புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

 
.
அன்றைய தலைவர்கள் தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் . . .

அன்றைய தலைவர்கள் தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால்
ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் தோன்றியிருக்க மாட்டா

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான

சிவசக்தி ஆனந்தன்
தினகரன் வாரமஞ்சரிக்கு
வழங்கிய நேர்காணல்.
நேர் கண்டவர் :
பி. வீரசிங்கம்

கேள்வி : இன்றைய நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு கொடுக்கும் வழிகாட்டல் என்ன?

பதில் : முதலில் யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் நிவாரணக் கிராமங்களிலும் தங்கியிருக்கும் மூன்று இலட்சம் மக்களை அவர்களது இடங்களில் குடியமர்த்த வேண்டும்.

பருவ மழைக்காலம் தொடங்கப் போகிறது. ஒரு இலட்சம் பேர் இருக்கக் கூடிய நிலப்பரப்பில் இரண்டரை இலட்சம் மக்கள் மிகவும் செறிந்து வாழ்ந்து வருகிறார்கள். குறுகிய நிலப்பரப்புகளில் இருக்கும் அந்த மக்களை மீளக் குடியமர்த்த வேண்டுமென இந்தியா, உட்பட சர்வதேச சமூகமும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.

பாதுகாப்பு, கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற காரணங்களால் அந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த போதும் மக்களின் மீளக் குடியமர்வு பற்றி வலியுறுத்தினோம். புலிகளை இனம்காணும் அதேவேளையில் மக்களையும் இனங்கண்டு எவ்வளவு விரைவாக மக்களை மீளக் குடியமர்த்த முடியுமோ அதைச் செய்தால் அந்த மக்கள் தாங்களாகவே ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

முகாமில் தங்கியிருக்கும் மக்கள் வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்தவர்கள்தான். அவர்கள் சொந்தக் காணிகள், ட்ரக்டர், வாகனங்கள் என வைத்திருந்தவர்கள். அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டால் பின்னர் ஏனைய அனைத்துத் தேவைகளையும் பார்த்துக்கொள்வார்கள்.

தமிழ் மக்கள் பூர்வீகக் குடிகளாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும். உரிமைப் போராட்டம் என்பது வெறுமனே திடீரென உருவாகிய ஒன்றல்ல.

அன்றிருந்த தலைவர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்தபோது ஆயுதம் ஏந்தவில்லை. அன்றைய தலைவர்கள் தூர நோக்கோடு சிந்தித்து செயற்பட்டிருந்தால் புலிகள் உட்பட எந்தவொரு தமிழ் இயக்கமும் உருவாகியிருந்திருக்காது. இன்று பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளும் சொத்திழப்புகளும் ஏற்பட்டிருக்கமாட்டா. அழிவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகளே இதற்குக் காரணமாகும்.

அரசாங்கம் அரசியல் தீர்வொன்றைக் காண முன்வர வேண்டும். இனியும் ஒரு ஆயுதப் போராட்டம் நாட்டில் உருவாகக்கூடாது என்றால் ஒரு நிரந்தரத் தீர்வொன்றைக் காண முன்வரவேண்டும். தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சமமாக வாழ வேண்டுமானால் இதயசுத்தியுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.

கேள்வி : இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக த. தே. கூட்டமைப்பு எவ்வாறான யோசனைகளை முன்வைக்கும்?

பதில்: தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சட்ட வல்லுநர்கள் கொண்ட குழுவின் உதவியுடன் ஆலோசித்து வருகிறது. விரைவில் அதனை முன் வைக்கவுள்ளோம். அத்தீர்வு யோசனையானது நிச்சயமாக வடக்கும் கிழக்கும் இணைந்ததாகவே இருக்கும். இலங்கை அரசுடன் இந்தியா, மற்றும் சர்வதேச சமூகத்துக்கு முன்னால் வைக்கவுள்ளோம். இப்போது அதுபற்றி கூறமுடியாது.

கேள்வி : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தென்பகுதியில் ஒரு இனவாத அமைப்பாகவே பார்க்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் : இதில் எந்தளவிற்கு உண்மையிருக்கிறது என்பது எமக்குத் தெரியாது. ஒரு குறிப்பிட்ட அளவிலானோரே அவ்வாறு பார்க்கக்கூடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தோம். போர்க் காலத்தில் வெளியான தகவல்களால் மக்கள் குழம்பிப் போனார்கள். அதுபற்றிய சரியான தெளிவை எடுத்துக் கூறினோம்.

இக்கருத்துக்கள் சிலநேரம் தென்பகுதி மக்கள் மத்தியில் வித்தியாசமாகத் தெரிந்திருக்கும். யுத்தத்தை நிறுத்தி சமாதான முறையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது யுத்தத்திற்கு முடிவு காணப்பட்டுவிட்டது. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடக்கப் போகும் விடயங்களைப் பற்றி சிந்திப்போம். மக்களது மீள் குடியேற்றம் மிக விரைவில் செய்யப்பட வேண்டியுள்ளது. அன்றிருந்த நிலைப்பாடுகளிலும் சூழ்நிலைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மக்களது தேவைகளையும் நலன்களையும் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் செயற்படும்.

கேள்வி : 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முறையாக அமுல்படுத்துவதனூடாக ஒரு தீர்வை எட்டமுடியுமெனக் கருதுகிaர்களா?

பதில் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அல்லது 13+ ஆகியவற்றுக்குள் எமது பிரச்சினைக்கு முழுமையான தீர்வைக் காண முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறது. அதையும் தாண்டிச் சென்றே ஒரு தீர்வை காண வேண்டும். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட வட கிழக்கு மாகாண இணைப்புக்கு கீழிருந்த பல விடயங்கள் இன்று போய்விட்டன. அது தேய்வு நிலையில் காணப்படுகிறது.

நாங்கள் அதற்குள் நின்று கொண்டு காணி, பொலிஸ், அதிகாரங்களை செய்வதென்பது கஷ்டமான காரியமாகும். அப்போது அதிகாரப் பகிர்வு வழங்க மறுத்ததையடுத்தே 19 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தோம். அண்மையில் நடந்த மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டில் கூட இதுபற்றி ஆராயப்பட்டது. அவ்வாறான அரைகுறை தீர்வுகளை வைப்பதால் திரும்பவும் ஜனநாயக ரீதியான போராட்டத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்படுவதை தவிர்க்க முடியாமலாகிவிடும்.

கேள்வி : இனப்பிரச்சினை தொடர்பாக ஆராயும் சர்வகட்சி குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தொடர்பான உங்கள் கருத்தென்ன?

பதில் : பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி குழு இதுவரையில் 60 இற்கு மேற்பட்ட தடவைகள் கூடி ஆராய்ந்திருக்கின்றது. இக்குழுவில் த. தே. கூட்டமைப்பு கலந்துகொள்ளாதது தொடர்பில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரிடம் ஜனாதிபதி கூறும் போது தெற்கிலுள்ள கட்சிகள் முதலில் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்த பின்னர் த. தே. கூட்டமைப்பை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண 80 வீதம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் எதிர்க் கட்சியான ஐ. தே. கவும் த. தேசியக் கூட்டுமைப்பும் இணைந்து கொண்டால் விடயம் முடிந்துவிடும் எனவும் கூறுகிறார். அவர் என்னதான் கூறினாலும் உண்மையாகவே இனப்பிரச்சினையைத் தீர்க்க விரும்பினாலும் கூட ஜே. வி. பி, சிஹல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் எதையும் செய்ய முடியாதுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல்கள் முடியும் வரையிலும் இதுபற்றிப் பேசுவதால் எதுவித பலனும் இல்லை. கூட்டமைப்பு இணைந்து கொள்ளுமா என்பதற்கு அப்பால், பிரச்சினையைத் தீர்க்க ஆயத்தமாகும் போது இனவாதக் கட்சிகள் காலாகாலமாக எதிர்ப்பையே காட்டி வந்திருக்கின்றன.

உண்மையில் இதய சுத்தியுடன் அரசாங்கம் சர்வ கட்சிக் குழுவின் ஊடாக ஒரு உறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்வை முன்வைக்கும் என்றால் நாங்கள் அதற்கு மாறானவர்களாகவோ எதிரானவர்களாகவோ இருக்கப் போவதில்லை.

கேள்வி : தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளுடன் உங்களது உறவு எப்படியிருக்கிறது?

பதில் : ஏற்கனவே த. தே. கூட்டமைப்பு பற்றி தென்பகுதி மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம், புலிகளோடு முற்று முழுதாக நின்றவர்கள், தமிழினவாதத்தை பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதாகும். சிங்கள மக்கள் மத்தியில் இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. தெளிவுபடுத்த முனைந்த ரவிராஜ் போன்றோரை த. தே. கூட்டமைப்பு இழந்திருக்கிறது. எதிர்காலத்தில் எமது உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவுள்ளோம்.

யுத்தம் இல்லாத ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்கள் பற்றி சிங்கள மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியிலும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கிறது.

தென் பகுதியிலிருக்கும் முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். இவ்விடயத்தில் ஊடகங்களுக்கும் பங்கிருக்கிறது.

கேள்வி : மக்களுக்கு மறுவாழ்வுக்கு முன்னதாக தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமென்ற கருத்து நிலவுகிறது. அதுபற்றி உங்களது அபிப்பிராயமென்ன?

பதில் : அன்றிருந்த நிலைமைகள் இப்போதில்லை. இன்று நிலைமைகள் மாறிவிட்டன. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்கிறது.

கூட்டமைப்புக்குள் இது தொடர்பாக ஆராயப்பட்டது. அனைவரும் கூடி ஏகமனதாக ஒரு முடிவும் எடுக்கப்பட்டது. மக்களின் மீள் குடியேற்றம், மற்றும் இனப்பிரச்சினை தீர்வு யோசனை விடயத்தில் ஒரு பொதுவான தீர்வொன்றை முன் வைப்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி ஆராய்ந்த போது கலந்துகொண்டவர்களில் எவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. பின்னர் அவர்கள் ஊடகங்களில் வேறுவிதமாகக் கருத்துத் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பலர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க வவுனியா நகர சபைத் தேர்தலில் வென்றவர்களுக்கான பதவியேற்பு வைபவத்தை ஒரு களமாகக் கொண்டு அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்தோம். இந்த இடத்திலிருந்து ஆரம்பிப்போம் என்றிருந்தோம். எவரும் இதில் பங்குபற்றவில்லை. நாம் ஏற்பாடு செய்த இக்கூட்டத்தைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்ற எண்ணமே உள்ளது.

கூட்டமைப்பு ஐக்கியத்திற்காக எங்கெல்லாம் இறங்கிப் போக வேண்டுமோ, யார் யாரோடெல்லாம் பேச வேண்டுமோ பேசியும் இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் பேசுவதற்குத் தயாராகவும் இருக்கிறது-

கேள்வி : சர்வதேச புலம்பெயர் அமைப்புக்களுடனான உறவு எப்படியிருக்கிறது?

பதில் : இதற்கு முன்பிருந்த போராட்ட நிலைமைகள் வேறாக இருந்தன. தற்போது நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான சில வேலைகளை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறார்கள். அது மட்டுமல்ல அம்மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டுமென கோரியிருக்கிறோம்.

அரசாங்கம் இயலுமான அனைத்தையும் செய்வதற்கு அப்பால் நாம் எமது இனத்திற்கு உதவ வேண்டும். அங்கிருக்கும் மக்களுக்கு தாம் அனுப்பும் பொருட்கள் உரிய முறையில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைச் சென்றடைகிறதா என்ற சந்தேகம் எழுகிறது, அதுபற்றி யோசிக்க வேண்டாம். நீங்கள் அனுப்புங்கள் என்றேன்.

எனினும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனிப்பட்ட ரீதியில் எனது விலாசத்திற்கு அனுப்பப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகிறேன். பொருட்களை அனுப்பி வைப்பதற்கு பதிலாக நிதியுதவியை செய்தால் அந்த மக்கள் தமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

கேள்வி : இலங்கைத் தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது-?

பதில் : இலங்கை இனப்பிரச்சினை மற்றும் தமிழ் மக்கள் தொடர்பான பொறுப்பும் கடமையும் இந்தியாவிற்கு இருக்கிறது. அயல்நாடு. ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். சமூக, கலாசார, மொழி ரீதியான நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் இந்தியா சரியாக செய்ய வேண்டும். செய்யும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. குறப்பாக மீள்குடியேற்ற விடயம், அரசியல் தீர்வு இவ்விரண்டு வியங்களிலும் நாம் இந்தியாவை முற்றுமுழுதாக நம்பியிருக்கிறோம். இந்தியாவும் ஒரு தீர்வைப் பெற்றுத் தருவோம் என்ற நம்பிக்கையையும், வாக்குறுதியையும் எமக்குத் தந்திருக்கிறது.

கேள்வி : ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட விடயங்கள் பற்றி கூறுவீர்களா?

பதில் : முக்கியமாக மீள்குடியேற்றம், முகாம்களில் தங்கியிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் நிலை, மீள்குடியேற்றம் காலதாமதமானால் உறவினர்களுடன் இணைய விரும்புவோரையாவது வெளியில் செல்ல அனுமதிப்பது தொடர்பாக பேசப்பட்டது. இரண்டு இலட்சம் பேரைக்கொண்ட முகாம் பகுதியில் ஒரு இலட்சம் பேரை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல அனுமதித்தால் எஞ்சியவர்களுக்கான இடப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மீள்குடியமர்த்தும் விடயத்தில் உதவத் தயாராக இருக்கிறோம். அது ஜனாதிபதியின் கைகளில்தான் இருக்கிறது- இதுவரையில் எம்மை முகாமுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. அரசாங்கம் சொல்வதையே நாங்கள் அந்த மக்களிடம் சொல்லலாம் அல்லவா! ஜனாதிபதி இதனை கருத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்டதா? அல்லது....

பதில் : கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு எட்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

எமக்குள் பிரச்சினைகள், அழுத்தங்கள் இருந்த போதிலும் ஒன்றிணைந்தே செயற்படுகிறோம். கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுடன் சேர்த்து ஏனைய தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்படவே விரும்புகிறோம்.

எதிர்காலத்தில் ஒரு தனி மனிதராக மக்கள் மத்தியில் சென்று எதையும் சாதிக்க முடியாது. ஏகப் பிரதிநிதித்துவம் எல்லாம் இப்போது இல்லாமல் போன விடயம். தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து என்ன செய்யப் போகிறோம் எவ்வாறான தீர்வை முன்வைக்கப் போகிறோம் என்பது பற்றியே யோசிக்க வேண்டும். மனந்திறந்து விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk