புத் 63 இல. 10

விரோதி வருடம் மாசி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 20

SUNDAY MARCH 07, 2010

 
.
யாழ்ப்பாணத்தின் வராலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள்

10

யாழ்ப்பாணத்தின் வராலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள்

போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிறிஸ்தவ சமயம் பரவலாயிற்று. போர்த்துக்கேயர் கத்தோலிக்க சமயத்தை இங்கு பரப்பினர். தேவாலயங்களை அமைத்தனர். அதன் பின்னர் ஒல்லாந்தர் புரட்ஸ்தாந்து சமயத்தைப் பரப்பினர். கிறிஸ்தவ சமயத்தின் பல்வேறு பிரிவுகளும் பரவியுள்ளன.

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் குறூற் கேர்க் அல்லது குறூஸ் அல்லது ஒல்லாந்த தேவாலயம் அமைந்திருந்தது. இதனை 1730 அளவில் கட்டிமுடித்தனர். இது ஒரு சதுரங்கவடிவமான மால்தஸ் சிலுவை வடிவம் கொண்டதாகும். அண்மைய யுத்தத்தில் முற்றாக அழிவுற்றுள்ளது. இது 1730 இல் கட்டப்பட்டதாயினும் இத்தேவாலயத்தின் நிலப்பகுதியில் காணப்பட்ட சமாதிகள் 1666ம் ஆண்டுக்குரியவை. இச்சமாதிகள் அண்மைக்கால யுத்தத்தில் சிதைந்த போது அவை அகற்றப்பட்டு வட்டுக்கோட்டை தேவாலயத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

புனித தோமையார் ஆலயம்

சென் மார்டின் செமனரி யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ளது. 1874 ல் சென் மார்டின் ரூர்ஜ் என்ற பெயரோடு இருந்தது. 1878 இல் 21000 ரூபாவுக்கு மூர் கார்டின் வாங்கிய பின்னர் இன்றைய பெயரைப் பெற்றது. இச்செமனரியின் புதிய கட்டடம் 1889 இல் நிறைவு பெற்றது.

யாழ்ப்பாணத்தில் புனித மரியான் தேவாலயம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் கதீட்டரல் முக்கியமான தேவாலயமாகும் 1789 இல் இதற்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. அதன் பிரமாண்ட அமைப்பு வியத்தற்குரியது. கோவாவைச் சேர்ந்த பாதர் லியனார்டோ றொபேறியோ முதலாவது குருவாகவிருந்தார். 1861 ல் அத்தேவாலயத்தில் இரண்டு மணிகள் இருந்தன. அவற்றில் ஒன்று மடுமாதா ஆலயத்துக்கு வழங்கப்பட்டது.

நல்லூர் முத்திரைச் சந்தியில் புனித யாகப்பர் தேவாலயம் அமைந்துள்ளது. இது 1827ல் கட்டப்பட்டது. இவ்விடத்தில் முன்னர் இருந்த கந்தசாமி கோயிலைப் போர்த்துக்கேயர் அழித்த பின்னர் அவ்விடத்தில் புனித யாகப்பர் தேவாலயத்திற்கான சிறிய ஓலைக் கட்டடத்தை அமைத்தார்கள். அது பின்னர் இன்றையகல் கட்டடமாக மாறிவிட்டது.

போர்த்துக்கேய தேவாலயம்

வட்டுக்கோட்டையில் ஒரு போர்த்துக்கேய தேவாலயம் காணப்படுகின்றது. இதனை ஒல்லாதக் கொமாண்டராக இருந்து லொறென்ஸ்ட பைல் என்பவர் 1678ல் அமைத்தார். இன்று இத்தேவாலயம் அமெரிக்க மிசனால் பராமரிக்கப்படுகின்றது. இது முன் பக்கச் சுவர் உச்சியில் மூன்று வானோக்கிய சிறிய கூம்புகளைக் கொண்டுள்ளது. உருண்டைத் தூண்கள் இக்கட்டடத்தைத் தாங்கியுள்ளன. இம்மண்டபத்தில் 2000 மக்கள் வரை அமர்ந்திருக்கலாம். இத்தேவாலயத்துக்குப் பின்னால் 27 சமாதிகள் உள்ளன. அவற்றில் அதிக எண்ணிக்கையானவை ஒல்லாந்தருடையவை. அவை யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டவை.

நிலாவரையிலிருந்து புத்தூர் வீதியில் கிழக்காகச் சென்றால் அச்சுவேலியில் அமைந்திருக்கும் போர்த்துக்கேய தேவாலயம் ஒன்றின் கட்டட எச்சங்களைக் காணலாம். 1882 ல் கட்டப்பட்ட இத்தேவாலயம் இன்று அமெரிக்க மிசனுக்குச் சொந்தமானது. சிதைந்த இத்தேவாலயத்தின் தூண்களை இன்றும் காணலாம்.

கந்தரோடை வரலாற்று எச்சங்கள்

பருத்தித்துறை தெரு மூடி மடத்துக்கு வடக்கே கடற்கரையோரமாக அமைந்துள்ள தேவாலயம் புனித தேமையார் தேவாலயமாகும். இது 1860 கட்டடப் படத் தொடங்கி, 1862 ல் பாவனைக்கு விடப்பட்டது. பாதர் லியோ பெலிஸ்ஸர் அன்பளிப்பு செய்த மணி இங்குள்ளது. இது பிரான்சிலிருந்து தருவிக்கப்பட்டது.

கந்தரோடை என்று தமிழிலும் கத்தரகொட எனச்சிங்களத்திலும் அழைக்கப்படும் கந்தரோடை, வரலாற்று எச்சங்களைக் கொண்டிருக்கின்றது. இங்கு வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. வரலாற்று தொல்பொருட்கள் அகப்பட்டுள்ளன. பிராமி கல்வெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. புத்தர் இரண்டாவது தடவை பாதம் பதித்தவிடம் இதுவெனக் கொள்ளப்படுகின்றது. இம்மண்ணில் கூட்டமாகச் சிறிய தாதுகோபுரங்கள் காணப்படுகின்றன. சமாதிகள் போன்றுள்ள இந்த அமைப்பை இலங்கையில் வெறெங்கும் காணமுடியாது. 1926 இல் இவ்விடத்தில் போல் பரிஸ் என்பவர் அகழ்வாய்வினை மேற்கொண்டார். 50 க்கு மேற்பட்ட சிறிய தாதுகோபுரங்கள் இங்கு உள்ளன அவை நிலத்தில் 2.5 மீற்றர் அகலமும் 3.5 மீற்றர் உயரமும் கொண்டன. சுண்ணாம்புக் கற்களினாலானவை. 3ம் நூற்றாண்டைச்

களைத்தோடிக் கண்ணகி

சேர்ந்தவை. தமிழகத்திலிருந்து ஜம்புக்கோளமூடாக வந்த பிக்குகள் இங்கு தங்கிச் சென்றனர். இங்கிருந்தவர்கள் தமிழ் பெளத்தர்கள் எனப்படுகின்றனர். ‘குணி’ என்றொரு பிராமியக் கல்வெட்டு இவ்விடத்தில் அகப்பட்டுள்ளது. ஏராளமான அக்கால நாணயங்கள் அகப்பட்டுள்ளன.

தெல்லிப்பளையில் புகழ் பெற்ற ஆலயமாக துர்க்கை அம்மன் உள்ளது. ஆரம்பத்தில் கிராமக் கோயிலாக இருந்தது. கிடாய் ஆடுகளைப் பலி கொடுக்கும் துர்க்கையாக இருந்தது. பின்னர் தங்கம்மா அப்பாக்குட்டி பொறுப்பெடுத்து பெரும் ஆலயமாக மாற்றினார். தெல்லிப்பளை ஆலயம் இன்று தர்ம தாபனம் ஒன்றை நடாத்தி வருகின்றது. பல தர்ம தாபனங்கள் இதன் கீழ் இயங்குகின்றன. அநாதைப் பெண்கள் இல்லம், துர்க்கையம்மன் மண்டபம், நூல்நிலையம், அன்னதான மண்டபம் எனப்பல இயங்கி வருகின்றன. ராஜகோபுரம். தீர்த்தக்கேணி, அலங்கார வளைவு என்பன அமைக்கப்பட்டுள்ளன.

வழுக்கியாறு

பறாளை விநாயகர் ஆலயம்

யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு நதி வழுக்கியாறாகும். யாழ்ப்பாணத்தின் மத்தியில் அளவெட்டியிலிருந்து நவாலிக்கடல் வரை இது பாய்கின்றது. அளவெட்டி பினாகைக் குளத்தில் இந்நதி உற்பத்தியாகின்றது. மழை காலத்தில் இது பெருக்கெடுத்துப்பாயும். பெருமாலியன் என்றொரு அரக்கன் வழுக்கியாற்றிக்கு குறுக்கே படுத்து யாழ்ப்பாணத்தை வெள்ளத்துள் அமிழ்த்தப்பார்த்தான். விநாயகர் தோன்றி அவனை வதம் செய்து வழுக்கியாற்றை தென்புறமாக பாய்ச் செய்து பெருமாகடவையில் அமர்ந்தார். இந்த நதி பினாகைக் குளத்தில் ஆரம்பமாகி கந்தரோடையூடாக நவாலி வரை பாய்கின்றது. தோட்ட நிலங்களுக்கு மத்தியில் இந்த ஆறு பாய்வதால் அதன் படுக்கையின் அகலத்தை மக்கள் குறைத்துவிட்டார்கள். வழுக்கியாற்றின் படுக்கையில் மயானங்கள் பல இருக்கின்றன.

வடமாகாணத்தில் பேர் பெற்ற இன்னொரு ஆலயமாக பறாளை விநாயகர் கோயில் உள்ளது. இது சுழிபுரத்தில் அமைந்துள்ளது. பறாளை விநாயகர் பள்ளு தமிழில் விதந்து பேசப்படுகின்ற இலக்கிய நூலாகும். ஆலயங்கள் பல அமைந்துள்ள சூழலில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற ஒரு சிற்பத் தேர் இங்குள்ளது. வேறு புதுத் தேர் பாவனைக்கு வந்தமையால் இச்சிற்பதேர் பாவனையின்றிக் கொட்டிலில் கிடக்கின்றது. இத்தேரிலு ள்ள அற்புதமான சிற்பங்களைக் கள்ளர் சிலர் களவாடிச்சென்றுள்ளனர்.

மானிப்பாயில் வயல் வெளியில் ஒரு மேட்டில் ஓர் ஆலயம் அமைந்துள்ளது. அதுவே களைத்தோடிக் கண்ணகை அம்மன் கோயிலாகும். சோழ நாட்டை எரித்த கண்ணகி சேரநாட்டின் ஊடாக இலங்கைக்கு வந்தார் அவர் களைப்புடன் வந்து இளைப்பாற அமர்ந்தவிடம் இதுவாகும். அந்தவிடத்தில் கோயில் அமைந்துள்ளனர். மேட்டு நிலத்தில் காட்டு மரங்களின் சூழ இக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பாதையில் நீர்த் தரவை, ஆவுரஞ்சிக்கல் என்பனவுள்ளன. இக்கோயில் மக்களின் கவனத்தை அதிகம் கவரவில்லை. (தொடரும்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.