புத் 62 இல. 37

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1430 ரமழான் பிறை 23

SUNDAY SEPTEMBER 13, 2009

 
.

ஆந்திர மாநிலத்தில் வேகமாக வீசும் வாரிசுரிமை அலை

ஆந்திர மாநிலத்தில் வேகமாக வீசும் வாரிசுரிமை அலை

பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகளில் வாரிசுரிமை நிலைகொண்டு விட்டது போல் தெரிகின்றது. ஒரு சில அரசியல் கட்சிகளைத் தவிர மற்றைய எல்லாக் கட்சிகளிலும் குடும்ப வாரிசுகள் தலைமைக்கு கொண்டு வரப்படுகின்றார்கள். காங்கிரஸ் கட்சியில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகம் வரை இதனை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய போக்கை அண்மையில் அதன் ஆசிரியர் தலையங்கத்தில் விமர்சித்த ‘இந்து’ பத்திரிகை இது பிரபுத்துவ அரசியலின் வெளிப்பாடு எனக் கூறியது.

குடும்ப வாரிசுரிமை நடைமுறைக்கு அப்பாற்பட்ட கட்சிகளுள் பிரதானமானவையாக இடதுசாரிக் கட்சிகளையும் திரினாமுல் காங்கிரஸையும் கூறலாம். இடதுசாரிக் கட்சிகள் சித்தாந்தத்துக்கு முதலிடம் கொடுப்பதால் குடும்ப அதிகாரம் அக்கட்சிகளைப் பாதிப்பதில்லை. திரினாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி திருமணமாகாதவர் என்பதால் வாரிசுரிமைப் பிரச்சினை அதிலில்லை. பாரதிய ஜனதாக் கட்சியும் வாரிசுரிமைத் தலைமைக்கு அப்பாற்பட்டதெனினும் அதன் தலைமையை ஆர். எஸ். எஸ் அமைப்பே தீர்மானிக்கின்றது.

காங்கிரஸ் மத்திய தலைமையைப் பின்பற்றி மாநில மட்டங்களிலும் வாரிசுகளை தலைமைப் பதவிகளுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. கர்நாடக சட்ட சபைத் தேர்தலில் தனது மகனுக்கு ரிக்கற் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் மார்க்கிரட் ஆல்வா காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து இராஜிநாமாச் செய்தார்.

தமிழ் நாட்டில் அமைச்சர் சிதம்பரமும் மாநிலத் தலைவர் தங்கபாலுவும் தங்கள் பிள்ளைகளை மாநிலத் தலைமையை நோக்கி வளர்ப்பதில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த அலை இப்போது ஆந்திர மாநிலத்திலும் வேகமாக வீசுகின்றது.

ஆந்திர முதல்வர் வை. எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகொப்டர் விபத்தில் இறந்தாரென்பது உறுதியாகியவுடன் அவரது மகனை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கிவிட்டது. ராஜசேகர ரெட்டியின் பூதவுடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே அவரது மகனும் கடப்பா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான வை. எஸ் ஜெகன்மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையில் சட்ட சபை உறுப்பினர்களின் கையொப்பங்கள் பெறும் நடவடிக்கை ஆரம்பித்து விட்டது.

ராஜசேகர ரெட்டியின் பூதவுடலை அடக்கம் செய்வதற்கு முன்னதாக 120 சட்ட சபை உறுப்பினர்கள் அக்கோரிக்கை விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டனர். இந்த எண்ணிக்கை ரெட்டியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டதும் 148 ஆக அதிகரித்தது.

ஆந்திர மாநில சட்ட சபையில் காங்கிரஸ் எம். எல். ஏக்களின் மொத்த எண்ணிக்கை 154 என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் இறந்தால் அவரது பதவிக்கு அவரது மகனையோ வேறு ஒரு குடும்ப வாரிசையோ நியமிக்கக் கூடாது எனக் கூற முன்வரவில்லை. அவ்வாறு நியமிக்கப்படுபவர் அப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பது அவசியம். ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் பதவிக்கான தகைமைகளைக் கொண்டுள்ளாரா என்பதையிட்டு காங் கிரஸ் கட்சியின் மத்திய தலைமை திருப்தியற்ற தாக இருக்கின்றதென தகவல்கள் வெளிவருகின்றன.

இவ்வாண்டின் முற்பகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன் ஜெகன் மோகன் ரெட்டி எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட்டவரல்ல. மிகவும் இளைஞரான அவர் தகவல் துறைசார்ந்த வர்த்தகப் புள்ளியாகவே இருந்தார். அவருக்குச் சொந்தமான தொலைக் காட்சி வலையமைப்பு அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்ற பிரசாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது.

ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்த காலத்தில் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு கூடுதலான சலுகைகளை வழங்கி வந்தாரென் றும் அவ்வாறான அணுகுமுறை தொடர்வதை உறுதிப்படுத் துவதற்காக இந்த வர்த்தக நிறுவனங்கள் ஜெகன்மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை க்குப் பின்னால் செயற்படுவ தாகவும் இந்திய அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் மத்திய தலைமை வேறு விதமாக சிந்திப்பது போல் தெரிகின்றது. அனுபவமிக்க ஒருவரை முதலமைச்சராக்குவதன் மூலமே கட்சியின் ஆதரவுத் தளத்தைப் பேண முடியும் என்று பல காங்கிரஸ் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மத்திய தலைமையின் இந்த சிந்தனைப் போக்கை அறிந்து கொண்டதாலேயே ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவான செயற்பாடுகள் தீவிர வடிவமெடுக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வை. எஸ். ராஜசேகர ரெட்டிக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கான கூட்டமொன்று ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்காலிக முதலமைச்சர் ரொசய்யா, மத்திய அமைச்சர் ஜய்ப்பால் ரெட்டி ஆகியோர் மேடைக்கு வந்த போது அவர்களுக்கெதிராக கூட்டத்தினர் கூச்சலிட்டனர். பின்னர் கூட்டத்தை நடத்திச் செல்ல முடியாதளவுக்கு அங்கிருந்தவர்கள் குழப்பம் விளைவித்ததால் கூட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோஷத்தையே கூட்டத்தினர் திரும்பத் திரும்ப முழங்கினார்கள்.

காங்கிரஸ் மத்திய தலைமை என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியல் அனுபவமும் நிருவாக அனுபவமும் உள்ள ஒருவரை முதலமைச்சராக நியமிக்குமா? அல்லது நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஜெகன்மோகன் ரெட்டியை நியமிக்குமா?


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk