கிழக்காசியாவில் சனத்தொகை கூடியதொரு பிரதேசமாகவும், நிலப்பரப்பில் குறைந்தளவினைக்
கொண்ட பிரதேசமாகவும் காத்தான்குடி பிரதேசம் விளங்குகின்றது.
இங்கு நூறு சதவிகிதம்
முஸ்லிம்களே வாழ்கின்றனர். இந்நகரத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் தமிழ் பிரதேசங்கள்
காணப்படும் அதேவேளை இதற்கு கிழக்காக கடலும் தெற்காக ஆறும் அமைந்து காணப்படுகின்றது.
இங்குள்ள முஸ்லிம்களின் பூர்விகத்திற்கு வரலாறு ரீதியான பலவாறான கதைகள்
கூறப்படுகின்றது. அதில் வியாபார ரீதியாக அரேபியர்கள் கடல் மார்க்கத்தினை
பாவித்தமையினை நாம் அனைவரும் அறிவோம்.
இதன் ஒரு அங்கமாகத்தான் இங்கு அரேபியர்கள்
வருகை தந்து இங்குள்ள இலங்கையர்களை திருமணம் செய்தனர். அவ்வறானதொரு நிகழ்வின்
காரணமாகத்தான இங்கு குடியேற்றங்கள் நிகழ்ந்ததாக இப்பிரதேச வாசிகள்
குறிப்பிடுகின்றனர்.
எனவே, தமது மூதாதையரிடம் இருந்து பல்துறைகளை இங்குள்ள முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டனர்.
மருத்துவம், வியாபாரம் என்பவை குறிப்பிடத்தக்கவை. இதன் காரணமாகத்தான் இங்குள்ள
அநேகமானோர் வியாபாரிகளாக காணப்படுகின்றனர்.
மேலும் வெளிப் பிரதேசங்களுக்குச் சென்று
அன்று தொடக்கம் இன்று வரை இங்குள்ள வியாபாரிகள் வியாபாரம் செய்து வருவதாக
குறிப்பிடுகின்றனர்.
எனவே, இவர்கள் தமது ஜீவனோபாயத் தொழிலாக வர்த்தகத்தினை கொண்டிருந்தனர். இவர்கள்
காலவோட்டத்தில் வியாபாரத் துறையில் வளர்ச்சி கண்டதன் விளைவாக வெள்ளை நிறப் பப்ளின்
துணிக்கு அழகுப்படுத்தும் பலவாறான நிறங்களையும் டிசைன்களையும் இக்கூடியவர்களாக
காணப்பட்டார்கள்.
இது அவர்களுக்கு வெளியூர்களுக்குச் சென்று வியாபாரம்
நடாத்துவதற்கும் அதிகளவான வருவாயினை பெற்றுக் கொடுத்ததற்கும் காரணமாக இருந்தது.
மேலும் அவர்கள் வெளியூர்களிலிருந்து வெள்ளை நிறத்துணிகளை பெற்று வந்து இங்கு நிறம்
தீட்டி அதனை மொத்தமாக அவ்வூர் வியாபாரிகளுக்கும் கொடுத்துள்ளனர்.
இதற்கு பிற்பட்ட காலப் பகுதியில் தான் இங்குள்ளவர்கள் நமது நாட்டின் குடிசைக்
கைத்தொழிலாக விளங்கிய நெசவுத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதற்கு தமது
மூதாதையரிடமிருந்து பெற்றுக் கொண்ட அறிவும் இவர்களுக்கு பெரும் உதவி அளித்தது எனலாம்.
எனவே, 1970 தொடக்கம் 1994 வரையிலான காலப் பகுதிகளில் இங்குள்ள முஸ்லிம்களின் பிரதான
கைத்தொழிலாக விளங்கியது, இந்த நெசவு கைத்தொழிலாகும்.
இவர்கள் பாரியளவிலான முறையில் இப்பிரதேசத்தில் நெசவு தொழிற்துறை உற்பத்தியில்
ஈடுபட்டிருந்ததோடு, அக்காலப் பகுதிகளில் பலருக்கு வேலை வாய்ப்புக்களினையும்
அளித்துள்ளனர்.
காத்தான்குடி நெசவுத் தொழிலில் சிறந்திருந்த போது அத்தொழிலில் ஈடுபட்டிருந்த சிலரைச்
சந்தித்து பேசினோம். காத்தான்குடியில் புடவை மொத்த வியாபாரியாக விளங்கும் கச்சி
முஹம்மது நிலாம் 1978 முதல் 97 வரை நெசவில் ஈடுபட்டிருந்தவர்.
இவருக்குக் கீழ் பல
நெசவாளர்கள் தொழில் செய்து வந்தனர். நெசவுத் தொழில் பல குடும்பங்கள் வாழ
வழிசெய்திருந்தது.
1977 இல் ஆட்சியில் ஐ. தே. க. அமர்ந்த பின்னர் அவர்கள் திறந்த பொருளாதாரக் கொள்கையை
கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.
இதனால் இந்திய துணிமணிகளும் சாரங்களும் கைத்தறி ஆடைகளும்
பெரிய அளவில் இலங்கையில் இறக்குமதியாகின. இதன் விளைவாக காத்தான்குடி சுதேச நெசவுத்
தொழில் பாதிப்புகளை எதிர்கொள்ள ஆரம்பித்தது என்கிறார் நிலாம்.
மேலும் தமது பிரதேசத்தில் இருந்து ஒரு குழுவினர் குறிப்பிட்ட அந்த அரசாங்கத்தோடு
பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவும், தமது நியாயமான கோரிக்கைகளை
முன்வைப்பதற்காகவும் சென்றிருந்ததாகவும் ஆனால் இவர்கள் எவ்வாறான நியாயப்பாட்டினை
முன்வைத்த போதிலும் அது அங்கு எவ்விதமானதொரு பிரயோசனத்தினையும் இவர்களுக்கு
அளிக்கவில்லை என்று கூறுகிறார் இவர்.
நெசவுத் தொழில் நசிவடையத் தொடங்கிய போது காத்தான்குடி நெசவாளர்கள் குழுவொன்று
கொழும்புக்குச்சென்று சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்து, உள்ளூர்க்
கைத்தொழில் நசிவடைவதையும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்
கூறியிருக்கிறது.
எனினும் அரசு தரப்பில் திறந்த பொருளாதாரக் கொள்கையை
மாற்றுவதற்கில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டதோடு மாற்று வழிகள் பற்றி எதையும்
பேசவும் இல்லை என்றும் இவர் சொல்கிறார். இதனால் உற்பத்திக்கேற்ற சந்தை வாய்ப்பைப்
பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாம்.
இதனால் உற்பத்தியாளர் மிகவும் நஷ்டமடைந்தனர். அதே
சமயம் அதனை வாங்கி விற்கும் வியாபாரிகள் உற்பத்தியாளர்களை விடவும் அதிகளவான இலாபம்
ஈட்டினர்.
உற்பத்தியாளர்கள் நஷ்டத்தினை எதிர்நோக்குகின்றனர் என்ற விடயத்தினை வியாபாரிகள்
தெரிந்திருந்தும் குறைந்த விலைக்கே இந்த உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்திப்
பொருட்களை வாங்கினர்.
இவ்வாறு தொடர் நஷ்டத்திற்கு தம்மால் தொடர்ந்தும் உற்பத்தி
செய்ய முடியாததொரு நிலை உருவாகியது. இதனால் இத் தொழிலை கைவிட வேண்டியதாயிற்று.
மீண்டும் இதனை ஆரம்பிப்பதற்கான அவரது கருத்தினை கேட்ட போது சுயமான முறையில் டை
பண்ணக் கூடிய power loom முறை இந்தியாவினை ஒத்ததாக இங்கு அறிமுகப்படுத்தப்பட
வேண்டும் என்பது இவரது கருத்து.
இலங்கையில் an loom முறையே காணப்படுவதாகவும் இன்று
அதிகளவான உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டுமாயின் போட்டிச் சந்தையில் நாம்முன்னிலை பெற
வேண்டுமாயின் இந்த power loom முறையை அறிமுகம் செய்வது நல்ல இலாபத்தினை எமக்கு
ஈட்டித்தரும் என்கிறார் நிலாம்.
இவர் இன்னொரு கருத்தையும் கொண்டிருக்கிறார். மருதமுனையில் தற்போது கைக்கொள்ளப்படும்
நெசவுமுறையை காத்தான்குடியிலும் அறிமுகம் செய்தால் காத்தான்குடி நெசவு கைத்தொழிலை
மீளெழுச்சி பெறச் செய்யலாம் என்பது இவரது கருத்து.
எனினும் இவர் தனது மொத்த
வியாபாரத்தை கைவிட்டு மீண்டும் நெசவுத் தொழிலில் இறங்குவதற்குத் தயார் இல்லை.
நெசவின் மூலம் அப்போது சம்பாதித்தது குறைவு என்று காரணம் காட்டும் நிலாம், அப்போது
இவர் எதிர்கொண்ட கஷ்டங்களை இன்னும் மறந்துவிடவில்லை.
காத்தான்குடியை அண்டிய கிராமமான பாலமுனையில் நெசவாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு
வருகிறார்கள். பாலமுனை பிரதான வீதியில் வசிக்கும் அஹமது லெவ்வை சம்சு சலாஹ் என்பவரை
இங்கு சந்திக்க முடிந்தது.
மட்டக்களப்பு கல்லடியில் நெசவு போதனாசிரியராக இவர் கடமை
புரிந்து வருகிறார். 1993 ஆம் ஆண்டுக்கு முன்னர் இவரும் நெசவாளராக விளங்கியவர் தான்.
அரசாங்கத்தின் அன்றைய பொருளாதாரக் கொள்கையும் சுதேச உற்பத்தித் துறையை
காப்பாற்றுவதில் எந்த ஆர்வமும் காட்டாத பாராமுகமுமே இப்பகுதியில் இயங்கி வந்த ஒரு
சுதேச மற்றும் கிராம மட்டத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த தொழில்துறை நசிந்து
போகக் காரணம் என்கிறார் இவர்
காத்தான்குடியில் 85 சதவீதமானவர்கள் இந்த நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும்
பாலமுனையில் 100 சதவீதமானவர்கள் தமது ஜீவனோபாயத் தொழிலாக இந்த தொழிற் துறையினையே
கொண்டிருந்தனர்.
நாம் எமது உள்ளூர் உற்பத்தியான சாரத்தை நூறு ரூபாக்கு விற்பனை
செய்த வேளையில் இந்தியாவிலிருந்து அரசினாலும் மொத்த வியாபாரிகளினாலும் இறக்குமதி
செய்யப்பட்ட மடிச்சாரமானது எண்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே, இதனுடன்
தாம் போட்டி போடுவது முடியாததொரு விடயமாக இருந்தது.
காத்தான்குடி வியாபாரிகள் தமது உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு
செல்லக்கூடியவர்களாக இருந்தனர். ஆனால் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இவர்கள்
வெளிநாடுகளுக்கு இடம்பெயர வேண்டியதாயிற்று.
தமது பொருளாதாரத்தில் ஏற்பட்ட வறுமை நிலை
காரணமாக தமது உற்பத்திக்கான சந்தை வாய்ப்புக்கள் குறைவடைந்தமையும் தொழில் நசிவுக்கு
காரணமாயின. உற்பத்திப் பொருட்களை சந்தப்படுத்துவதிலும் பல சிரமங்களை உள்நாட்டு
மோதல்கள் தோற்றுவித்திருந்தன என்றும் இவர் தெரிவிக்கிறார்.
இவ்வாறாக உற்பத்திகள் வீழ்ச்சியடைவதற்கு அமைந்த காரணிகளை நாம் சுருக்கமாக தொகுத்து
நோக்குவோமாயின் அது பின்வருமாறு காணப்படுகின்றது.
o அன்று ஆட்சி புரிந்த அரசாங்கத்தினது ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் இந்த
உற்பத்தியாளர்களுக்கு உரிய முறையில் அளிக்கவில்லை.
o மேலும் அவர்கள் மேற்கொண்ட உற்பத்தி நஷ்மடைவதற்கு காரணமாக விருந்த விடயங்கள்
உற்பத்தியாளர்களுக்கு சீர்செய்து கொடுக்கப்படாமை. § உற்பத்தியாளர்களுக்கான தறிகளை
பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட சிரமம்
o முதலீடு செய்து தொழிற்துறைகளில் ஈடுபட முடியாமை.
o வெளிநாட்டு வேலை வாய்ப்பினை அதிகளவான இளைஞர், யுவதியர் பெற்றுச் சென்றமை.
o நெசவு துறையில் நவீனத்துவம் புகுத்தப்படாமை
o போட்டிச் சந்தைகளுக்கு ஏற்ற விதத்திலான உற்பத்தியின்மை
o குறிப்பிட்ட அரசாங்கத்தினது வெளிநாட்டுக் கொள்கை
o உள்நாட்டு உற்பத்திகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்காமை.
இவ்வாறான பல விடயங்களினை நாம் குறிப்பிடலாம். அதே போன்று இத்தொழில் காத்தான்குடியில்
காணப்பட்ட போது பின்வரும் விதத்தில் வேலை வாய்ப்பினை இங்குள்ளவர்கள் பெறக் கூடியதாக
இருந்தது.
o பசைப்போடுவோர்
o நிறம் இடுவோர் (டை போடுதல்)
o நூலை சுத்திக் கொடுப்போர்
o விதவைமார் தமது ஜீவனோபாயமாக கொண்டு செயற்பட்டனர்.
o அதிகளவான முதலீடுகள் இன்றி மனித வளம் முக்கியமாக கருதப்பட்டமை
o வெளியூர்களிலிருந்து நிறம் கொண்டு வந்து கொடுப்போர்
o விற்பனையில் ஈடுபடுவோர். வியாபாரிமார்
o தமது பிரதேசத்திலிருந்து உற்பத்திப் பொருட்களை நாடு முழுக்க கொண்டு செல்லும் போது
அங்குள்ள பொருட்களை தமது காத்தான்குடி பிரதேசத்திற்குகொண்டு வந்து விற்பனை செய்தமை.
o தறியடிப்போர்
மேலும் காத்தான்குடியின் மூத்த பெண் வைத்தி யர்களில் ஒருவரான ஏ. எல். பத்று நிசாவை
தொடர்பு கொண்ட போது, அக்காலப் பகுதியில் குடும்பங்களி டையே அதிகளவாக வறுமை நிலை
காணப்பட்டதாகவும் தான் கற்கும் போது கூட தனது தந்தையிடம் சிலர் பெண்ணை சிரமங்களை
மேற்கொண்டு வைத்தியத் துறையில் கற்பிக்கத் தேவையில்லை என்ற கருத்துக்களை பலர்
முன்வைத்ததாகவும் ஆனால் அதிபரான தனது தந்தையின் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக
தான் இன்று ஒரு வைத்தியராக இருப்பதாகவும் கூறினார்.
அன்று அதிகளவான பெண்களை
பாடசாலையையவிட்டு இடைவிலக்கி நெசவு நெய்தலில் அவர்களது பெற்றோர் ஈடுபடுத்தியதாகவும்
குறிப்பிட்டார்.
எது எவ்வாறாயினும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட வீழ்ச்சிக்கான காரணிகளை நிவர்த்தி
செய்து மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளும் போது இந்த நெசவுத் துறை காத்தான்குடியில்
மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதை அறிய முடிகிறது.