புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

 
.

எல்.கே. அத்வானி அரசியல் இறங்குபடியில் கால் பதிக்கிறார்

எல்.கே. அத்வானி அரசியல் இறங்குபடியில் கால் பதிக்கிறார்

பாரதிய ஜனதா கட்சி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியிலிருந்து வெளியேற்றிய செய்தி சில காலம் இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்து இப்போது ஓய்ந்து போயிருக்கும் நேரத்தில் அத்வானி மீண்டும் அதற்கு உயிரூட்டுகின்றார்.

ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது தவறு என்று இப்போது அவர் கூறியிருப்பது பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்தில் மாத்திரமன்றி இந்திய அரசியல் அரங்கிலேயே ஆச்சரியத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்ற முடிவு ஓகஸ்ட் 19ந் திகதி சிம்லாவில் கூடிய பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஒருவரும் அந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அத்வானியும் அக்கூட்டத்தில் சமுகமளித்திருந்தார். ஜஸ்வந்த் சிங்கை வெளியேற்றுவதென்ற முடிவு ஒரு சதி எனக் கூறலாம். ஜஸ்வந்த் சிங் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காகச் சிம்லாவுக்குச் சென்று ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.

குழுக் கூட்டம் நடைபெறவிருந்த ஓகஸ்ட் 19ம் திகதி காலை ராஜ்நாத் சிங் அவரைத் தொலைபேசியில் அழைத்துக் கூட்டத்துக்கு வரவேண்டாம் எனக் கூறினார். ஜஸ்வந்த் சிங் இல்லாமலேயே அவருக்கு எதிரான குற்றச்சாட்டு பரிசீலிக்கப்பட்டு அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு வரவேண்டாம் என்று ஒரு உறுப்பினருக்கு உத்தரவிடும் அதிகாரம் கட்சித் தலைவர் என்ற வகையில் ராஜ்நாத் சிங்குக்கு உண்டு.

ராஜ;நாத்சிங்

இந்த முடிவு எடுக்கப்பட்ட காலத்தில் ஓகஸ்ட் 18ந் திகதி முதல் 21ந் திகதி வரை பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட கொள்கை வகுப்புக் குழுவின் கூட்டம் சிம்லாவில் நடைபெற்றது.

அக்குழுவின் சில உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து, பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங் பங்குபற்றினால் தாங்கள் உயர்மட்ட கொள்கை வகுப்புக் குழுவிலிருந்து வெளியேறுவதாகக் கூறியதாகவும் அதனாலேயே பாராளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு வரவேண்டாம் என்று ஜஸ்வந்த் சிங்குக்குச் சொல்லப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகின.

உயர் மட்ட கொள்கை வகுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து ஜஸ்வந்த் சிங் பற்றிக் கூறியது அத்வானிக்கு எதிரான காய்நகர்த்தலில் ராஜ்நாத் சிங் மேடையேற்றிய நாடகம் என்ற அபிப்பிராயம் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது.

ஜஸ்வந்த் சிங்குக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மையிலேயே அத்வானியை வீழ்த்துவதற்கான பொறி. ஜஸ்வந்த் சிங் எழுதி வெளியிட்ட நூலொன்றில் ஜின்னா மத சார்பற்றவர் எனச் சொல்லப்பட்டிருப்பது அவருக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு. இதே கருத்தை அத்வானி 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் கூறினார்.

பாகிஸ்தானின் அரசியலமைப்பு நிர்ணய சபையில் 1947 ஓகஸ்ட் 11ந் திகதி ஆற்றிய உரை ஜின்னாவின் மதசார்பின்மையை வெளிப்படுத்தியது என்று அத்வானி பாகிஸ்தானில் ஆற்றிய உரையொன்றில் குறிப்பிட்டார். இதனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை இழக்க நேர்ந்ததைத் தவிர அத்வானிக்கு வேறு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

அத்வாணி

ஜின்னா மதசார்பற்றவர் என்று கூறியதற்காக ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியிலிருந்து வெளியேற்றினால் அத்வானிக்கு எதிரான உணர்வலையும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் எழும் என்பது ராஜ்நாத் சிங்குக்குத் தெரியும். இவ்விடயத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜஸ்வந்த் சிங்கின் வெளியேற்றத்தை அத்வானி எதிர்ப்பார் என்றும் அதையே அவருக்கு எதிரான கணையாகப் பயன்படுத்தலாம் என்றும் ராஜ்நாத் சிங் எதிர்பார்த்தார். இது தனக்கு எதிரான பொறி என்பதை விளங்கிக் கொண்ட அத்வானி மெளனம் சாதித்தார்.

இவ்விடயத்தில் அத்வானிக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு அவரின் தீவிர ஆதரவாளரான அருண் ஜெய்ட்லி பதிலளித்தாரேயொழிய அத்வானி எதுவும் பேசவில்லை. ஜஸ்வந்த் சிங்கை வெளியேற்றுவதெனப் பாராளுமன்றக் குழு எடுத்த முடிவுக்கு அத்வானி மெளன ஆதரவு வழங்கியதற்கு இதுவே காரணம். ஆனால் பிந்திய நிகழ்வுகள் அவருக்கு எதிராக அமைந்ததால் இப்போது அத்தீர்மானத்துக்கு எதிராகப் பேசுகின்றார்.

1999ம் ஆண்டு தலிபான்களால் கடத்தப்பட்ட இந்தியன் எயர்லைன் விமானத்தையும் 160 பயணிகளையும் மீட்பதற்காக மூன்று இஸ்லாமியப் பயங்கரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவித்தது அன்றைய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம். இது கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கசப்புணர்வை வளர்த்திருந்தது. ராஜ்நாத் சிங் ஆதரவாளர்கள் இப்பிரச்சினையை இப்போது கிளறினார்கள். உள்துறை அமைச்சர் என்ற வகையில் அத்வானியே இதற்குப் பொறுப்பு என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறித் தப்பித்துக் கொள்ள அத்வானி முயற்சித்தார்.

ஜஸ்வத்சிங்

ஆனால் அதுவே அவரைச் சிக்கலில் மாட்டியது. பாதுகாப்புச் சபையே அந்த முடிவை எடுத்தது. உள்துறை அமைச்சர் என்ற வகையில் அத்தவானியும் பாதுகாப்புச் சபையில் ஒரு உறுப்பினர். அந்த முடிவை அத்வானியும் பாதுகாப்புச் சபையில் ஆதரித்தார் என்று அச்சபையின் ஏனைய உறுப்பினர்கள் கூறியதும் மக்கள் மத்தியில் அத்வானி ‘பொய்யர்’ ஆகி விட்டார்.

பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குத் தோல்வி ஏற்பட்ட பின் அத்வானியின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்தது. அப்பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே ஜஸ்வந்த் சிங் விவகாரத்தில் அத்வானி மெளனம் சாதித்தார். ஆனால் அப்பதவி பறிபோவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைக்கும் முயற்சி பலனளிக்காது என்ற நிலையிலேயே ஜஸ்வந்த் சிங்கின் வெளியேற்றத்துக்கு எதிராக அத்வானி இப்போது பேசுகின்றார்.

அத்வானியின் முன்னுக்குப் பின் முரணான நடத்தையும் பேச்சும் அரசியலின் இறங்குபடியில் அவர் கால்வைக்கின்றார் என்பதையே உணர்த்துகின்றன. அவரது கெளரவத்துக்குப் பங்கம் ஏற்படாத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்குவதென ஆர். எஸ். எஸ் தீர்மானித்திருக்கின்றது. அவர் அப்பதவியிலிருந்து வெளியேறுவதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்பதே இதன் அர்த்தம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk