புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

 
.

'வாழ்வின் சகல துறைகளிலும் பெண் சமத்துவத்தை தேடுவதே இலக்கு'

'வாழ்வின் சகல துறைகளிலும் பெண் சமத்துவத்தை தேடுவதே இலக்கு'

கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கினாலும், நாட்டின் எல்லாப் பாகங்களிலுமுள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பெண்கள் தொடர்பில் நிலவும் அசமத்துவ நிலைகளை இனம் கண்டு ஆய்வு செய்து அவற்றைத் தீர்ப்பதற்கான செயல்திட்டங்களை செயற்படுத்தி வரும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்களில் ஒருவர் கலாநிதி செல்வி திருச்சந்திரன். பால்நிலை சமத்துவம் தொடர்பில் பல கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள இவர் இந் நிறுவனத்தின் வெளியீடான ‘நிவேதினி’யின் ஆசிரியர். பால்நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டங்களின் போதேற்படும் பிரச்சினைகள், தற்போது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பெண்களின் பிரச்சினைகள் பற்றி வாரமஞ்சரி வாசகர்களுடன் இவர் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிகள் பற்றி குறிப்பிடுங்கள்?

ம்... அவற்றை 5ஆக வகைப்படுத்தலாம். முதலாவது பால்நிலை சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம். ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சித் திட்டங்களில் பெண்களை மட்டும்தான் இணைத்துக் கொண்டோம். ஆனால் இப்போது இது ஆண் பெண் இருபாலாருக்குமான நிகழ்ச்சித் திட்டமாக விரிவாக்கப்பட்டிருக்கின்றது.

பெண்கள் கல்வி நிறுவனம் மேற்கொள்ளும் ஆய்வுகள் முக்கியமானவை. ஏனெனில் இவை செயல் நோக்கம் கொண்ட ஆய்வுகள். குறிப்பிட்ட ஒரு பகுதியின் பிரச்சினை என்னவென்பதை இனம்கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான செயல் திட்டங்களை தீட்டுகின்றோம்.

குறிப்பாக மலையகத்தில் செயற்படுத்தப்பட்ட கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளிலெல்லாம், மலையகத்தில் இவை தொடர்பில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என்பனவற்றை இணைத்து விழிப்புணர்வுச் செயலமர்வுகளை நடத்தினோம்.

வீட்டில் பெண்கள் வேலைக்கமர்த்தப்படும் போது ஊதியக் குறைவு, ஓய்வொழிச்சலற்ற வேலை என்பனவற்றுக்கெதிராக, பிரகடனமொன்றையும் நிறைவேற்றினோம். அது குறித்து அரசு, தொழிற்சங்கம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்பனவற்றின் கவனத்துக்கும் கொண்டு வந்தோம். அந்தப் பிரகடனத்தில்,

  •  பெண்களை வீட்டு வேலைக்கமர்த்துவோர் தொழிற் திணைக்களத்தில் தாம் வேலைக்கமர்த்தும் பெண்களைப் பதிவு செய்தல் வேண்டும். அப்பணிப்பெண் வேறிடத்துக்கு வேலைககுச் செல்லுமிடத்து அதுபற்றி தொழிற் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும். தவறின் 20,000 ரூபாய் அபராதம் அறவிடப்படும்.
  •  வீட்டுப் பணிப்பெண்களாகப் பணிபுரிவோர், முழுநேர, பகுதிநேர, குறிப்பிட்ட மணித்தியாலங்கள் என ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியலாம். ஒவ்வொரு வகைக்கும், தொழில்சார் வசதிகள் வழங்கப்படவேண்டும்.
  •  ஊழியர் சேமலாபநிதி, நம்பிக்கை நிதி என்பவற்றை வழங்கல்.
  •  பணிப் பெண்களுக்கான விடுமுறை நாட்கள் சரியாகத் திட்டமிடப்படவேண்டும். o வாரத்துக்கு ஒருநாள் /வருடத்துக்கு 30 நாள் மருத்துவ விடுமுறைகள் o பிரசவ விடுமுறை
  •  ஆகக் குறைந்தது மாதமொன்றுக்கு 3500 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
  •  முழுநேர வேலையாக இருப்பின் நாளொன்றுக்கு இரு தடவைகள் இரண்டு மணி நேர ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
  •  உறங்குவதற்கும், குளிப்பதற்கும் பிரத்தியேக வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
  •  ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டிருக்கும் பட்சத்தில் பணிப்பெண்களின் உறவினர்கள் வருகை தருவதற்கும் தொடர்பாடலுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
  •  பணிப்பெண்களின் வயது போன்ற விடயங்கள் எமது பிரகடனத்தில் உள்ளடக்க பட்டிருந்தன. எமது பணிகளில் மூன்றாவதாகக் குறிப்பிடக் கூடியது எமது சஞ்சிகை மற்றும் செய்தி மடல் வெளியீடுகள். பால் சமத்து வத்தை வெளிப்படுத்தும் இதழ் நிவேதினி. இது வருடத்துக்கு ஒரு தடவை வெளியிட ப்படுகின் றது. அதே போல, வரு டத்துக்கு இர ண்டு தடவைகள் பிரவாகினி எனும் செய்தி மடலை வெளியிடுகின்றோம். நாங்கள் மும் மொழிகளிலும் இயங்குகின்றோம் எமக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்களுடன் ஆங்கிலத்தில் தொடர்பாடல் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. பொது மக்களுடன் தமிழ், சிங்கள மொழிகளில் அணுகுகிறோம்.
  •  எமது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் மற்றுமொரு முக்கிய பணி கருத்தரங்குகளை நிகழ்த்துவது. இக்கருத்தரங்குகள் தேசிய, சர்வதேச மட்டத்தில் மும்மொழிகளிலும் இடம்பெறுகின்றன. கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்கில் இடம்பெறும் உரைகள் நிவேதினியில் வெளிவருகின்றன. சிலவற்றைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிடுகின்றோம்.

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தை நீங்கள் ஆரம்பித்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. நீங்கள் என்ன காரணத்துக்காக இதனை ஆரம்பித்தீர்களோ அதனை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்து கொள்ள முடிந்திருக்கிறதா?

ஆமாம் நிச்சயமாக பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த வருடம்தான் அதன் 25 ஆண்டு பூர்த்தியை நாம் கொண்டாடினோம். இந்த 25 ஆண்டுகளில் பெண்கள் தொடர்பில் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை நாம் செய்திருக்கின்றோம். பொதுவாக எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள், எம்மோடு பணியாற்றியவர்கள் எல்லோரும், இப்போது வெவ்வேறு இடங்களில் பணியாற்றினாலும் எம்மோடு தொடர்பு கொண்டு தமக்குத் தே¨வான உதவிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பெண்களுக்கான கற்கைநெறிகள் உள்ளன. பட்டதாரிப் பெண்கள், இக் கற்கைநெறியைப் பூர்த்திசெய்வதன் மூலம் முதுமானிக் கல்வியை இலகுவில் தொடர முடிகின்றது. எங்களுக்குக் கிடைக்கும் விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவோரே இச் சான்றிதழ் கற்கை நெறியைத் தொடர இயலும்.

சமூக - அரசியல் கலாசார ஸ்தாபனங்கள் அமைப்புகளில் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகளைப் பற்றி அறிவதும் ஆய்வு செய்து, இவ்வாய்வுகளின் மூலம் சமூக மட்டத்தில் ஆண், பெண்களின் உணர்வை மேம்படுத்தி அதன் மூலம அரச மட்டத்தில் கொள்கை மாற்றத்துக்கு வழி செய்தல், சமூகத்தில் ஓரம் கட்டப்பட்ட பெண்களின் உரிமை, வறுமை நீக்கம் பொருளாதார மேம்பாடு போன்றனவற்றை முன்னெடுத்தல்.

பெண் எழுத்தாளர்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிப்படுத்துவதற்கும், கருத்துக்களை பரஸ்பரம் பரமாறிக் கொள்வதற்கும் ஒரு களத்தை ஏற்படுத்துதல் உள்ளூரிலும் சர்வதேச ரீதியாகவும் பால்நிலை சமத்துவப் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குதல். பெண்கள் கற்கை நெறி சம்பந்தப்பட்ட வளங்கள் ஆய்வுகள் ஆவணங்களடங்கிய எமது நிறுவனத்தை ஒரு சிறந்த வலையமைப்பாக ஏனைய நாடுகளில் உள்ள இது போன்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து மேலும் சிறப்புறச் செய்வது, அரச, அரச சார்பற்ற செயற்பாட்டாளர்களினூடாக பாலியல் அசமத்துவ நிலைகளை இல்லாதொழிக்கவும் கொள்கைமாற்றங்களை ஏற்படுத்தவும் ஆதரவு தேடுதல், மதச் சார்பின்மை, பல்லின இணக்கப்பாடு, ஒற்றுமைத்தேடல் சமூக ஜனநாயகம் போன்ற விழுமியங்களினூடாக வாழ்வின் சகல துறைகளிலும், பெண் சமத்துவத்தை தேடுதல் என்பவற்றையே எமது குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறோம். இந்த 25 வருடங்களில் இவற்றை எமது குறிககோள்களாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். எமது கருத்தரங்குகள், அறிவு மேம்பாட்டுச் செயற்பாடுகளால் பயனடைந்த பெண்கள் அதிகம்.

அதேபோல, சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் கொழும்பின் சேரிப்புறமொன்றில் பாலியல் தொழில் புரிந்து வந்த 15 பேரை இனம் கண்டு, அவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, சமூகத்தில் இழிதொழிலாகக் கருதப்படும் ஒன்றை அவர்கள் புரிகின்றார்கள் என்பதை உணர்த்தி, அவர்கள் வீட்டு வேலைகள் செய்யக் கூடிய வகையில் அவர்களுக்கும் பயிற்சிகளை வழங்கினோம். இது குறித்த நல்ல விழிப்புணர்வுள்ள எமது தோழிகளின் வீடுகளிலேயே அவர்களை வேலைக்கும் அமர்த்தினோம். வெறுமனே விழிப்புணர்வுப் பயிற்சிகளை மாத்திரமே வழங்கிவிட்டு, அவர்களை விட்டு விட்டால் அவர்கள் ஏற்கனவே சந்தித்த மனிதர்களால் மீண்டும் அந்தத் தொழிலுக்கே தள்ளப்பட்டுவிடும் அபாயம் உள்ளதால் எமக்கு நன்கு தெரிந்த வீடுகளுக்கு வேலை செய்ய அனுப்பினோம். இப்போது அவர்கள் சுயமரியாதையும் வாழ்கின்றார்கள்.

(தொடரும்) நிஷா

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk