சிங்களப் பாடசாலைகளை முஸ்லிம் பெற்றோர் நாடுவது ஏன்?
சிங்களப் பாடசாலைகளை முஸ்லிம் பெற்றோர் நாடுவது ஏன்?
தமிழ், முஸ்லிம்கள் தமிழ் மொழி மூலமே கற்க வேண்டும் என்ற வாதத்தை முன்நிறுத்தி எஸ்.
ஐ. நாகூர்கனி எழுதிய கட்டுரை தொடர்பாக மற்றொரு பக்க ஆய்வை இங்கே முன்வைக்கிறார்
கட்டுரையாளர்.
முஸ்லிம்களின் கற்றல், கற்பித்தல் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்ற தலைப்பில்
மூத்த எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர்கனி அண்மையில் வார மஞ்சரியில் எழுதியிருந்தார்.
அவரது கருத்துக்கள் சரியானவையாக எனக்கு தோன்றினாலும் அவை சரியா பிழையா என்று கூற
நான் முற்படவில்லை. எனினும் அதனுடன் தொடர்புடைய சில விடயங்களை முன்வைக்கின்றேன்.
குருநாகல் நகரையும் குருநாகல் மாவட்டத்தையும் மையமாக வைத்து எனது கருத்துக்களை
முன்வைப்பதாயின் கற்றலும் கற்பித்தலுக்குமான சாதக, பாதக நிலைகளை நோக்க
வேண்டியிருக்கிறது.
குருநாகல் நகர எல்லையில் தமிழ்மொழி மூல பாடசாலைகள் மூன்று இருக்கின்றன. அவற்றில்
இரண்டு முஸ்லிம் பாடசாலைகள். முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்று மாதிரி மகா வித்தியாலயம்.
அடுத்தது மத்திய கல்லூரி.
இப்பாடசாலைகளுக்கு இவ்வாண்டும் முதலாம் தரத்துக்கு மாணவர் அனுமதியில் எவ்வித
போட்டியும் நிலவவில்லை. வழமை போலவே, நகரிலேயே அமைந்துள்ள மாதிரி மகா
வித்தியாலயத்திற்கு இம்முறை முதலாம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் சுமார்
முப்பதுக்குள்தான் கிடைக்கப் பெற்றுள்ளன.
குருநாகல் மாநகர எல்லைக்குட்பட்ட சிங்கள மொழி மூல பாடசாலைகளின் எண்ணிக்கை சுமார்
பண்ணிரண்டு. இவைகளுக்கு வழமை போலவே இம்முறையும் முதலாம் ஆண்டின் மாணவர் அனுமதிக்கு
வந்துகுவிந்த விண்ணப்பங்களில் சுமார் நாற்பது விண்ணப்பங்கள் முஸ்லிம் மாணவர்
அனுமதிக்கானவை.
இது மேற்படி ஒரு பாடசாலைக்கான விண்ணப்பங்கள் அல்ல. ஒவ்வொரு பாடசாலைக்கும் சுமார்
நாற்பது விண்ணப்பங்கள் வரை கிடைக்கப் பெற்றுள்ளன. ஒருவர் பல பாடசாலைக்கும்
விண்ணப்பங்களை அனுப்பியிருப்பது வேறுவிடயம்.
இச்சிங்களப் பாடசாலைகளில் நான்கு பெரியவை. பிரபலமானவை. மேற்படி நான்கு
பாடசாலைகளுக்கும் அனுமதிக்கப்படும் முஸ்லிம் மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?
வெறும் ஆறுதான். இது 2009ல், 2010ம் ஆண்டிற்கான அனுமதி இதனைவிடவும் குறையுமா என்பதை
நான் அறியேன். இந்த விபரங்களை தெரிந்து கொண்டும் முஸ்லிம் விண்ணப்பங்கள் இத்தனையா
என கேட்க தோன்றுகிறதல்லவா?
அது மட்டுமல்ல, குருநாகல் மாநகர எல்லைக்குட்பட்ட இரண்டொரு பாடசாலைகளைத் தவிர ஏனைய
அனைத்து சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கும் முஸ்லிம் விண்ணப்பங்கள்
குறிப்பிடத்தக்களவு கிடைக்கப் பெற்றுள்ளன.
இதிலும் வயம்ப ரோயல் கல்லூரிக்கும் அதிகளவு முஸ்லிம் விண்ணப்பங்கள் கிடைக்கப்
பெற்றுள்ளன.
அத்தோடு சிங்கள மொழி மூல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு அதிக இடம்
கிடைத்த பாடசாலையும் அதுவே, (எதிர்வரும் வருடங்களில் இங்கு முஸ்லிம் மாணவர்
அனுமதியில் கட்டுப்பாடு கொண்டு வரப் போவதாக தகவல் கிட்டியுள்ளது).
மேலும் சுமார் ஆறு வருடங்களையேனும் பூர்த்தி செய்யாத ஜனாதிபதி, மகளிர்கல்லூரிக்கும்
மாணவர் அனுமதியில் போட்டி நிலவுகிறது. அங்கு இம்முறையும் சில முஸ்லிம் விண்ணப்பங்கள்
கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் எந்தவொரு முஸ்லிம் மாணவியும் அங்கு
அனுமதிக்கப்படவில்லை.
குருநாகல் மாநகர எல்லையில் உள்ள சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட
அனைத்து முஸ்லிம் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் முஸ்லிம்
பாடசாலைகளின் நிலை என்ன? இப்பாடசாலைகளை இன்னும் சில வருடங்களில் இழுத்து மூட
வேண்டிய நிலைதானே ஏற்படும்?
இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்கிறோம். முஸ்லிம்களுடைய தாய் மொழி தமிழென்று
நாம் சொல்லிக் கொண்டிருந்தாலும் குருநாகல் மற்றும் சில நகர் வாசிகளின் நகர்வு
சிங்கள மொழியின் பக்கமே செல்கின்றது என்பது புலனாகின்றது. இதற்கு என்ன காரணம் என்பதை
முதலில் ஆராய வேண்டும்.
சிங்கள மொழி மீதான பற்றா? தமிழ் மொழி மீதான வெறுப்பா? தமிழ் மொழியால் நன்கு பேசத்
தெரிந்தவர்களான நகர வாசிகள் அநேகர் சிங்கள மொழியிலேயே அதிகம் கதைக்கின்றனர். தமிழில்
கேள்வி கேட்டாலும் சிங்கள மொழியிலேயே பதில் அளிப்பவர்களும் நம்மில் உள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால் மூத்த நம் எழுத்தாளர் நாகூர் கனியுடைய கருத்துப்படி சிங்கள
முஸ்லிமா, தமிழ் முஸ்லிமா என்று கேட்க வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை என்றுதான்
தோன்றுகிறது. குருநாகல் நகரில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கல்வி பயிலும்
பெரும்பாலான மாணவர்கள் கூட சிங்கள மொழியையே பேசுகின்றனர்.
இப்பகுதி முஸ்லிம்கள் சிங்கள மொழியை விரும்பிப் பேசுவதன் காரணத்தை சரியாக என்னால்
அறிய முடியாவிட்டாலும், சிங்கள மொழி மூல பாடசாலைகளை விரும்பி நாடுவதன் காரணத்தை
ஓரளவு புரிந்து கொள்ளலாம். ஒரு சிலரின் கருத்து, மொழி எதுவானாலும் பிரபல பாடசாலையில்
தமது பிள்ளை படிக்க வேண்டும் என்பதாக உள்ளது.
நூறு பேர் நேர்முக பரீட்சையொன்றுக்கு சென்று அதில் ஐந்து பேர் பிரபல சிங்கள மொழி
மூல பாடசாலைகளில் பயின்ற முஸ்லிம்களாகவும் மற்றையவர்கள் ஏனைய பாடசாலைகளில் பயின்ற
சிங்களவர்களாகவும் இருந்தால் இந்த முஸ்லிம் மாணவர்களுக்கும் அங்கு அதிகம் வாய்ப்பு
இருப்பதாகவும் சிலர் வாதிக்கின்றனர்.
அத்தோடு இப்பகுதி முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித் தரம் போதுமானதாக இல்லையென்ற
கருத்தும் அநேக முஸ்லிம் பெற்றோரிடையே நிலவுகிறது. இதுவும் சிங்கள மொழி மூல
பாடசாலைகளை முஸ்லிம் பெற்றோர் நாடுவதற்கான காரணமாக கருதப்படுகிறது.
தமிழ் மொழி மூல பாடசாலைகள் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நோக்கப்படுவதற்கு சான்றாக
பல காரணங்களை முன்வைக்கலாம். குருநாகல் நகரை அண்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி
மகளிர் வித்தியா லயம் ஆறு வருடங்களையும் பூர்த்தி செய்யவில்லை. எனினும்
அப்பாடசாலைக்கும் பிள்ளைகளை சேர்ப்பதில் போட்டி நிலவுகின்றது. காரணம் அப்பாடசாலையின்
வளச் சிறப்பு.
எனினும், நகர எல்லையில் உள்ள முஸ்லிம் மத்திய கல்லூரி, மாதிரி மகா வித்தியாலயம்
என்பனவற்றை நோக்கும் போது ஏராளமான குறைபாடுகளை பட்டியலிட முடியும்.
இது தொடர்பாக கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூல உயர் அதிகாரியொருவரை கண்டு
பேசினேன்.
எம்மால் எதை செய்ய முடியுமோ அதையே செய்து வருகிறோம். இவ்விடயத்தில் முஸ்லிம்
பெற்றார் அசிரத்தை காட்டுகின்றனர். முஸ்லிம் பாடசாலைகளை வளர்த்தெடுப்பதில் முஸ்லிம்
பெற்றார் காட்டும் ஆர்வம் வெறும் பூஜ்யமே. இதேசமயம்,
நகரில் உள்ள முஸ்லிம் பெற்றார் சிங்கள மொழி மூல பாடசாலைகளையே பெரிதும்
விரும்புகின்றனர். அந்த மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையையும் தமக்கென பெற்றுக்
கொள்ள முஸ்லிம் பெற்றோர் படாத பாடில்லை என்றார் அவர்.
மேலே குறிப்பிட்ட பிரபல பாடசாலைகளுக்கு இலட்சக் கணக்கான ரூபாய்களையேனும் வழங்கி தமது
பிள்ளைகளை அப்பாடசாலைகளில் சேர்க்க பல முஸ்லிம் பெற்றோர் ஆர்வமாக இருக்கின்றனர்.
குருநாகல் நகர எல்லையில் மட்டும் சர்வதேச பாடசாலைகள் எட்டு இருக்கின்றன. இவைகள்
சிலவற்றில் முஸ்லிம் மாணவ, மாணவியரே பெரும்பான்மை.
பிரபல பாடசாலைகளில் தமது பிள்ளைகளுக்கு அனுமதி கிடைக்காமையினால் சிலர் சர்வதேச
பாடசாலைகளை நாடுகின்றனர்.
நகர முஸ்லிம்கள் சிங்கள மொழி மூல பாடசாலைகளை அதிகம் நாடிச் செல்வதால் குருநாகல் நகரை
அண்டிய வெஹரபந்த எனும் கிராமத்தில் அமையப் பெற்றுள்ள சிங்கள மொழி மூலமான ஒரே
முஸ்லிம் பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும்
அவை பேச்சளவில் நின்றுவிட்டன.
இந்நிலைமைகளை நோக்கும் போதும் சிங்கள மொழி மூல பாடசாலைகளை முஸ்லிம் பெற்றார் தெரிவு
செய்வதில் சில நியாயங்களும் இல்லாமல் இல்லை. அத்தோடு தமிழ் மொழி மூல பாடசாலைகளின்
வளப் பற்றாக்குறையில் பிரதானமாக திகழ்வது ஆசிரியர் பற்றாக்குறையே. குருநாகல் பிரதேச
மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதற்கென்று எண்ணினால் கூட (உயர் வகுப்பு)
தனியார் வகுப்புகளுக்கு கொழும்பு கண்டி போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை.
ஏன் நீங்கள் (முஸ்லிம் பாடசாலைகளை) தமிழ் மொழி மூல பாடசாலைகளை தெரிவு செய்யாது
சிங்கள மொழி மூல பாடசாலைகளை தெரிவு செய்கிaர்கள் என்று கேட்டால் மாணவர்களும்
பெற்றாரும் நான் மேலே குறிப்பிட்ட காரணங்களுடன் மேலும் பல காரணங்களை குறிப்பிடுவர்.
இவற்றில் பல காரணிகள் நியாயமானவையாக இருந்தாலும் மூத்த எழுத்தாளர் நாகூர்கனி
குறிப்பிட்டது போல் வரவேற்க முடியாத காரணங்களும் பல இல்லாமலுமில்லை. அதில்
பிரதானமான வையாக குறிப்பிடுவதாயின் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கற்பவர்களைவிட
சிங்கள மொழி மூல பாடசாலைகளில் கற்பவர்களிடையே கலாசார பாதிப்புகள் அதிகம்
தென்படுகின்றன.
கிழக்கிலங்கை முஸ்லிம்கள் தமிழை தாய் மொழியாக கற்கத் தொடங்கியதால் அங்கு உயர் பதவி
வகிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்ற காரணம் பொருந்துமா என்பது சிந்திக்க
வேண்டிய தொன்றாகும். ஏனெனில் பெரும்பான்மையாக அங்கு முஸ்லிம்கள் இருப்பதனாலேயே
பெருமளவிலானோர் உயர் பதவிகளை வகிப்போராகவும் அரச உத்தியோகத்தர்களாகவும் இருக்க
முடிகிறது.
கிழக்கிலங்கைக்கு வெளியேயும் தமிழ் மொழி மூலம் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின்
எண்ணிக்கையே அதிகம். சிலரே சிங்கள மொழியை தெரிவு செய்கின்றனர். எனினும் தமிழ் மொழியை
தாய் மொழியாகக் கொண்டு கற்ற இவர்களில் குறிப்பிடத்தக்க சிலரே உயர் பதவிகளை
வகிக்கின்றனர்.
வட கிழக்கிற்கு வெளியே ஆங்காங்கே உயர் பதவி வகிக்கும் சில முஸ்லிம்களைத் தவிர அரச
உத்தியோகம் பார்ப்பவர்களென்றால் ஏனைய அனைவரும் ஆசிரியர்களே.
கல்வித் துறையில் உயர் பதவி வகிக்கும் முஸ்லிம்களில் சிலர் அரசியல் செல்வாக்கினால்
வந்தவர்களே. இதையும் முஸ்லிம் பாடசாலைகள் கல்வித் துறையில் பின் செல்வதற்கான
காரணமாக குறிப்பிடலாம்.
தமிழ் மொழி அரச கரும மொழியாக்கப்பட்டிருந்தாலும் குருநாகல் உட்பட நாட்டின் ஏனைய பல
பகுதிகளிலும் அலுவலகங்களிலும் தமிழ் மொழி மூலம் கடமையாற்றும் அதிகாரிகளைக் காணக்
கிடைப்பது மிக மிக அரிதே. இதே சமயம் அவ்வப் போது கிடைத்த மொழி பெயர்ப்பாளர்
பதவிகளும் இத்துறை ஆசிரியர் பதவிகளும் தமிழ் முஸ்லிம்களைவிட்டு கைநழுவும் நிலை
ஏற்பட்டுள்ளது.
சிங்கள மொழி மூல மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு தமிழ் மொழி சிறப்பாக
போதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து ஊக்கமும் உற்சாகமும் வழங்கப்படுகிறது.
சிங்கள மொழி மூல பாடசாலைகளை நாடிச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைக்க
வேண்டுமானால் அதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். அல்லது சிங்கள மொழி மூல
பாடசாலைகளுக்கு தமிழ், முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதாயின் மாணவர்களுக்கு
தகுதியிருப்பின் கட்டுப்பாடின்றி மாணவர் அனுமதிக்கப்படல் வேண்டும்.
வளங்கள் அனைத்தும் சிங்களப் பாடசாலைகளுக்கு இருக்கும் அதேசமயம் பணக்கார முஸ்லிம்
பெற்றோர் மேலும் நன்கொடை என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இந்நிதி வளத்தை
குறைகள் நிறைந்த மொழி மூலப் பாடசாலைகளுக்கு வழங்கினால் அது ஒரு ஆக்கபூர்வமான
பங்களிப்பாக இருக்கும். சிறந்த கல்விச் சமூகமொன்று செழித்து வளர உதவியாக அமையும்.
குருநாகல் நகர முஸ்லிம் மாணவர்களின் கல்விப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஒரு
அங்கமாக மாநகர எல்லையில் உள்ள இரு முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றை ஆண்கள்
கல்லூரியாகவும், மற்றையதை பெண்கள் கல்லூரியாகவும் மாற்றுவதற்காக நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பாரிய நல்முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு
வழங்கினால் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு செல்ல எண்ணும் முஸ்லிம் மாணவ, மாணவியரின்
எண்ணிக்கையைக் குறைக்கலாம்.