புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

 
.
இ;னப் பிரச்சினைக்கான தீர்வு அடுத்த சந்ததி வரை காத்திருக்க முடியாது

இ;னப் பிரச்சினைக்கான தீர்வு அடுத்த சந்ததி வரை காத்திருக்க முடியாது

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியின் இன்றைய கட்டத்தைச் சரியாக மதிப்பீடு செய்வதிலேயே தமிழ் மக்களின் விமோசனம் தங்கியுள்ளது. சமஷ்டியில் ஆரம்பித்துத் ‘தனிநாடு’ வரை தொடர்ந்த விடுதலைப் போராட்டம் இன்று பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற நிலைக்குப் பின்தள்ளப்பட்டிருக்கின்றது.

அதே நேரம், சொந்த இடங்களில் வழமையான தொழில்களைப் புரிந்து வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து நிரந்தரமற்ற தொழில்களை நம்பி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களின் ஒரு பகுதியினர் முகாம்களில் வாழ்கின்றனர்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு முயற்சி சாண் ஏற முழம் சறுக்கிய கதையாகிவிட்டது. இந்த நிலை ஏற்பட்டதற்கு இரண்டு பிரதான காரணங்களைக் கூறலாம்.

முதலாவது காரணம் தனிநாடு அமைப்பதென்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம். பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்தை நிராகரித்தமை இரண்டாவது காரணம்.

தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கை தமிழ் மக்களில் பெரும்பாலானோரினால் அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்ததிலும் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியதிலும் தமிழரசுக் கட்சியே பிரதான பாத்திரம் வகித்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

தனிநாட்டுத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற அவசர முடிவு. அரசியல் தீர்வுக்குச் சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுக்கும் முயற்சியை இத் தீர்மானம் வெகுவாகப் பலவீனப்படுத்தியது. மறுபுறத்தில் தமிழ் இளைஞர்களை நடைமுறைச் சாத்தியமற்ற தவறான வழிக்குத் திசைதிருப்பியது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் அமைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியாத நிலை உருவாகியதற்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் தோற்றுவித்த தனிநாட்டு மாயை பிரதான காரணம்.

இந்த மாகாண சபை இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக இல்லாத போதிலும், தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் ஏற்றுக்கொண்ட மாவட்ட சபையிலும் பார்க்க எவ்வளவோ மேலானது.

மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியாத நிலையை உருவாக்கியதில் புலிகளுக்குப் பிரதான பங்கு உள்ளதெனினும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் அப் பொறுப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது.

புலிகளின் நிலைப்பாட்டுக்கு ஆரம்பத் தில் மெளன அங்கீகாரம் வழங்கிய இத் தலைவர்கள் காலப் போக்கில் பகிரங்கமாக மாகாண சபையை எதிர்த்தார்கள்.

மாகாண சபையை ஏற்றுக்கொண்டு கூடுதலான அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் முழுமையான தீர்வை அடைய முடிவதோடு தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் நெருக்கடிகள் ஏற்படுவதைத் தடுக்கவும் முடியும் என்பது பற்றியோ மாகாண சபை செயற்படாமற் போவது வடக்கு, கிழக்கின் இணைப்பு நிலைத்து நிற்பதைக் கேள்விக்குறி ஆக்கிவிடும் என்பது பற்றியோ இத் தலைவர்கள் சிந்திக்கவில்லை. இது பாரிய தவறு என்பதற்குப் பிந்திய நிகழ்வுகள் சான்று.

ஒரு சந்தர்ப்பத்தைத் தலைவர்கள் தவறவிட்ட நிலையில் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டம் இன்னொரு சந்தர்ப்பமாக அமைந்தது. இத்தீர்வுத் திட்டம் சமஷ்டி அடிப்படையைக் கொண்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக இத் தீர்வுத் திட்டத்தில் வலுவான ஒரு பாதுகாப்பு ஏற்பாடும் இருந்தது. உத்தேச பிராந்திய சபைகளின் எல்லைகளையோ அதிகாரங்களையோ அச் சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயங்களையோ அச் சபைகளின் சம்மதம் இல்லாமல் மாற்ற முடியாது என்பதே அந்த ஏற்பாடு.

இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமை மற்றும் அவர்கள் கணிசமான எண்ணிக்கையி னராக உள்ள பிரதேசங்களில் தமிழ் மொழி யில் அரச கருமங்களை ஆற்றும் உரிமை ஆகியவை தொடர்பாகவும் முன்னேற்றகரமான ஏற்பாடுகளை அது கொண்டிருந்தது.

இத் தீர்வுத் திட்டத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி முதலில் ஆதரித்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்போது அங்கத்துவம் வகிக்கும் மற்றைய கட்சிகளு டனும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் சேர்ந்து பின்னர் எதிர்த்தது.

இத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததற்குத் தமிழ்த் தலைவர்கள் பல காரணங்களைக் கூறுகின்ற போதிலும் தனிநாட்டு மாயைக்குள் அவர்கள் சிக்கியி ருந்ததே உண்மையான காரணம்.

இத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தவர்கள் உடனடி யாகப் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படத் தொடங்கினார்கள்.

மேலே குறிப்பிட்ட இரண்டு தவறுகளுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு இந்த இரண்டு தவறுகளும் பிரதான காரணம் என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

அரசியல்வாதிகள் தவறு விடுவது சகஜம். அத் தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு சரியான பாதையில் பயணிப்பது தான் நாகரிகமான அரசியல்.

இன்றைய நிலையில் அரசியல் தீர்வு முயற்சியை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றிய நிதானமான சிந்தனை வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்துக்கு மேலான தீர்வொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமே அது சாத்தியமாகும்.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக அரசியலமைப்புத் திருத்தமொன்றைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை.

அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. தீர்வு முயற்சியில் பங்குபற்ற மறுத்து ஒதுங்கி நிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்குமென நம்ப முடியாது.

இந்த நிலையில் பதின் மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து தீர்வு முயற்சியை நகர்த்துவதே ஆக்கபூர்வமான அணுகுமுறை. நடைமுறைச் சாத்தியமானதும் அதுவே.

மேலும், வெவ்வேறு காலகட்டங்களில் இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வாழும் மக்கள் அந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கும் மாகாண சபை நடைமுறைக்கு வருவது அவசியமாகின்றது- மாகாண சபை செயற்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இன்று பிற இடங்களில் வாழும் மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியும்.

தங்கள் சொந்த வீடுகளில் வாழ முடியும். இயல்பு வாழ்க்கையை அவர்கள் ஆரம்பிக்க முடியும். சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடமுடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மாகாண சபையை ஆரம்ப அமைப்பாகக் கொண்டு முழுமையான அரசியல் தீர்வுக்கான முயற்சியை முன்னெடுக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பம் முதல் பதின்மூன்றாவது திருத்தத்தை எதிர்த்து வந்திருக்கின்றது. மாகாண சபையை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூட்டமைப்புத் தலைவர்கள் பகிரங்கமாகப் பேசியிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் இப்போது மாகாண சபையை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு மானசீகப் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினையோடு பார்க்கும் போது தனிப்பட்டவர்களின் மானசீகப் பிரச்சினையைப் பெரிதுபடுத்த முடியாது.

புலிகளுடனான நேச உறவின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டவர்கள். எனவே, அந்த வழியிலிருந்து விலக முடியாத நிலையில் அவர்கள் மாகாண சபையை நிராகரித்துப் பேசியிருக்கலாம்.

இன்று நிலமை மாறிவிட்டது. புலிகள் இப்போது அரங்கில் இல்லை. தனிநாடு ஒருபோதும் சாத்தியமாகக் கூடியதல்ல என்பது இப்போது தெளிவாகிவிட்டது. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைச் சாத்தியமானதும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதுமான அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும்.

மாகாண சபையையும் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் எதிர்த்த தமிழ்த் தலைவர்கள் அதிகாரம் போதாது என்பதையே காரணமாகக் கூறினார்கள்.

அதாவது கூடுதலான அதிகாரம் தேவை எனக் கூறியே ஒவ்வொரு தீர்வும் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் எதுவும் இல்லாத நிலையையே இந்த நிராகரிப்பு ஏற்படுத்தியிருக்கின்றது.

முழுமையான அதிகாரங்கள் இல்லாத எந்தத் தீர்வையும் ஏற்க முடியாது என்ற இறுக்கமான நிலைப்பாட்டைக் கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போதும் பின்பற்றுவார்களேயா னால் பிரச்சினையை அடுத்த சந்ததிக்குக் கையளிப்பதாக அமைந்துவிடும்.

அடுத்த சந்ததி நிம்மதியாக வாழ வேண்டும். சரியான அணுகுமுறையைப் பின்பற்றினால் இந்தச் சந்ததியிலேயே பிரச்சினையைத் தீர்க்கலாம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk