உலகெங்கிலும் நாளாந்தம் பல்வேறு வகையான புதிய புதிய தொற்று நோய்கள் பற்றிக்
கேள்வியுறுகின்றோம். பன்றிக் காய்ச்சல், டெங்கு போன்ற தொற்று நோய்களால் ஏற்படும்
உயிரிழப்புகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி நாம் நன்கு
அறிந்திருக்கிறோம். அன்று இலங்கையில் தொற்று§நோய்களைத் தடுப்பதற்கு வழங்கப்படும்
முக்கியத்துவம் தொற்றா நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதனாலேயே அதனாலேயே தொற்று
நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இலங்கையில் 70 சதவீதத்திலும் அதிகமானதாக
இருக்கின்றது.
இந்நிலையில் தொற்றா நோய்கள் என்பவை எவை என்பதை அறிந்திருப்பது முக்கியமானது. இதயம்
மற்றும் குருதிக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, நீண்ட காலம்
நீடிக்கும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய்
என்பனவற்றை தொற்றா நோய்களாக வகைப்படுத்தலாம். இருதயம் மற்றும் குருதி
நாளங்களிலேற்படும் நோய்களால் ஏற்படும் மரணங்கள் புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுப்
பழக்க வழக்கங்கள், உடல் செயற்பாடின்மை என்பனவற்றாலேயே ஏற்படுகின்றன.
உலகில் ஏற்படும், மரணங்களுக்கான முதன்மைக் காரணியாக இருதய நோய்களும், பாரிசவாதமும்
அமைகின்றன. முழு உலகிலும் இந்நோய்களால் வருடாந்தம் 17.2 மில்லியன் பேர்
உயிரிழக்கின்றனர். இது குறித்து மக்களுக்கு அறிவூட்டும் முகமாகவே உலக இருதய தினம்
இன்று செப்டம்பர் 27ம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதயத்துக்கு இணக்கமான வேலைத்தளம் என்பது இம்முறை உலக இருதய தினத்தின் தொனிப்பொருளாக
இருக்கின்றது.
எம்முள் பலர் விழித்திருக்கும் நேரங்களில் பாதி நேரத்தை வேலைத்தளங்களிலேயே
கழிக்கின்றோம். பெரும்பாலான வேலைத்தளங்கள் தமது ஊழியர்களிடமிருந்து இயன்றவரை
வேலைவாங்க முயற்சிக்கின்றனவே தவிர அதனால் ஏற்படும் ஆரோக்கிய ஆபத்துகள் பற்றி கவலை
கொள்வதில்லை.
ஆரோக்கியமான சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வேலைத்தளம் பல
நோய் அபாயங்களைத் தவிர்க்க வல்லது. கடுமையாக வேலை செய்பவர்கள் இதயமற்றும் பக்க
வாதத்தினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உலகில் இம் மரணங்களுக்குக்
காரணமாகும் இருதய நோயும், பாரசிவாதமும் இந்நோய்களிலடங்கும்.
அதனாலேயே 2009 ம் ஆண்டின் சர்வதேச இருதய தின தொனிப்பொருள் “இதயத்துக்கு இணக்கமான
வேலைத்தளம்” என்பதாய் அமைந்திருக்கிறது. அவ்வாறான வேலைத்தளங்களின் உருவாக்கத்துக்கு
சகலரது பங்களிப்பும் அவசியமானதாகையால் பாரிய மாற்றத்துக்கான சிறுசிறு
பங்களிப்புகளைச் செய்யுமாறு சகலருக்கும் இன்றைய தினத்தில் அழைப்பு
விடுக்கப்படுகின்றது.
நிறுவனங்கள் தாம் விரும்பிய அடைவு மட்டத்தை அடைவதற்கு ஊழியர்களை ஆரோக்கியத்துடனும்
மகிழ்ச்சியுடனும் வைத்திருப்பது அவசியமானது என்பது இனம் காணப்பட்டுள்ளது. அதனாலேயே
பல நிறுவனங்கள் தமது நிகழ்ச்சி நிரலில் ஊழியர்களின் சுகாதார மேம்பாட்டுக்கான
நிகழ்ச்சித்திட்டங்களை உள்ளடக்கியுள்ளன. பெரும்பாலும் பாரிய ஓரிரு நிறுவனங்ளே
அவ்வாறான சுகாதார நிகழ்ச்சி வேலைத்திட்டங்களை தமது ஊழியர்களுக்கு வழங்குகின்றன.
சிறிய நிறுவனங்களிலும், சுய தொழிலிலும் தனிநபர்களே இதற்கான நடவடிக்கைகளையும்,
முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரமான, ஆரோக்கியமான வேலைத்தளங்களை உருவாக்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன?
உங்களின் பகல் பொழுதுகளில் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அதற்காக
விளையாட்டொன்றைத் தொடங்குங்கள் அல்லது உடற்தகைமைக் குழுவில் பங்குபற்றுங்கள்.
அதுபற்றி உங்கள் நண்பர்களுக்கும் கூறுங்கள்.
உங்கள் நிறுவனக் கட்டடத்தைச் சுற்றி உலாவுங்கள். அல்லது பகற்போசன இடைவேளையின்
போது உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களது வேலைகளுக்கு மத்தியில் சுறுசுறுப்பான
உடற்செயற்பாடுகளையும் உள்ளடக்குங்கள். ஏனையோரையும் அவ்வாறு செய்யுமாறு தூண்டுங்கள்.
தினமும் உடல் ரீதியில் சுறுசுறுப்பாக இருப்பதால் பெறத்தக்க நன்மைகள் தொடர்பான
தகவல்களை உங்கள் சகபாடிகளுக்கு வழங்குங்கள்.
சுறுசுறுப்பாக இருக்கவிரும்பும் ஏனையோருக்கும் அதனைத் தொடங்க உதவி செய்யுங்கள்.
புகைப்போரற்ற சூழலை உருவாக்க முயலுங்கள்.
உங்களது சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கியமான உணவைக் கோருங்கள். அல்லது சுழலில்
ஆரோக்கியமான உணவு பரிமாறுகின்ற உணவகங்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
சுய தொழில் செய்பவராக இருந்தால் வேலைத்தள நிகழ்ச்சி நிரலை அமைத்துக் கொள்வதற்கான
யோசனைகள்
ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல்
நாளொன்றுக்கு குறைந்தது 5 பரிமாறலளவு Servings பழங்கள்- காய்கறிகளை உண்ண
வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பட்டியலைத் தெரிவு செய்யுங்கள் அல்லது உங்கள் உணவை
வீட்டிலிருந்து கொண்டு செல்லுங்கள். வாசிப்பதற்கு இது கஷ்டமாக இருக்கும். இதன்
அர்த்தம் முடிந்தவரை மரக்கறிவகைகளை அதிலும் சாலட் என அழைக்கப்படும் பச்சைக்
காய்கறிகளை சேர்த்துக் கொண்டு கொழுப்பு உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
வீட்டுச் சாப்பாடு என்றால் கொஞ்சம் ஆரோக்கியம்.
சுறுசுறுப்பாக இருங்கள் இதயத்தைப் பேணுங்கள்
30 நிமிட நேர உடற்செயற்பாடுகள் மாரடைப்பையும் பக்க வாதத்தையும் தவிர்க்க உதவும்.
அது உங்கள் வேலையிலும் அனுகூலமாயமையும். உங்கள் நிறுவனம் உயரமான கட்டடமாக இருந்தால்
லிப்டை பயன்படுத்தாமல் படியை பயன்படுத்தி ஏறி இறங்குவதும் ஒரு உடற்பயிற்சியாக
அமையும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உலாவுங்கள் முடிவிடம் நெருங்கு முன்னர் பஸ்
வண்டியை விட்டு இறங்குங்கள். மீதித் தூரத்தை நடந்து செல்லுங்கள்.
உங்கள் உப்புப் பயன்பாட்டை நாளொன்றுக்கு ஒரு கரண்டியளவுக்கு மட்டுபடுத்துங்கள்.
பதப்படுத்திய உணவைத் தவிருங்கள். அவை பெரும்பாலும் அதிகளவிலான உப்பினைக்
கொண்டிருப்பவை.புகையிலைப் பயன்பாட்டைத் தவிருங்கள்
முடியுரு நாடி, இதய நோய், மாரடைப்பு ஏற்படும் ஆபத்து என்பன ஒரு வருடத்தில்
அரைவாசியாகக் குறையும். காலப்போக்கில் சாதாரண நிலையடையும்.
ஆரோக்கியமான உடல் நிறையைப் பேணுங்கள்
உப்பு உள்ளெடுத்தலைக் குறைப்பதாலேற்படும் நிறைக் குறைவானது, குருதிய முக்கம்
குறைவடைய வழிவகுக்கும். பாசரிசவாதத்துக்கான முதன்மையான ஆபத்துக் காரணியாக உயர்
குருதியமுக்கம் காண்படுகின்றது.
தரவு எண்களை அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் குருதியமுக்கம், கொலஸ்டிரோல் மட்டம், குளுக்கோசு மட்டம், இடுப்பு இடை
விகிதம், உடல் திணிவுச் சுட்டி, என்பனவற்றை அறிந்து, உங்கள் ஒட்டுமொத்த
ஆபத்தினளவைக் கணிப்பிட்டு உங்கள் உடற்சுகாதாரத்தை மேம்படுத்தவென ஒரு திட்டத்தை
நீங்கள் வகுக்கலாம்.
இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பாரிசவாதத்தால் இறப்பவர்களில் அனேகம் பேர்
அவர்களின் வாழ்க்கையில் வினைத்திறன் மிக்க பருவத்தைச் சேர்ந்தவர்கள் அதாவது, 15
வயதுக்கும் 65 வயதுக்குமிடைப்பட்டவர்கள். எனினும் இந்நோய்கான காரணிகளுள்
பெரும்பாலானவற்றை அதாவது புகையிலைப் பாவனை, ஆரோக்கியமற்ற உணவு, சுறுசுறுப்பாகச்
செயற்படாமை, போன்றனவற்றை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள இயலும்.
உடற்செய்பாடுகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவோர் வேலையிலும் கருத்தூன்றிச் செயற்படுவர்.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவர். ஆராக்கியமான பணியாட்கள், நிறுவனமொன்றின் நலனில்
பல்வேறு வழிகளில், பொருளாதார பின்னடைவுகளின்போது கூட, அனுகூலமான பங்களிப்புக்களைச்
செய்ய முடியும்.
இதயத்துக்கு இணக்கமான வேலைத் தளங்களை உருவாக்குவதன் மூலம் நிறுவனங்களின் வளைத்திறன்
அதிகரிக்கும் வரவின்மை வீதம் குறைவடையும் நாட்கள் இழப்பு 20 சத வீதத்தால்
குறைவடையும், வைத்தியச் செலவு குறைவடையும் (தொழில் வழங்குனர், தொழிலாளர்
இருவருக்கும்) வேலைத்தளத்தில் காயமடைவது குறைவடையும், நிறுவனத்துக்கு நற்பெயர்
கிடைக்கும்.
உடற்செயற்பாட்டையும் ஆரோக்கியமான உணவ உட்கொள்ளலையும் மேம்படுத்துவதும்,
வேலைத்தளத்திலும் அதனது சூழலிலும் புகையிலைப்பாவனையை தடுப்பதும் எளிதாக
செலவேதுமின்றிச் செய்யகூடியதுமாகும்.
உலக இதய தினத்தை முன்னிட்டு கடந்த 22ம் திகதியன்று காதாரக் கல்விப் பணியகத்தில்
இடம்பெற்ற கருத்தரங்கில் பெறப்பட்ட தகவல்களினடிப் படையில் எழுதப்பட்ட கட்டுரை.