ஒரு கவிஞரின் பாடலை இருவர் பாடிய சந்தர்ப்பத்தைத்தான்
மேலே சொன்னேன். இங்கே நாகூர் ஹனிபாவின் திறமை ஒரு தனித்திறமை என்பது புலப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு விதமான ஆற்றல்களை இறைவன் வழங்கியுள்ளான். அவற்றை
வெளிப்படுத்துவது அவரவர் பொறுப்பு. அதுவே அவர்களுக்கு சிறப்பு.
எனவே நாகூர் ஹனிபா பாடல்கள் என்றால் என்ன? கவிஞர்களின் பாடல்கள், என்றால் என்ன?
பொதுப்படையாக நோக்கி ஆராயுங்கள்.
பேராசிரியர் அப்துல் கபூர், நாகூர் சலீம், புலவர் ஆப்தீன் பாடலாசிரியர் வரிசையில்
இருந்தாலும், பாடகர் ஒருவரே! நாகூர் ஹனிபா பாடல்களில், ‘ஷிர்க்’ கானவைகள் உள்ளன.
இறைதுதி உள்ளன, ஸலவாத் பாடல்கள் உள்ளன. பிரார்த்தனைகள் உள்ளன. பொன்மொழிப் பாடல்கள்
உள்ளன. கலிமாப் பாடல்கள் உள்ளன. பெண்களுக்கான பாடல், சிறுவர் பாடல், தூது விடும்
பாடல் என்று பலவாறாக வகுத்து ஆய்வு செய்யலாம். பல கவிஞர்கள் இயற்றியிருக்கலாம்.
நாகூர் ஹனிபா பாடல்கள் என்று கூறும் போது ஆய்வுக்கு உட்படுத்துவது இலகுவானதே!
இன்று கலை ரசனை இல்லாத தீன் தாரிகள் இஸ்லாமிய கீதங்களுக்கு எதிராக கருத்துக்களை கூறி
வந்தாலும், சினிமாப் பாடல்களில் இளம் சமூகத்தினர் கொண்டுள்ள மோகத்தைக் கண்டு
கொள்ளாமல் இருப்பதும் வேடிக்கை.
நாகூர் ஹனிபா பாடல்களில் நல்ல கருத்துக்கள் தாராளமாக உள்ளன. அவரது குரல் வளம் ஒரு
அருட்கொடை. அவ்வாறே மற்றும் நல்ல இஸ்லாமிய கீதங்களை அறிமுகம் செய்த காயல் ஏ. ஆர்.
ஷேக் முஹம்மத், மலேசியா தாலிப், மதுரை எஸ். ஹுஸைன்தீன், பி. கே. கலிபுள்ளாஹ், எம்.
எம். யூசுப், அப்துல் காதர் ஆகியோரும் பழம்பெரும் பாடகர்களே!
நாகூர் ஹனீபா பாடல்கள் போல மொஹிதீன் பேக் பாடல்களும் உள்ளன.
மொஹிதீன் பேக் பற்றிய ஒரு கதை கூறப்படுகிறது. அது கட்டுக் கதையே! உண்மைக் கதையோ
தெரியாது.
என்றாலும் அவரை புகழடையச் செய்து வாழ வைத்தது புத்தம் சரணம் கச்சாமி பாடலாக
இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
கவிஞர் பாடல் இயற்றி காத்திருந்தார். மொஹிதீன் பேக் உயிரூட்டினார். அதுதான் அவர்
திறமை. திறமைதான் ரி!zதீ கொடுத்தது.