அதிகாலையிலிருந்தே பிரம்படிப் பக்கமிருந்து துப்பாக்கிச் சன்னங்கள் முழங்குகின்ற
சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இடையிடையே ஷெல்லடிச் சத்தமும் எழுந்த
கொண்டிருந்தது. அவற்றின் சத்தம் காலைச் சாப்பாடு சாப்பிட்ட பின்னரும் ஓயவில்லை.
‘நல்ல சண்டை போல... இந்தியன் ஆமி வந்த பின்பு ஓய்ந்திருந்தது. இண்டைக்குத்
திரும்பவும் தொடங்கி விட்டது. என்ன கோதாரியோ? என்று மனைவி புறுபுறுத்தாள். நீங்க
வேடிக்கை பார்க்க வெளியில் கிளம்ப வேண்டாம்’.
அடுக்களைக்குள் மதியச் சமையல் வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த வேளை என் தூரத்து
மருமகள் ஒருத்தி வெளிப்படலையைத் திறந்துகொண்டு ஓடி வந்தாள். ‘ஐயோ மாமா... அம்மாவைச்
சுட்டு விட்டான்கள். சடலத்தையும் புளொக் செயினால நசித்து விட்டான்கள்...’ அலறிக்
கொண்டு ஓடி வந்தாள்.
1987 இல் ஐ. பி. கே. எஃப். இலங்கைக்கு வந்த பின்னர் அமைதி அழிந்த நாள். தீலிபனின்
சாத்வீக மரணத்தின் பின்னர் கடலில் பிடிபட்ட பதின்மூன்று புலிகளின் சையனட் அருந்தி
தற்கொலை மரணத்தைத் தழுவிய பின்னர் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில்
உருவான முறுகல் நிலையில் புலிகளின் தலைவரைக் கைது செய்யவிழைந்த இந்திய இராணுவக்
கமாண்டோக்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் ஹெலி மூலம் இறங்கும் போது
இடைநிலையில் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டனர்.
அதன் பலனாக பிரம்படி என்ற அயற்
கிராமத்தில் பதுங்கியிருந்த புலிகளின் பிருமகர்களைக் கைது செய்ய இராணுவம் கனத்த
வாகனங்களுடன் விரைந்து வந்தது. புளொக் செயின்கள் வந்தன. புலிகளின் மறைவிட வீட்டைச்
சரிவர அடையாளம் காணக் தவறிய இந்திய வீரர்கள் அப்பாவி மக்களின் வீடுகளுள் புகுந்து
கண்ணில் பட்டவர்களைச் சுட்டுத் தள்ளினர்.
பிரம்படி ஒழுங்கையில் கண்ணில்
எதிர்பட்டவர்களை துப்பாக்கிச் சன்னங்களால் நிலத்தில் சரிய வைத்தனர். 63 பேர்
கணக்பொழுதில் பலியாகினர். அவர்களில் மாம்பழ மச்சாளும் ஒருத்தி. அவளைச் சுட்டுத்
தள்ளிய இராணுவம் புளொக் செயினால் அவரது சடலத்தை மதித்துச் சதைக் கூழாக்கியது.
மாம்பழ மச்சாள் எவ்வளவு உயர்ந்தவர்! கலட்டி அம்மன்கோவிலடியில் புன்னை வளவில்
மச்சாள் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். மாலை நேரங்களில் புன்னை வளவில் கூடி
விளையாடுவது எங்களது வழக்கம். பல்வேறு விளையாட்டுகள். கொக்கான் வெட்டுதலில் மாம்பழ
மச்சாள் வலு கெட்டிக்காரி. போளை அடித்து மச்சான் மார்களுடன் விளையாடுவோம்.
அவ்வேளைகளில் அனைவருக்கும் தேநீர் தருவது மாம்பழ மச்சாளின் பணி.
மாம்பழ மச்சாள் எங்கள் குடும்பத்தில் அழகானவர். கலட்டிப் பையன்கள் பலர் அவர்
பின்னால் அலைந்தமை எனக்குத் தெரியும். ஆனால் மச்சாள் பெற்றோருக்கு அடங்கிய பெண்.
அம்மானின் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசத் தெரியாதவர். மச்சாளுக்குக் கலியாணம்
பேசி அலைந்ததாக எனக்குத் தெரியாது. சங்கானையில் பேசி வந்த முதல் கலியாணமே முற்றாகி
விட்டது. அம்மன் கோவிலில் வைத்துப் பெண்ணை ஒரு வெள்ளிக்கிழமை மாப்பிள்ளை
பார்த்தார். அன்றே பெண்ணைப் பிடித்து விட்டதாக மாப்பிள்ளை அண்ணர் தெரிவித்து
விட்டார். காலத்தைத் தாமதப் படுத்துவதிலும் அவருக்கு விருப்பமில்லை. மச்சாளுக்கும்
மாப்பிள்ளையைப் பிடித்துக் கொண்டதாம்.
ஒரு மழை நாளில் இருவருக்கும் திருமணம் நடந்ததாக எனக்கு நினைவு இருக்கிறது. திருமணம்
முடிந்த பின்னர் மாப்பிள்ளை அண்ணர் மாம்பழ மச்சாளுக்குக் கட்டிய இருபத்தைந்து பவுண்
தாலிக் கொடி பற்றிப் பேசிக் கொண்டார்கள். அதில் கோர்த்திருந்த நான்கு பவுண்களைப்
பற்றியும் பேசிப் பெருமைப்பட்டனர்.
‘தாலிக் கொடி நிறை இருபத்தைந்துக்குக் கூட இருக்கும் முப்பது
முப்பத்தைந்திருக்கும். சும்மா சொல்லக் கூடாது. மாப்பிள்ளைப் பொடியன் இலட்சணமாயும்
நல்ல சோடியாகவும் இருக்கான்’.
‘இவ்வளவு நிறையில செய்திருக்கிறியளே? கழுத்தோட அறுத்திடுவான்கள்...’ என்றேன் ஒரு
நாள் நான்.
‘அப்படி நடக்காது. தாலி கட்டுறது மாப்பிள்ளையின்ர பெருமையைக் காட்டவல்ல தம்பி. அது
ஒரு சம்பிரதாயம். பெண்ணுக்கு வேலி. கலியாணமானவள் என்ற அடையாளம். நீ எனக்குச்
சொந்தமானவள் என்று என்றும் கூறும் நினைவு கூரும் ஆபரணம். கணவன் படலைக்கு வெளியே
போகும் போது அவன் மார்பில் மனைவி கழட்டிப் போடும் கடைசி ஆபரணம். அதை உன் மச்சாள்
கவனமாகப் பார்ப்பா... தனக்கு ஒண்டு நடக்கிறதென்றால் அதற்கு முதல் கொடியைத் தந்து
விடுகிறதாச் சொல்லியிருக்கா’ என்று அவர் சிரித்தார்.
அந்த வருடம் கடும் மழை பொழிந்து ஊரெல்லாம் வெள்ளம் போட்டது. மழை ஓய்ந்த வேளையில்
மச்சாள் வீட்டுக்குப் போனேன். அங்கு கலியாண வீட்டுச் சமையல் நடந்து கொண்டிருந்தது.
காரணம் தெரியாமல் விழித்த போது மச்சாள் சிரித்தார்.
‘ஊரெல்லாம் வெள்ளம். பக்கத்து வளவுக்கை போட்டிருந்த குடுசைகளுக்கையெல்லாம் தண்ணி
போட்டுதாம். இருக்கேலாமை அந்தச் சனமெல்லாம் இங்கை வந்திட்டுது. சிலரைக் கொண்ணை
போய்ப் கூட்டி வந்திருக்கார். ஐந்தாறு நாட்களுக்கு வெள்ளம் வத்துமட்டும்
அவர்களுக்கு இங்கை தான் சாப்பாடு கண்டியோ?’
இப்படியான நேரங்களில் மாம்பழ மச்சாள் நிலை தளும்புவதில்லை. சிரித்த முகத்துடன்
இருப்பார். ஒரு தடவை ஒரு சனிக்கிழமை சங்கானைக்குச் சென்று வந்தார்கள். அண்ணரின்
தமைக்கையின் சா வீடு. இருந்தாற் போல் இரண்டு நாள் காய்ச்சலில் தன் ஒரே மகளையும்
கணவனையும் கைவிட்டு விட்டு அவ செத்துப் போனா.
சா வீட்டுக்குச் சொன்றார்கள்.
துடக்கைக் கழித்துக் கொண்டு திரும்பி வரும் போது அவர்களுடன் தாயை இழந்த பெண்ணும்
மனைவியை இழந்த மச்சானும் வந்தார்கள். தன் பிள்ளைகளில் ஒன்றாக வளர்த்து அப்பெண்ணைக்
கல்யாணம் கட்டிக் கொடுத்த பெருந்தன்மையை நானறிவேன்.
காலம் கடந்தது. பிள்ளைகள் திருமணமாகிப் பிரித்தார்கள் தன் மகன் வாங்கிய தலையாளி
வீட்டுக்கு கலியாணமாகாத தங்கள் கடைசி மகளுடன் குடிபெயர்ந்தார்கள். ஒரு மகள்
பிரம்படி ஒழுங்கையில் வசித்து வந்தாள். அந்தக் கல்யாணம் ஆகாத பெண் பதற்றத்துடன் ஓடி
வந்தாள். தாயைச் சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம் சடலத்தின் மீது புளொக் செயினை
ஏற்றிவிட்டதாம்.
அவள் பெரிதாக அழுதாள்.
இவ்விடத்துக்கு எப்படிச் செல்வது? ஒருவிதமாகப் பிரம்படிக்குச் சென்றோம். இந்த
ஒழுங்கை பிணக்காடாகக் கிடந்தது. வரிசையாகக் காணப்பட்ட வீடுகளிலிருந்து ஒப்பாரிக்
குரல்கள் ஒலித்தன. அவ்வீடுகளிலும் சா விழுந்திருக்கிறது. மாம்பழ மச்சாளின் சடலம்
இறைச்சிக் குவியலாக் கிடந்தது. முழங்கையில் கட்டப்பட்டிருந்த அம்மன்கோவில் மஞ்சள்
நூலிலிருந்து இது மாம்பழ மச்சாளின் சடலம் என அடையாளம் கண்டோம். இறைச்சிக்
குவியலாகக் கிடந்த சடலத்தைக் கூட்டி அள்ளி வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த பெரிய
றங்குப்பெட்டி ஒன்றிலிட்டேன்.
வடம் மாதிரி மச்சாளின் கழுத்தில் தொங்கிய தாலிக் கொடி நினைவு வந்தது. மீண்டும்
கிளறிப் பார்த்தோம் கொடி கிடைக்கவில்லை. முதலில சடலத்தைப் பார்த்த எவரோ களவாடி
விட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தோம்.
அப்போது தான் வீட்டில் அண்ணர் இல்லாதிருப்பது தெரிய வந்தது. பிரம்படி ஒழுங்கையில்
கிடந்த பிரேதங்களில் ஒன்றாக அண்ணர் கிடந்தார். வேட்டி சேர்ட்டுடன் சூடு பட்டு
விழுந்திருந்தார்.
இரண்டு பிரேதங்களையும் ஒன்றாக அப்படியே சுடலைக்கு எடுத்துச் செல்வதென
முடிவெடுத்தோம்.
சிதை அடுக்கி ஒன்றாக அதன் மீது வைத்தோம். கொள்ளி வைக்கும் போது ‘பரமநாதன் சங்கிலி
போட்டிருப்பார். ஒருக்காப் பாருங்கோ’ என்றார்கள். நல்ல வேளை. நினைவு
படுத்தினார்கள். அண்ணரின் சடலத்திலிருந்து சேர்ட்டை விலத்திப் பார்தேன். அப்படியே
உறைந்து போனேன்.
மாம்பழ மச்சாளின் தாலிக்கெடியுடன் அவர் அணியும் சங்கிலி அவர் மார்பில் கிடந்தது.
பிரம்படிப் பக்கம் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கியதும் மகளின் நிலைமை
அறிய மாம்பழ மச்சாள் புறப்பட்டிருக்கிறார். ஏதோ நினைவில் கழுத்திலிருந்த
தாலிக்கொடியை விறாந்தையிலிருந்த கணவனிடம் கழற்றிக் கொடுத்திருக்கிறார். அவரும் தன்
கழுத்தில் போட்டுக் கொண்டார்.
‘இதை வைச்சிரும் நான் பார்த்து வாறன். நகையளை ஏன் ஆமிக்கு முன் போடுவான்’.
‘கடைசியில உம்மட்டை தானே தர வேணும்...’ என்றிருப்பாவோ?
கணவனின் பிரேதம் வீட்டிலிருந்து புறப்படும் போது கணவரின் மார்பின் மீது என்றதும்
இணை பிரியாத தாலிக்கொடியைக் கழற்றி வைக்கும்படி மரபை மாம்பழ மச்சாள் கடைசியில்
நிறைவேற்றி விட்டார்.
அடுத்த வாரம்
ஏறாவு+ர் ஸர்மிளா ஸெய்யித் எழுதும்; நோன்புப் பெருநாள்
சிறப்புச் சிறுகதை
மருதாணி சிவத்தது