பெயரில் மட்டும் பாக்கியத்தைக் கொண்ட அபாக்கியவதியான பாக்கியவதி வவுனியா
மாவட்டத்திலுள்ள விவசாயக் கிராமமொன்றைச் சேர்ந்தவள். தாய் தெய்வானைப்பிள்ளையும்
தகப்பன் முத்துலிங்கமும் சேர்ந்து தழுவியதால் பிறந்த எழுவரில் இவள் மூத்தவள். ஐந்து
சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் கொண்டவள்.
கிராமக் குளத்தை நம்பிய வயற்காணியில் முத்துலிங்கம் சிறுக விவசாயம் செய்தாலும்
பாய்ச்சல்வாய்க்காலின் கடைக்கோடியில் நிலத்தின் அமைவிடமிருந்ததால் பொதுவாக
போகத்துக்குப் போகம் இலாபம் கிடைப்பதென்பது முயற்கொம்பு. அவன் விவசாயம் செய்கிறான்
என்பதைவிட விவசாயக் கூலியாகச் செயற்படுகின்றான் எனலாம். இரட்டை மாடுகள் பூட்டிய ஒரு
வண்டி கூட வைத்திருக்கிறான். விதைப்புத் தொடங்கி அறுவடை முடியும் வரை பலருடைய
பாரங்களையும் இழுக்கும் வேலைகளை மாடுகள் செய்தாலும் தூக்கும் சாத்தும் வேலைகளை இவனே
செய்வான்.
கிராமத்தில் வாழ்வது என்ற பெயர் மட்டும்தான். எவ்வளவுக்கு ஆலாய்ப் பறந்து
உழைத்தாலும் ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவதில் முத்துலிங்கமும்
தெய்வானையும் எதிர்கொண்ட பிரச்சினை ஏராளம்.
உள்நாட்டு வருமானத்தில் கணிசமான கணிசமான பங்கை உண்டு தொடர் ஏப்பமிடும் யுத்தத்தினாலோ
நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு தூய வாழ்க்கை வாழாத அரசியல்வாதிகளின்
ஒட்டுமொத்த சுயநலமும் திறமையின்மையும் காரணமாகவோ கிடுகிடுவென ஏறிச் சென்ற வாழ்க்கைச்
செலவுக்கு ஈடுகொடுப்பதில் தம்பதிகளின் விழிகள் பிதுங்கின.
கிராமத்தின் நட்டநடுவில் அமைந்துள்ள சிறிய கோவிலொன்றின் தர்மகர்த்தாக்களில் ஒருவர்
தெய்வானையின் தகப்பனார். பொலிஸ¤க்குப் போகாத ஊராரின் சில்லறைப் பிரச்சினைகளைத்
தீர்த்துக் கொடுக்கும் பிரமுகர் அவர்.
குடும்பத்தின் தலைமகளான பாக்கியவதி இளகிய இதயம் கொண்டவள். தனது பங்கு உணவை பற்பல
சந்தர்ப்பங்களில் தனது தம்பி தங்கைகளுக்குக் கொடுத்துவிட்டு தண்ணீர்க்குடலுடன்
படுத்துவிடுபவள்.
கிராமப் பாடசாலையில் ஐந்தாம் தரம் வரை படித்துவிட்டு அவளையொத்தவள்களுடன் ஊர்
சுற்றித் திரியும் போதுதான் சர்வதேச அமைப்பொன்றினால் அடுத்த கிராமமொன்றில்
ஆரம்பிக்கப்பட்ட தையல் வகுப்பில் பயிற்சிக்காகச் சேர்ந்தாள்.
பயிற்சியின் இறுதியில் அமைப்பினால் கொடுக்கப்பட்ட தையல் இயந்திரத்தைப் பெற்று,
கிராமத்துப் பெண்களுக்கான ஆடைகளைத் தைத்துக் கொடுப்பது மூலம் குடும்பச் சுமையைத்
தூக்குவதில் தகப்பனுக்குத் தோள் கொடுத்தாள்.
பாக்கியவதியின் வயது ஏறிக் கொண்டு சென்றது போல அவளுடைய தங்கைகளின் மார்புகளும்
வளர்ந்து கொண்டிருந்தன. இரைப்பைகளின் விசாலம் அதிகரிக்க அதிகரிக்க குடும்பத்தாரின்
உணவுத் தேவையும் கூடியது.
“கடவுளே நான் என்ன செய்வேன்? பாக்கியத்துக்கே இருபத்திநாலாப் போயிட்டு, இந்த
மனிசன்ட உழைப்பிலே இவளையும் மற்றவள்களையும் நான் எப்படி ஒப்பேத்துவேன்?” துயரங்களால்
மனம் பாதிப்புறும் நேரங்களில் தெய்வானை வாய்விட்டே ஒப்பாரி வைப்பாள்.
லித் தொழில் செய்யும் இரண்டொருவர் பாக்கியவதியைக் கேட்டு வந்தாலும் நிரந்தர
வருமானமுள்ள ஒருவனாக வரட்டும் என அவள் மறுத்துவிட்டாள்.
ஒருநாள் பிற்பகல். கிராமக் குளத்தில் நீராடி விட்டு பாக்கியவதியும், தங்கைகள்
இருவரும் ஒற்றையடிப் பாதையூடாக நடந்து வரும்போது நாகலிங்கம் எதிர்கொண்டான்.
அவன் அயல் கிராமமொன்றைச் சேர்ந்தவன். இவளுக்கு தூரத்துச் சொந்தக்காரன். கொழும்பில்
காரியாலயமொன்றில் எடுபிடியாகப் பணியாற்றுபவன்.
“எப்படி பாக்கியம். சொகமா இருக்கியா?” நிமிர்ந்த மார்புகளை மறைத்துக் கட்டியிருந்த
முதுகுப்புறம் நனைந்த துணியின் மீது படர்ந்து மாலை மஞ்சள் வெய்யிலில் காய்ந்து
கொண்டிருந்த அவளது அடர்ந்த கூந்தலில் ஆழமாகக் கண்ணோடினவனாகக் கேட்டான்.
அவனது பார்வையால் உமிழ்ந்த அசிங்கத்தை நொடிக்குள் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
“கொழும்பிலே ஆடைத் தொழிற்சாலையொன்றிலே பாக்கியத்தைச் சேர்த்துடுவோம். மாசாமாசம் பல
ஆயிரங்கள் சம்பளம் பெறலாம்”
இந்த யோசனை சில நாட்களில் நிஜமாகியது.
*
2008 ஆம் ஆண்டின் மத்தியில் ஒருநாள்.
பாக்கியவதி தையல் இயந்திரமொன்றில் வேலையில் ஆழ்ந்திருந்தாள். கொழும்பு மாநகருக்கு
வடபுறத்தே அமைந்திருந்த இடத்தில் அவள் வேலை செய்யும் தொழிற்சாலை அமைந்திருந்தது.
நூற்றுக்கணக்கான பெண்களும், விரல்விட்டு எண்ணத்தக்க ஆண்களும் அங்கு பணியாற்றினர்.
இயந்திரங்களின் சப்தங்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டாளர்கள்
போன்றோரின் இறுக்கமான கட்டளைகள், தைப்பவர்களின் தொழில் ரீதியான மெல்லிய உரையாடல்கள்
என தொழிற்சாலை பயங்கர கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. உடப்புறச் சுவர்களின்
மேற்பகுதிகளில் இடைக்கிடை பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிப் பெட்டிகளினூடாக
ஒலிபரப்பாகிய சங்கீதம் உள்ளே இதமாகத் தவழ்ந்தது.
பாக்கியவதிக்கு இன்னும் உடல் வலித்தது. கண்கள் நிறைய நித்திரை மயக்கம் போன்றோர்
உணர்வு. மனம் நிறைந்த வெறுப்புடன் தடம் மாறிச் சென்று கொண்டிருக்கும் தனது அந்தரங்க
வாழ்க்கையை எண்ணி வெந்தவாறே காரியத்தில் கண்ணாகிக் கொண்டிருந்தாள்.
“பாவி! ராவு வந்தவன் கசக்கிப் பிழிஞ்சிட்டான். இந்த அவல வாழ்வு இன்னும் எத்தனை
நாட்களுக்கோ?” கையில் பிடித்திருந்த துணியை இயந்திரம் தைத்துக் கொண்டிருக்க
பெற்றோர், தங்கைமார், தம்பி, குடும்பத்தினர், கட்டிக் கொண்டிருக்கும் கல்வீடு என
ஒன்று மாறி மற்றொன்று அவளின் மனதில் தோன்றுவதும் மறைவதுமாக...
“உயிரோடிருக்கும் தோதே என் உடலை எனது குடும்பத்தினருக்காகத் தியாகம் பண்ணிவிட்டேன்”
நினைவு பெரியதொரு பெருமூச்சாக வெளியேகியது.
தொழிற்சாலைக்குள் அதுவரை தவழ்ந்த இசை சடுதியாக நிறுத்தப்பட... கரகரத்த ஆண்
குரலொன்று நெஞ்சாங்கூட்டை நடுங்க வைத்த அந்தச் செய்தியைக் கூறிற்று.
“வத்தளைக்கும் மாபோளைக்கும் இடையில் சனசந்தடியான திருப்பமொன்றில் கட்டுநாயக்க விமான
நிலையத்தை நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்த அமைச்சர் சதுருமிதுருசிங்காவும்
அவரது மெய்ப்பாதுகாவலர்கள் ஐவரும், பொதுமக்கள் அறுவருமாக எல்லாமாக பன்னிருவர்
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டனர்...”
செய்தியைச் செவியுற்ற பணியாளர்கள் தத்தமது வேலைகளை நிறுத்தி ஒருவர் முகத்தில்
மற்றவர் கண்ணோடினர்.
“அழுவாத பாக்கியம். ஓங்கட ஆக்கள்தான் செய்திருக்கணும்” அரைவாசி மட்டும் தைத்த
ஆடைகள் பலதை விரித்த கைகளில் தாங்கியவாறு நடந்து கொண்டிருந்த ஒருத்தி
பாக்கியத்துக்குப் பக்கத்தில் தரித்து நின்று கூறினாள்.
பாக்கியம் மெளனம் காத்தாள்.
“நாடு பூரா பாதுகாப்பு இல்லாமப் போயிட்டு. நம்மைப் போன்ற இன்னும் எத்தனை அப்பாவிகள்
அகப்பட்டாங்களோ” என்றான் உயரமான மேற்பார்வையாளன் ஒருவன்.
தொடரப்பட்ட செய்தியில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை. சேதப்பட்ட வாகனங்கள்,
கட்டிடங்கள் போன்றவற்றின் விபரங்கள் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டன.
“அற கொல்லன்ட பிஸ்ஸ¤தமாய். அஹிங்சக மினிஸ்ஸ¤ நேயத மறண்ணே” என்றாள் பலகை
மார்புடனும், கத்தரிக்கப்பட்ட கூந்தலுடனும் காட்சி தந்த ஒருத்தி.
“மொன ஜராவ ஹரி தீலா மெம பிரஷ்ணய இவறகறண்ட புளுவன் நே (என்ன மசிரையென்டாலும்
கொடுத்து இந்தப் பிரச்சினையை முடித்து விடலாம்தானே)” பாக்கியத்தின் பக்கத்து
இயந்திரத்தில் பணியாற்றியவன் சற்றுச் சப்தமிட்டுக் கூறினான்.
“ஏக கரண்ட பே. திரஸ்தவாதீன் சியலுதெனாம சம்பூர்ணயென்ம மர்தனயகலாயின் பஸ்ஸேதமாய் மெம
பிரஷ்ணய இவர கரகண்ட ஓண (அப்படிச் செய்ய முடியாது. பயங்கரவாதிகள் சகலரையும் கொன்ற
பின்னர்தான் பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும்)” சற்று தூரத்தில் நின்றிருந்த
பெருத்த இடுப்புடன் கூடிய ஒருத்தி கண்களை அகலமாக்கியவாறு கூறினாள்.
ருத்துக்கள் பலவாறாக வெளிப்பட்டாலும் எவ்வளவு கூடிய சீக்கிரம் முடியுமோ அவ்வளவு
சீக்கிரத்தில் பிரச்சினைக்கு முடிவு கண்டு, நாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம்
செலுத்த வேண்டுமென்பதே பொதுவான கருத்தாகவிருந்தது.
*
அன்று இரவு. தங்கியிருக்கும் விடுதி மண்டபத்தினுள் அறைத் தோழிகள் மூவருடன்
பாக்கியவதி உட்கார்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்தாள். விடுதியின்
சொந்தக்காரியான யசவதியும் கூடவே அமர்ந்திருந்தாள்.
முற்பகல் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தொடர்பான காட்சிகள் விலாவாரியாகப்
போய்க் கொண்டிருக்க, தற்கொலையானின் துண்டிக்கப்பட்ட தலையின் சிதைவுறாத முன் பகுதி
திரை முழுவதும் அடங்கக் கூடியவாறாக பெருப்பித்துக் காட்டப்பட்டது.
ஒருநாள் இரவு வழக்கமாக வரும் வாடிக்கையாளனான முகுந்தனுடன் ஆட்டோவொன்றில்
ஹோட்டலொன்றுக்குப் போகும் போது கூடவே வந்து காரியம் முடியும் மட்டும் வெளியே
காத்திருந்து, அவளை மட்டும் விடுதிக்கு அனுப்பிவிட்டு, நண்பனுடன் நடந்து
சென்றவன்... இன்னுமொரு தடவை அதே முகுந்தனுடன் விடுதிக்கு வந்து மண்டபத்தினுள்
கதைத்துக் கொண்டிருந்தவன்.... தொழிற்சாலையிலிருந்து விடுதி திரும்பும் வழியில்
இரண்டு தடவைகள் இடைமறித்துக் குசலம் விசாரித்தவன்... சுமார் பத்து நாட்களின் முன்
விடுதிக்கு வந்து சாவகாசமாக வீற்றிருந்து சில நாட்களாக முகுந்தனைக் காணவில்லையெனக்
கூறி அவனைப் பற்றி அவளிடம் விசாரித்தவன்...” அவனுடன் கதைத்துக் கொண்டிருந்ததை யசவதி
கூடப் பார்த்தாளே. அவனா தற்கொலையாளி? தமிழினியனோ தமிழழகனோவென ஏதோ பெயர் கூடச்
சொன்னானே... பாக்கியவதியின் மனம் கொல்லன் உலையாகக் கொதிக்க...
தற்கொலையாளனைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி
இலக்கங்களும் காட்டப்பட்டன.
பாக்கியவதி தொடர் சிந்தனையில் ஆழ்ந்தாள். கட்டிலுக்குச் சென்றவள் இறுக மூடிய
கண்களுடன் உள்ளே வெதும்பினாள்.
மீண்டும் மீண்டும் எழுந்து அடங்கிய அவளுக்குள்ள பெரிய கேள்வி யசவதி அவனை அடையாளம்
கண்டிருப்பாளா என்பதுதான். அவனுடன் அவள் கதைத்துக் கொண்டிருக்கும் போது யசவதி
அவனைக் கண்டதெல்லாமே சில நொடிகள் மட்டும்தான். தொலைக்காட்சியில் அவனைக் கண்ட
மாத்திரமே அடையாளம் கண்டிருந்தால் அன்று அவளுடன் கதைத்தவன் இவன்தானே எனக்
கேட்டிருப்பாள். அவ்வாறு அவள் கேட்காததால் நிச்சயமாக அடையாளம் கண்டிருக்க மாட்டாள்
என்ற முடிவுக்கு பாக்கியம் வந்தாள்.
திரும்பத் திரும்ப அவனது உருவம் தோன்றி அவளைப் பயமுறுத்தியது. எச்சரித்தது. அவனைத்
தெரியுமென்ற தகவலை ரிலியவே சென்று கொடுத்தால், அவன் சார்ந்தவர்களால் கொலை செய்யக்
கூடப் படலாமென பயப்பட்டது. உண்மையிலேயே அவனைப் பற்றிய விபரங்கள் எதுவும் அவள்
அறியாதவள்.
சடுதியாக வேறொரு எண்ணம் மேலேழுந்து கலக்கியது. அவளுடைய தொலைபேசி இலக்கம்
அவனுடையதில் பதியப்பட்டிருக்கலாம். அவனிடம் கைத்தொலைபேசி இருந்து அது
கண்டுபிடிக்கப்பட்டால் இவளைத் தேடி விசாரணைச் சிங்கங்கள் பாய்ந்து முன்னேற
நாழிகையாகாது.
“அவனைத் தெரியாது என மறுத்தால் விசாரணைக் கரங்கள் நீண்டு என்னைப் பற்றி
துருவித்துருவி ஆராயத் தொடங்கும். அப்போது என் வாழ்க்கையின் இருண்ட பகுதி
வெளிவரும். அது என் பெற்றோருக்குத் தெரியவந்தால்... சந்தேகமேயில்லை. என் அம்மாவோ
அப்பாவோ அல்லது இருவருமோ தற்கொலை செய்யலாம்... விபசாரியின் தங்கைகள் என்று என்
சகோதரிகளை யாரும் கையேற்க முன்வர மாட்டார்கள். ஐயகோ! நான் என்ன செய்வேன்? கடவுளே!
நான் என்ன செய்வேன்?” அறைக்குள் படுத்திருந்த மற்றவள்களுக்குக் கேட்காமல் குமுறி
அழுதாள்.
அவளது இருண்ட வாழ்க்கைக்கு அத்திவாரக்கல் நாட்டிய அந்த முச்சக்கரவண்டிச் சாரதியை
நினைத்து... அவனது முகத்தில் காரி உமிழ்ந்தாள். கூரிய நகங்களால் அவனது மார்புச்
சதையைக் கீறினாள்.
“பாவி உன் முகத்தைப் பார்த்து நல்லவனென நம்பி ஐந்தாறு தடவைகள் உன் வண்டியில் வந்த
என்னை... நான் மறுக்க மறுக்க என் பின்னால் சுற்றிச்சுற்றி வந்து உயிருக்குயிராகக்
காதலிக்கிறேன் என்று கூறி உன்னை நம்ப வைத்து என்னை... கோயிலொன்றுக்குக் கூட்டிச்
சென்று சாமி முன் என் தலையில் அடித்து திருமணம் செய்வதாக நீ சத்தியம் செய்ததை
நம்பிய என்னை... உன் பசப்பு வார்த்தைகளை நம்பி காலமெல்லாம் காப்பாற்றி
வைத்திருந்ததை உனக்குத் தாரை வார்த்த என்னை... அடப்பாவி! என்னைச் சுவைத்துத்
தின்றது மட்டுமல்லாமல் சகல நிலைகளிலும் புகைப்படங்களை எடுத்து... என்னை மிரட்டி உன்
அடிமையாக்கி, உன் நண்பர்களைச் சுவைக்க வைத்து... கேவலமான ஒருத்தியாக என்னை ஆக்கிப்
போட்டியேடா பாவி!நான் இப்போ என்னடா செய்யலாம்?
இரவு முழுவதுமான அழுகையுடன் அவளது அடுத்த நாள் விடிந்தது. தினச்சுடர் பத்திரிகையில்
தற்கொலையாளியின் தலை அடங்கிய புகைப்படமும் தகவல் கொடுப்பதற்காக தொடர்பு கொள்ள
வேண்டிய தொலைபேசி இலக்கங்களும் வெளியிடப்பட்டிருந்தன.
*
சம்பவம் இடம்பெற்ற இரண்டாம் நாள் பிற்பகல். தொழிற்சாலையில் வேலை முடிந்து தூக்க
முடியாத மனச்சுமையுடன் பாக்கியவதி தனியாக நடந்து வரும்போது ஆட்களில்லாததோர்
இடத்தில் தயாராக நின்றிருந்த இராணுவத்தினர் சிலர் இவளை அணுகி கட்டிப்பிடித்து
இழுத்துச் சென்று வேன் ஒன்றினுள் ஏற்றினர். உள்ளே வீற்றிருந்த யசவதி இவளைப்
பார்த்ததும் வெறுப்புடன் முகத்தை மறுபக்கத்துக்குத் திருப்பிக் கொண்டாள்.
கழுத்தறுபட்ட கோழியாக பாக்கியவதியின் மனம் துடித்தாலும் நிலைமையைப் புரிந்து கொள்ள
அவளுக்கு நேரமெடுக்கவில்லை. யசவசதியால் அவள் காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டாள்.
தற்கொலையாளியைப் பற்றி அவளிடம் விசாரிக்கப் போகிறார்கள். தெரியாதென்றால், விசாரணை
நீண்டு அவளது இருண்ட பக்கம் வெளிவரும். அதன் விளைவுகள்? தெரியுமென்றால்
தற்கொலையாளனுடன் சம்பந்தப்பட்டதொருத்தியாக முத்திரை குத்தப்படுவாள். தொடர்ந்து
சித்திரவதை... அது இது என...
ஆட்டோ சாரதி காரணமாக ஒரு பெண் அனுபவிக்கக் கூடிய உச்ச வேதனையை அவள் ஏற்கனவே
அனுபவித்து விட்டாள். கொலை செய்யப்பட்டால் கூட தன்னால் தன் குடும்பத்தாருக்கு
இழுக்கு ஏற்படுவதை அவள் வெறுத்தாள்.
இராணுவ முகாமை வாகனம் நெருங்கும் வேளையில் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். அந்த
முடிவைத்தான் விசாரணையின் போது கூறப் போகிறாள். அவ்வாறு கூறினார், அவளுடன் தொடர்பு
கொண்டிருந்த ஆண்கள் அத்தனை பேரும் மனதளவில் பயந்து சாவார்கள். அவளைத் தங்களுக்கும்
தெரியுமெனக் கூறி வீணாக வம்பில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். அவளது இருண்ட வாழ்க்கை
வெளிவர சாத்தியமே இல்லை.
அறையொன்றினுள் வைத்து சீருடையணிந்த இளம் அதிகாரிகள் நால்வர் அவளை விசாரிக்கத்
தொடங்கினர். பெயர், ஊர் போன்ற மாமூலானவைகளைக் கேட்ட பின்னர் மேசைக்குள்ளிருந்து
எடுத்த புகைப்படமொன்றைக் காட்டி “இவனைத் தெரியுமா?” என்றனர்.