புத் 63 இல. 10

விரோதி வருடம் மாசி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 20

SUNDAY MARCH 07, 2010

 
.
காலஞ்சென்ற கலைஞர் எச்.ஏ.பெரேரா: கலைத்துறையைத் தன் ஆளுமையால் கவர்ந்த கலைஞர்

காலஞ்சென்ற கலைஞர் எச்.ஏ.பெரேரா: கலைத்துறையைத் தன் ஆளுமையால் கவர்ந்த கலைஞர்

சிங்கள கலைத் துறையில் முக்கிய அம்சங்களான மேடை நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகியவற்றில் தமது ஆற்றல்மிக்க நடிப்புத் திறனால் பல தசாப்தங்களாக தமது பெயரை தக்கவைத்துக் கொண்ட குணசித்திர நடிகர் ஹபரகடகே அலோசியஸ் பெரேரா எனும் எச். ஏ. பெரேரா கடந்த வாரம் காலமானார்.

பிறப்பு முதல் இறக்கும் வரையில் கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்திருந்த மிகச் சிறிய எளிமையான வீட்டிலேயே வசித்து வந்தார்.

நடிகர் என்ற அந்தஸ்தை எட்டாத போதிலும் ஒருசில விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் தம்மை ஒரு நட்சத்திரமாக காட்டிக்கொள்ள முயலும் இன்றைய இளைய சமுதாயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கலைஞர் எச். ஏ. பெரேராவின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகவே அமைந்திருந்தது. நடிப்புக்காக நம் நாட்டின் பல அதியுயர் விருதுகளை பெற்றிருந்த போதிலும் தமது இறுதி மூச்சுவரையிலும் எதுவித படாடோபமும் இன்றி எங்கும் எந்நேரமும் மிகவும் சர்வசாதாரணமான எளிமையான உடையில் நடமாடினார். தனது அனைத்து பயணங்களுக்கும் ஆம்ப கலத்தில் வந்த ஹொண்டா விளி 125 ரக மோட்டார் சைக்கிளையே அவர் உபயோகித்து வந்தது, அவரது எளிமையையே பறைசாற்றுகிறது.

இவ்வாறு ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்த எச். ஏ. பெரேராவை சந்தித்த ஊடகவியலாளர் ஒருவர் ‘ஒரு புகழ்பெற்ற நடிகரான நீங்கள் மிகவும் எளிமையாக வாழ்வது ஏன்’ என கேட்டார். அதற்கு எச். ஏ. பெரேரா, ‘நடிக்கின்ற நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தானே!’ என்று பதில் அளித்தாராம்.

சிங்கள வீதி நாடகத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த காலஞ்சென்ற காமினி ஹத்தொட்டுவே கமவின் கண்டு பிடிப்பான எச். ஏ. பெரேரா, ஹத்தொட்டுவேகமவின் வழிகாட்டலின் கீழ் நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டதுடன் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வீதி நாடகத் துறைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதன் பின் கலைத் துறையில் அவரின் இணைபிரியா நண்பனாக இருந்த பராக்கிரம கிரியெல்ல உடன் இணைந்து பல காத்திரமான மேடை நாடகங்களை படைத்ததுடன், நேதாயோ, தூதருவோ, உட்பட பல ஜனரஞ்சக தொலைக்காட்சித் தொடர்களிலும் சாஹர ஜலய, அயோமா, கெலிமடல உட்பட சில சிறந்த சிங்களத் திரைப்படங்களிலும் தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதுடன் பெருந்தொகையான ரசிகர்களின் உள்ளங்களிலும் இடம்பிடித்தார்.

ஒரு கலைஞர் என்ற ரீதியில் சினிமா, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களை தமது திறமைகளை வெளிப்டுத்தும் வகையில் உபயோகப்படுத்திக் கொண்ட போதிலும் எச். ஏ. பெரேரா எனும் பெயர் சிங்கள நாடகத் துறையிலேயே புகழ்பெற்று விளங்கியது.

அதற்கொரு சான்றாக அவர் உருவாக்கிய ‘வரெந்துவ’ (பிடியானை) மேடை நாடகத்தை குறிப்பிடலாம். அந்நாடகத்திற்கான சிறந்த மொழிபெயர்ப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தயாரிப்பாளர் ஆகிய அனைத்து அம்சங்களுக்குமான தேசிய விருதுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் தான் மேடை நாடகத் துறையில் இணையற்ற ஜம்பாவன் என்பதை நிரூபித்தார்.

அத்துடன் ஸ்பாட்டகஸ், செக்குவ, சுபசெந்தாவக், ஹிட்லர் உட்பட மேலும் பல நம்நாட்டில் சிங்கள மேடை நாடகத் துறையில் புகழ்பெற்ற நாடகங்களிலும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருந்தார்.

சிறுபராயம் தொட்டே கொழும்பு முகத்துவார ஆலயத்தில் நாதஸ்வர இசையினால் ஈர்க்கப்பட்ட இவர், முறைசாரா முறையில் கற்ற சங்கீத ஞானத்தால் மேடை நடக இசையமைப்பிலும் சிறந்து விளங்கினார்.

இவ்வாறு கலைத் துறையில் அனைத்து அம்சங்களையும் தமது திறமையை வெளிப்படுத்திய எச். ஏ. பெரேரா இறுதி மூச்சு வரையில் தாம் கற்று அறிந்த அறிவையும் ஆற்றலையும் எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தனது கலைத் துறை நண்பரான பராக்கிரம நிரியெல்ல உட்பட மேலும் சில கலைத்துறை நண்பர்களுடன் இணைந்து ஜனகரலிய (மக்கள் மேடை) என்ற நாடகப் பயிற்சி குழுவை உருவாக்கி அதன் மூலம் தமது நாட்டின் நாலாபுறங்களிலும் இலைமறை காய்களாக இருக்கும் கலைஞர்களுக்கு பயிற்சியளித்து ஊக்குவித்தார்.

நமது நாட்டின் சூழலுக்கு அமைய இவர், முழுக்க முழுக்க சிங்கள மொழியை மையமாகக் கொண்டு செயற்பட்ட போதிலும் சிங்கள மொழியை புரிந்துகொள்ளாத ஏனைய இன ரசிகர் உள்ளங்களிலும் ஆழமாக இடம்பிடித்திருந்தார். அந்த வகையில் ஒரு நாடறிந்த கலைஞராக விளங்கிய எச். ஏ. பெரேரா எமது எதிர்கால சந்ததியினரும் மொழியால் ஏற்படும் தடைகளுக்கு பலியாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆதலால் அவர் முக்கிய பங்கு வகித்த ஜனகரலிய பயிற்சித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் நாடகங்கள் தமிழ், மொழியிலும் தயாரிக்கும் திட்டத்தினை ஊக்குவித்து வந்தார்.

ஒரு பிரசித்தி பெற்ற கலைஞராக இருந்த போதிலும் தமது வாழ்க்கை முழுவதும் பிரமச்சாரியாகவே வாழ்ந்த இவர் தனது சகோதரிகளின் பிள்ளைகளையே தன் பிள்ளைகளாக வளர்த்தார்.

வெளியுலகில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக அவர் நிகழ்ந்த போதிலும் பல்வேறு துயரங்களுக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும் அவர் முகங்கொடுக்க நேர்ந்தது. கலைத் துறையிலும் கண்ணியம் தவறாத மனித நேயமிக்க நண்பனாக விளங்கிய இவர் கலைத் துறை சார்ந்த அனைவராலும் எச். ஏ. என்ற இரண்டெழுத்துக்களால் தான் பரவலாக அறியப்பட்டுவந்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.