|
|||||||||||||||||||||||||||||||||||||||||||
நம் நாட்டு கலை இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பெயர் மரியசேவியர் அடிகளார். கத்தோலிக்க குருவாக மிகவும் இளவதிலேயே பணிசெய்திட புறப்பட்ட இவரின் பயணத்தில் கலையும் இலக்கியமும் இரண்டற கலந்துவிட்டது. கடந்த நான்கு தசாப்த காலங்களுக்கு மேலாக திருமறை கலாமன்றம் என்ற அமைப்பை வெற்றிகரமாக நடத்திவருவது. இவரின் வெற்றியில் இன்னொரு மகுடம். நம் நாட்டு நாடக உலகில் புதிய பரிமாணத்தை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ் மொழிக்கான பட்டத்தை மதுரையிலும், வரலாற்றுக்கான முனைவர் பட்டத்தை லண்டனிலும் மறைக் கல்விக்கான விருதினை ரோமிலும் பெற்ற இவர் சைவ சித்தாந்தத்திலும் பாண்டித்தியம் பெற்றவர். தற்போது ஆயர் இல்லத்துடன் இணைந்து சேவையாற்றிவரும் இவர் சைவ சித்தாந்தத்தை மாணவர்களுக்கு படிப்பித்து வருகிறார். இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான மரிய சேவியரை எமது ஞாபக வீதிக்காக அழைத்து வந்ததில் பெருமையடைகிறோம்.
எங்கள் வீட்டில் இருந்து பதினைந்து மீட்டர் தூரத்தில் ஒரு புளிய மரம் இருந்தது. சின்ன வயசில் எனக்கு எல்லாமே அந்த புளிய மரம்தான். அந்த மரத்தை சுற்றிச் சுற்றி என் நண்பர்களோடு விளையாடிய நாட்கள் அதிகம். நான் அக்கா, அண்ணா எல்லோரும் அந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியிருக்கிறோம். என்னை ஊஞ்சலில் வைத்து அக்கா தள்ளிவிட நான் ஆடுவது
வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஒரு சுகமான அனுபவம். ஒருநாள் அந்த புளிய மரத்தில் பேய் குடியிருப்பதாக ஒரு செய்தி ஊருக்குள் பரவ பேய் பயம் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏற்பட்டது. நான் கோயிலுக்கு போகும் வழியில் அந்த புளியமரம் இருப்பதால் தினமும் அந்த மரத்தை கடந்து போகும் கட்டாய தேவை இருந்தது. அதனால் அந்த மரத்தை கடக்கும் போது மரத்தை பார்க்காமலேயே ஓடிவிடுவேன். சிறிது தூரம்சென்ற பிறகுதான் மரத்தைப் பார்ப்பேன். அந்த புளிய மரம் இன்று இல்லை. இன்றும் அந்த பாதையில் நான் நடக்கும் போது நான் அக்காவோடு ஊஞ்சலாடி, பேய்க்கு பயந்த அந்த நாட்கள் பசுமையாக ஞாபகத்துக்கு வரும். ஏதோ ஒன்றை இழந்துவிட்ட சோகம் எனக்குள் பரவும்’ என்று தனது அந்த கால நினைவுகளை மீட்டிப் பார்த்து பெருமூச்சு விடுகிறார் மரியசேவியர் அடிகளார். அடிகளார் யாழ்ப்பாணம் இளவாலையில் ஒரு சிறிய கிராமமான வடக்கு இளவாலையில் பிறந்தவர். அங்கே சுமார் இருபது குடும்பங்கள்தான் இருந்தன. அனைவரும் பாரம்பரிய வைதிக கிறிஸ்தவர்கள். அப்படியொரு குடும்பத்தில் பிறந்தவரே அடிகளார்.
‘எனது ஆரம்ப கல்வியை இளவாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கற்றேன். எனது ஆரம்பக் கல்வியை பள்ளியில் தொடங்கும் முன்பே எனது அண்ணன் அருளாநந்தம் எனக்கு அகரம் எழுத கற்றுக்கொடுத்து விட்டார். அதன் பிறகுதான் பள்ளிக்குள் நுழைந்தேன். அங்கே கணக்கு மாஸ்டராக இருந்தவர் வைத்தியநாதன். அவர் மட்டும் தான் என் ஞாபகத்தில் இருக்கிறார். அங்கே லிங்கன், கந்தையா டொக்டரோட மகன் (பெயர் ஞாபகத்தில் இல்லை) எல்லாம் என் நண்பர்களாக இருந்தார்கள்.
அந்த பாடசாலையில் படிக்கும் போதுதான் என் முதல் நாடக பிரவேசம் ஆரம்பமானது. சகுந்தலை என்ற நாடகத்தில் கணையாழியை கண்டெடுக்கும் மீன் பிடிக்காரனாக நான் நடித்தேன். கையில் கணையாழி ஒன்றை கண்டெடுத்தேனே.... என்ற பாடலை பாடிக் கொண்டு அருமையாக நடித்ததாக எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். ஊர் கூடி என்னை பாராட்டியதில் என் பிரியமான அக்காவுக்கு பயம் வந்துவிட்டது. எங்கே தம்பிக்கு கண்ணுபட்டு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம்தான்.
நான் வீட்டுக்கு வந்ததும் வாசலிலேயே என்னை நிற்க வைத்து திருஷ்டி சுற்றி அடுப்பில் போட்டாள். அடுப்பு கொழுந்துவிட்டு எரிந்ததால் காரப் புகை பெரிதாக வரவில்லை. அதற்கு அக்கா சொன்ன விளக்கம் ‘பார்த்தியா ஊர் கண்ணே உன் மீதுதான் பட்டிருக்கு. அதுதான் புகை வாடையே வெளியே வரல’ என்றாள். அப்படியொரு பாசக்கார அக்கா இன்று என்னுடன் இல்லை...’ என்று சொல்லும் போது சோகம் மரியசேவியரின் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார் அடிகளார். ‘
பிறகு என் படிப்பை இளவாலை ஹென்றிஸ் கல்லூரியில் கற்றேன். அங்கே படித்துக்கொண்டிருந்த போதுதான் எனது நாட்டுக்குகூத்து நாடகங்கள் பல இளவாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. என்ற மரியசேவியர் அடிகள்’ எனது ஆரம்பக் கல்வியை கற்றபோது நான் செய்த ஒரு வேலையை சொல்ல மறந்துவிட்டேன். அப்போ எனக்கு ஒரு ஏழு வயதிருக்கும். பாடசாலைக்கு நேரம் பிந்திப் போனால் தரையில் முழங்கால் போட்டு அமர செய்து கால்சட்டையின் பின் புறத்தால் அடிப்பார்கள். இரண்டு நாள் அப்படி அடிவாங்கி விட்டேன். தொடர்ந்து அப்படியே அடிவாங்க முடியுமா? என்று எனக்கு வந்த ஒரு யோசனைப்படி பாட கொப்பியை எனது கால் சட்டையின் பின்புறம் ஆசிரியருக்கு தெரியாதபடி திணித்துக் கொண்டு அடிவாங்கினேன். தொம் தொம் என்று சத்தம் கேட்டதே தவிர எனக்கு வலிக்கவில்லை என்னை அடித்த ஆசிரியருக்கும் நான் வைத்திருக்கும் பாதுகாப்பு கவசம் பற்றி தெரியவில்லை...’ என்று சிரிக்கும் மரிய சேவியர், பள்ளி நாடகங்களிலும் பாடங்களிலும் தனது திறமைக்குக் கிடைக்கும் பாராட்டை தாங்கிக்கொள்ள முடியாத சக பள்ளி மாணவர்கள் சிலர் இவர் பள்ளி முடிந்து வீடு வரும்போது மறைந்திருந்து கல்லால் அடித்தார்களாம். அவர்கள் வீசிய கல் நெற்றியில் பட்டு இரத்தம் வழிந்ததாம். இன்றும் அந்த வடு அவர் நெற்றியில் அப்படியே இருக்கிறது. அவருடன் உரையாடிய போது தன் நெற்றியை எம்மிடம் காட்டினார் சேவியர் அடிகள். ‘
அன்று கல் வீசிய அந்த மாணவர்களின் பெயர்கள் எனக்கும் ஞாபகத்தில் இல்லை இளவாலைக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். இன்று அவர்கள் எங்கிருக்கிறார்களோ...’ என்றவரிடம் பாடசாலை நாட்களில் சினிமா பார்த்த அனுபவம் பற்றிக் கேட்டோம். ‘அது சுவாரசியமான விஷயம். எனக்கு சினிமா பார்க்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எனது அப்பா ஒரு பாதர். அதனால் என்னையும் ஒரு பாதராக உரு வாக்க வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. அதனால் எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்து வளர்த்தார்கள். என் உறவுக்கார நண்பர்கள் தவிர வேறு யாருடனும் பழகுவதற்கு எனக்கு அனுமதி இல்லை. அதனால் திருட்டுத்தனமாக சினிமா பார்ப் பது என்பது நினைத்தும் பார்க்க முடியாத விஷ யம். எங்கே என் இலக்கு தவறி நான் கெட்டுப் போய் விடுவேனோ என்பது என் பெற்றோரின் கவலை. அப்போது நான் ஹென்றிஸ் கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு பனி ரெண்டு வயதிருக்கும். மனோகரா தியேட்டரில் ‘ஞானசெளந்தரி’ படம் திரையிடப்பட்டிருந்தது. அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று வீட்டில் அழுது புரண்டு நான் அடம்பிடித்தேன். அம்மா என்ன செய்தார் தெரியுமா? என்னை அந்தப் பள்ளியில் படிப்பித்த பாதர் நல்லை யாவிடம் அழைத்துச் சென்று ‘பாதர், இவன் படம் பார்க்க வேண்டும் என்று அடம்பிடிக் கிறான் நீங்கள். பொறுப்பெடுக்கிறதா இருந்தா இவனை நான் சினிமாவுக்கு அனுப்ப சம்மதிக் கிறேன்’ என்றார். அதற்கு பாதர் சம்மதம் தர நான் சினிமாவிற்குப் போனேன். அதற்குப் பிறகு என் அண்ணன் அருளானந்தம் என்னை சில குறிப்பிட்ட படங்களுக்கு அழைத்து சென்றார். சந்திரலேகா, பராசக்தி உள்ளிட்ட சில படங்கள். என் அண்ணனும் ஒரு கலைஞர்தான். அவர் எழுதிய நாட்டுக் கூத்தான படவெட்டு தான் நான் முதல் முதலாக நடித்தேன். எனது பனிரெண்டாவது வயதில் செமினரி குருமடத்தில் கற்க தொடங்கி விட்டேன். அப்போது அந்த செமினரியில் படித்தவர்தான் பேராயர் தோமஸ் செளந்திரநாயகம். ஹென்றிஸ் கல்லூரி யில் படித்த போது தம்பு மாஸ்டர், சூசைப் பிள்ளை மாஸ்டர், பொடி மாஸ்டர் ஆகியோர் இன்றும் என் நினைவில் அப்படியே நிற்கிறார் கள். இவர்களில் பொடி மாஸ்டர் நல்ல தமிழ் பண்டிதர். அழகாக தமிழ் பேசுவார். ‘கொஞ்சம் கள் குடித்துவிட்டு வந்துதான் எங்களுக்கு பாடம் நடத்துவார்கள் குடித்தால் தான் அவருக்கு தமிழ் நன்றாக வருமாம்’. நீங்கள் ஆச்சர்யப்பட்ட விடயம் என்ன என்று கேட்டோம். நான் சிறு வயது முதலே தமிழ் மீது தீராத பற்றுதலும் வெறியும் கொண்டவனாக இருந்தேன். அந்த நேரம் எனக்கு ரோம் பல்க லைக் கழகத்தில் படிக்க இடம்கிடைத்தது. நான் ரோமுக்கு சென்றேன். அங்கே சென்ற பிறகு தான் நான் ஒன்றை புரிந்துகொண்டேன். உலகம் எவ்வளவு பெரியது என்பதையும் அதில் எத்த னையோ விதமான மனிதர்கள் உலா வருகிறார் கள் என்பதையும் புரிந்துகொண்டேன். எத்தனை வகையான மொழிகள் கலாசாரங்கள் உள்ளன என்பதும் புரிந்தது. உண்மையைச்சொன்னால் அப்போது தான் எனக்குக் கண் திறந்தது என்றார் அடிகள். தங்களுக்கு தமிழ் மீது தீராத மோகம் வர விசேட காரணங்கள் உண்டா என்று கேட்டோம். இதற்கு சேவியர் அடிகள் இப்படி பதிலளிக் கிறார் திராவிட கழகத்தின் தமிழ் பிரயோகம்தான் என்னில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. எனக்கு ஒரு வகையில் அண்ணாவும், கலைஞரும்தான் தமிழ் ஆசான்கள். அவர்களின் எல்லா நூல்க ளையும் படித்திருக்கிறேன். மு. வரதராஜனின் படைப்புகளையும் நான் விட்டு வைக்கவில்லை. செமினேரியில் நான் படித்த போது கழக நூல்கள் போன்றவைகளை படிக்கக் கூடாது என்ற தடை இருந்த போதே அதை மீறி இந்த நூல் களை நான் படித்தேன். எனக்கு இரண்டு ஆண் டுகள் மதுரையில் தமிழ் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் படிக்க கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். மதுரையில் படித்த போது தினமும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் அந்தக் கோயிலுக்கு செல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்த பிரமாண்டமான கட்டடக் கலையை பார்த்தால் தமிழும் வரும், கலையும் வரும். இதை நான் சொல்வதை விட நீங்களாகவே மதுரை மீனாட்சி கோயிலுக்கு சென்றால் உணர் ந்து கொள்வீர்கள். எனது எழுத்து, நாடகம் போன் றவற்றில் திராவிட கழகத்தின் பாதிப்பு இருப்ப தாக நிறைய பேர் சொல்கிறார்கள் பேராசிரியர் கா. சிவத்தம்பி கூட ‘பாதரின் நாடகங்களில் திராவிட சாயல் தான் தெரிகிறது’ என்றார். ‘என் னைப் பொறுத்தவரை எந்த ஒரு தமிழ் எழுத்தா ளனும் திராவிட கழகத்தின் பாதிப்பு இல்லாமல் உருவானதும் கிடையாது; உருவாகி விடவும் முடியாது’ என்று தமிழின் பால் தான் கொண்ட காதலை விளக்கிய அடிகளாரிடம் ம்... அது ஒரு காலம் என்று எதைச் சொல்கிaர்கள் என்று கேட் டோம். வடக்கு இளவாலையிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் சேந்தான்குளம் உள்ளது. இங்குதான் நானும் என் நண்பர்களும் குளிக்கப் போவோம். உச்சி வெயில் கொழுத்தும் அந்த வேளையில் சேந்தான்குளத்தில் குளிப்பதே ஒரு தனி சுகம். இன்று என்னதான் ஷவர், தொட்டி, வெந்நீர் ஹீட்டர் என நவீன குளியல் வசதிகள் வீட்டுக்குள் வந்த பின்னரும் நாங்கள் சேந்தான் குளத்தில் குளித்த அந்த சுகம் அதன் பின்னர் எங்குமே கிடைக்கவில்லை. அப்புறம் என் அம்மா, அப்பா, அக்கா ஆகியோரின் கல்லறைகள் இருக்கும் அந்த சவக்காலை இன்று என் காலடி பட முடியாத உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அடைப்பட்டு கிடக்கிறது. ஒரு வகையில் பார்த் தால் என் இரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டு விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்’ என்று வருத்தமாகச் சொன்னார் அடிகளார்.
நீங்கள் சந்திக்க ஆசைப்பட்ட நபர்? ‘கென்னடியை சந்திக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. ஆனால் எலிசபெத் ராணியை சந்திக்க வேண்டும் என்ற என் ஆசை மட்டும் நிறைவேறியது.’ சாதனை என்று சொல்வதற்கு ஏதாவது உண்டா என்று கேட்டோம். ‘இதை சாதனை என்று சொல்ல முடியாது. எனது பெற்றோர் நான் குருவானவராக வேண் டும் என்று நேர்த்தி வைத்தார்களாம். அதன் படியே எனது இருபத்திரெண்டாவது வயதிலேயே நான் கத்தோலிக்க குருவாக தேர்வு செய்யப்பட் டேன். பொதுவாக இருபத்தைந்து வயதில் தான் பாதராகும் அனுமதி எல்லோருக்கும் வழங்கப்ப டும். எனக்கு மட்டும் போப் பாண்டவரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று அறுபத்தைந்தாம் ஆண்டு, உலகிலேயே மிகவும் இளம் வயதில் கத்தோலி க்க குருவாகும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு கிடைத்த ஒரு அடையாளமாக நான் கருதுகிறேன்’ என்ற அடிகளார் தன் வாழ்க்கை யில் மறக்க முடியாத நபராக தன் அக்கா ஞான செளந்தரியையும், ஆயர்களான எமிலியாஸ் பிள்ளை, தியோபிள்ளை ஆகியோரையும் குறிப் பிடுகிறார். கடைசியாக வாழ்க்கையை பற்றிய தங்களின் புரிதல் என்ன என்று கேட்டோம். ‘வாழ்க்கை ஒரு மறைபொருள். வாழ்க்கையை புரிந்துகொள்வது கஷ்டம். ஒரு குறிக்கோளை இலட்சியமாக கொண்டு வாழ்க்கையை இன்பமா க்கி அதில் வாழ வேண்டும். இன்பம் என்றால் மகிழ்ச்சியாகவும் குடியும் கூத்துமாக இருப்பது என்று பொருள் அல்ல. மனநிறைவுடன் திருப்தி யாக வாழ்வதே இன்பம். எனக்கு இதுவரை பெரிய ஆறு அறுவை சிகிச்சைகள் நடைபெற்று ள்ளன. இன்றும் நான் சந்தோஷமாகவே வாழ்க் கையை எளிமையாக எடுத்துக் கொள்கிறேன். இன்னும் வாழவேண்டும் என்றுதான் நினைக்கி றேன். வாழ்க்கை ஒரு புதிர். உலகமும் ஒரு புதிர்தான்’ என்று மரியசேவியர் அடிகளார். பழைய ஞாபகத்தை முடிக்கிறார். படைப்பாளர் லெ.முருகப+பதி
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||