புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

 
.

ஒக்டோபர் முதல் வாரத்தை 'மலையக சிறுவர் உரிமை" வாரமாக அனுஷ்டிப்போம்!

ஒக்டோபர் முதல் வாரத்தை 'மலையக சிறுவர் உரிமை" வாரமாக அனுஷ்டிப்போம்!

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள அனைத்துலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருள் “நமது சிறுவர்களுக்காக விடுதலை பெற்ற பூமியை கட்டியெழுப்புவோம்” என்பதாகும்.

சிறுவர்கள் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடியதானதும் துஷ்பிரயோகங்கள் இல்லாததுமான ஒரு சூழலை நமது சிறுவர்களுக்காக நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை இந்த தொனிப்பொருள் வலியுறுத்துகிறது.

சிறுவர்களுக்காக இவ்வாறானதொரு சூழலை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட அனைத்து வளர்ந்தவர்களுக்கும் உள்ளது.

இந்த பின்னணியில் பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவரின் நிலையை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கான உகந்த சூழல் ஏற்படுத்தப்படாததாலேயே அண்மையில் ஜீவராணி, சுமதி ஆகியோரின் அவல மரணங்கள் நேர்ந்தன.

ஆகவே, பெருந்தோட்ட சிறுவருக்கு அவர்கள் உரிமைகளை அனுபவிக்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டுமானால் பெற்றோர், வளர்ந்தோர், சிறுவர்கள் மத்தியில் சிறுவர் உரிமை தொடர்பான பரந்தளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

கல்வி கற்பது சிறுவரின் உரிமை என்ற கருத்தும், சிறுவர்களை வேலைக்கு அனுப்புவது அல்லது அமர்த்துவது சிறுவர் உரிமை மீறலாகும் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தப்பட வேண்டும்.

தரகர்கள் சமூக விரோதிகள் என்ற மனோபாவத்தை மக்கள் மத்தியில் கட்டியெழுப்பி தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் எதிர்காலத்தில் அதனை முற்றாக இல்லாமற் செய்யவும் பொருத்தமான செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போது அரசு நிறுவனமான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பெருந்தோட்ட சிறுவர் தொடர்பாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மலையக சிவில் சமூகம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இம்முறை தீபாவளி திருநாளும் அனைத்துலக சிறுவர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் வருவதால் தீபாவளி காலத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கத்தோடு தோட்டப் பகுதிகளுக்கு வர காத்திருக்கும் செல்வந்தர்கள் தோட்டங் களுக்குள் உட்புகுவதற்கு அச்சப்படும் ஒரு சூழலை உருவாக்கும் செயற் பாடுகள் நடை முறைப் படுத்தப் பட வேண்டும்.

பிரிடோ நிறுவனம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தை ‘மலையக சிறுவர் உரிமை’ வாரமாக பிரகடனப்படுத்தியிரு ப்பதுடன் மலையக சிறுவர் தொடர்பில் அக்கறையுள்ள அனைவரும் மலையக சிறுவர் உரிமை வாரத்தை தாக்கமுள்ள முறையில் அனுஷ்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளுகிறது.

இந்தக் கருத்துக்களை முன்னெடுக்கும் முகமாக பிரிடோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் கழகங்கள் ஒக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.

இவற்றுள் கருத்தரங்குகள். வீதி நாடகங்கள், விசேட சிறுவர் கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராகவும் தரகர்களுக்கு எதிராகவும் சுவரொட்டி பிரசாரம் என்பன அடங்கும்.

இதேவேளையில் ஜீவராணி, சுமதி ஆகியவர்களின் மரணத்துக்கு பின்னர் மலையக சிவில் சமூகத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக ஏற்பட்டுள்ள அக்கறையை இது விடயத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தவும் மலையக சிறுவர் உரிமை வாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என பிரிடோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk