புத் 62 இல. 39

சர்வதாரி வருடம் புரட்டாதி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷவ்வால் பிறை 07

SUNDAY SEPTEMBER 27, 2009

 
.
கல்வித் தெய்வமாகப் போற்றப்படும் கலைமகள்

இன்று சரஸ்வதி பூஜை

கல்வித் தெய்வமாகப் போற்றப்படும் கலைமகள்

உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அமைந்திருப்பது சக்தி. அந்த சக்தியைத் தருபவளாகத் திகழ்பவள் அன்னை ஆதிபராசக்தி. அவளே தன் அம்சமாக முப்பெரும் சக்தியைத் தோற்றுவித்து, பிரபஞ்ச இயக்கம் சிறப்புற நடைபெறும் வகையில் திருவருள் பாலிக்கிறாள். இந்த சக்திக்குரியவர்களாக விளங்கும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை இந்து மக்கள் போற்றி வழிபடுகின்ற ஒரு விழாவாக - மனித குலத்திற்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும், சகல செல்வங்களையும் அருளும் பண்டிகையாக நவராத்திரி அமைந்துள்ளது.

தேக ஆரோக்கியம் எனும் உடல் வலிமை, ஐஸ்வரியம் எனும் பொருட் செல்வம், அறிவாற்றலைத் தரவல்ல கல்விஞானம் என்பனவற்றை வேண்டிச் செய்யும் வழிபாட்டுத் தத்துவத்தை நவராத்திரி வெளிப்படுத்துகிறது. வீரம், செல்வம், கல்வி என்று சொல்லப்படும் இவை மூன்றும் மனித வாழ்க்கைக்கு முக்கியமானவையாகும். வாழ்க்கையில் இம்மூன்றின் சிறப்புக்களையும் அடைவது அவசியமானது மட்டுமன்றி, இதன் ஒன்றிணைந்த வளர்ச்சி மனிதனில் நிகழும் போதுதான் அவன் பூரணத்துவமும் ஆளுமையும் நிறைந்தவனாகிறான். இத்தகையதொரு தனித்துவ சிறப்புக்குரியதாக நவராத்திரி அமைந்துள்ளது.

இந்து மதத்திற்கு உரியனவாக பல பண்டிகைகள், விழாக்கள் இருந்தபோதிலும், தனித்துவமான ஆன்மீகச் சிறப்பைக் கொண்டதாக நவராத்திரி விழா திகழ்கிறது- இது இந்து மக்களால் விரதமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. புரட்டாதி மாதத்து அமாவாசையை அடுத்துவரும் பிரதமை திதி முதலாக ஒன்பது நாட்கள் பக்திபூர்வமான வகையில் கொண்டாடப்படும் நவராத்திரி, பத்தாவது நாளான விஜயதசமியன்று வெற்றிகரமாக நிறைவுபெறுகிறது.

வாழ்க்கை சிறப்பானதாகவும், பலருக்கும் பயன்படும் வகையிலும் பலரும் போற்றும்படியாகவும் அமைய வேண்டுமென்றால் நமது செயல்கள் நல்லனவாக இருத்தல் வேண்டும். செயல்கள் நல்லனவாக அமைவதற்கு சிந்தனைத் தெளிவு ஏற்பட வேண்டும். அத்தகைய சிந்தனைத் தெளிவானது நமக்குக் கிடைக்க வேண்டுமானால், நாம் நல்லறிவினைத் தேர்ந்து பெற்றிருக்க வேண்டும். அத்தகைய நல்லறிவை நமக்கெல்லாம் அருளும் வகையில் ஞான வடிவாகிய சரஸ்வதிதேவி விளங்குகிறாள்.

கல்வித் தெய்வமாக, சகல கலைகளுக்கும் அதிபதியாகப் போற்றப்படும் பெருமைக்குரிய சரஸ்வதிதேவி கலைமகளாகவும் சிறப்புப் பெறுகிறாள். நவராத்திரியின் இறுதி மூன்று நாட்களும் சரஸ்வதிதேவியின் வழிபாட்டுக்குரியதாக அமைந்துள்ளது.

வெண்ணிற உடையுடனும், கையில் வீணையுடனும் வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை’ என்றும், ‘வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்’ என்றும் புலவர்கள் சிறப்பித்து பாமாலை சூட்டியிருக்கிறார்கள்.

பாரதியார், சரஸ்வதி தேவியைப் போற்றி துதி செய்திருப்பதும் சிறப்பாக நோக்கத்தக்கது.

‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்.’

சரஸ்வதிதேவியை சகல கலைகளுக்கும் அதிபதியாகப் போற்றி வணங்கும் குமரகுருபர சுவாமிகள் அருளிய ‘சகலகலாவல்லிமாலை’ எனும் பாமாலையின் முதலாவது பாடலில்.

‘வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென வெள்ளை யுள்ளத்
தண்டா மரைக்குத் தகாது
கொலோ சகமேழு மளித்
துண்டா னுறங்கவொழித் தான்பித்
தாகவுண் டாக்கும் வண்ணம்
கணடான் சுவைகொள் கரும்பே
சகல கலா வல்லியே’

என மிகவும் சிறப்பாக துதிசெய்துள்ளமையை இங்கு சிறப்பாகக் குறிப்பிடலாம்.

நவராத்திரி காலத்தில் வீடுகளிலும், பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களிலும் ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவை பூஜை வழிபாடுகளுடன் செய்ய முடியாதவர்கள், ஒன்பதாவது நாளன்று சரஸ்வதி பூஜையை மட்டும் சிறப்பாகச் செய்வது வழக்கம். சரஸ்வதி தேவியின் திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டி அலங்கரித்து, பால், பழம் முதலான பூஜைப் பொருட்களையும், வடை, கடலை, அவல் முதலான பலகார வகைகளையும் படைத்து, புத்தகங்கள், இசைக் கருவிகள் போன்றவைகளையும் வைத்து குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து தோத்திரப் பாடல்களைப் பாடி வழிபாடு செய்வார்கள். குறிப்பாக, பாடசாலை செல்லும் மாணவர்களைக் கொண்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் சரஸ்வதி பூஜை வழிபாட்டை தவறாது செய்வது வழக்கம்.

பத்தாவது நாளான விஜயதசமியன்று வித்தியாரயும் செய்வது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். பாடசாலைக்குச் சென்று கல்வியைத் தொடரவிருக்கும் சிறுபிள்ளைகளுக்கு அன்றைய தினம் நல்லறிஞர்களான பெரியவர்களால் உயிர் எழுத்துக்களை சொல்லிக் கொடுத்தும், பிள்ளைகளின் கைகளினால் எழுதுவித்தும் ஆரம்பிக்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இது அமைந்துள்ளது- இதனை ‘ஏடு தொடக்குதல்’ என்றும் சொல்வதுண்டு.

இதுவும் கலைமகளான சரஸ்வதி ‘>வியைப் போற்றித் துதித்து செய்யப்படும் கருமமாகவே அமைகிறது.

நவராத்திரி நாளில் கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவியைப் போற்றி வழிபட்டு கல்வியில் தேர்ச்சியும், கலைகளில் வளர்ச்சியும், அறிவில் முதிர்ச்சியும் பெற்று வாழ்வோமாக!


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk