புத் 62 இல. 37

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1430 ரமழான் பிறை 23

SUNDAY SEPTEMBER 13, 2009

 
.
 ஒத்துழையாமை போராட்டம் பிசுபிசுத்து விடும் என்ற எதிர்பார்ப்புதான் குடைசாய்ந்து விட்டது

ஒத்துழையாமை போராட்டம் பிசுபிசுத்து விடும் என்ற எதிர்பார்ப்புதான் குடைசாய்ந்து விட்டது

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே. வேலாயுதம் நீண்டகால தொழிற்சங்க அரசியல் அனுபவமுடையவர். தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அவர்களின் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எதிரணி அரசியலில் இருந்தாலும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் ஓரணியில் நின்று குரல் கொடுக்கும் ஆளுமைமிக்கவர். ராஜகிரியவில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அவரைச் சந்தித்து உரையாடினோம்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய தொழிற்சங்கங்களில் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் ஒன்றாகும். பேச்சுவார்த்தைக்குச் செல்ல இன்னும் 20 நிமிடம்தான் இருக்கிறது. அதற்குள் பேசமுடியுமா என பேச்சைத் தொடர்ந்த அவரிடம் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது எனக்கேட்ட போது

பேச்சுவார்த்தையில் எடுத்த எடுப்பிலேயே அவர்கள் சம்பள உயர்வை தந்துவிட மாட்டார்கள். பல சுற்றுக்களாக பேச்சுக்கள் தொடர்கின்றன. சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்றளவில் எப்படியும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
தோட்டத்தொழிலாளர் சம்பளப் போராட்டம் தொடர்பாக மனம் திறக்கிறார் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர்
கே. வேலாயுதம்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கொருதடவை புதுப்பிக்கப்படுவது வழக்கம். கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவும் நடத்தப்படும் இப் பேச்சுவார்த்தை இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. காலம் கடந்தமைக்கான காரணம் என்ன?

சம்பள உயர்வென்பது ரூபாய் கணக்கான பிரச்சினை. இலங்கையிலுள்ள தொழில்துறைகளில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்ட தொழில்துறைதான் பெருந்தோட்டத்துறை. ஏனைய தொழில்துறைகளை எடுத்துக்கொண்டால் 300 பேரிலிருந்து ஆயிரம் பேர் வரையில்தான் தொழில் புரிவார்கள்.

பெருந்தோட்டத் துறையில் கம்பனித் தோட்டங்களில் இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும், ஏனைய பெருந்தோட்டங்களையும் சேர்த்தால் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் பணிபுரிகிறார்கள். நான்கு இலட்ச தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை இது. இதற்கு ஒரேயொரு ஒப்பந்தம்தான் செய்து கொள்ளப்படுகிறது.

இலங்கையில் வேறு எந்தவொரு தொழில்துறையிலும் இவ்வாறான ஒப்பந்தம் எதையும் செய்வதில்லை. இவ்வாறான ஒப்பந்தங்களைச் செய்யும்போது சில நாட்கள் செல்லும். ஒரு தொழிலாளியின் சம்பளத்தை ஒரு ரூபாவால் அதிகரிப்பதென்பது நான்கு இலட்ச ரூபாவால் அதிகரிப்பதாகும். ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் திகதியிலிருந்து ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் இடைக்காலத்திற்கான சம்பள உயர்வு நிலுவைகள் அனைத்தும் வழங்கப்படும்.

கூட்டு ஒப்பந்தத்தை இதர சிறிய தொழிற்சங்கங்கள் விமர்ச்சிக்கின்றனவே!

1972 இலிருந்து நான் தொழிற்சங்கவாதியாக இருக்கிறேன். எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. 1992 இலிருந்து பேச்சுவார்த்தை மூலமாக சம்பள உயர்வையும், பெற்றுக்கொடுப்பதுடன் தொழில் நிபந்தனை உட்பட தொழிலாளர்களின் நலன் சார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்வதில் ஒரு பங்காளியாக இருந்து செயற்படுகின்றோம்.

ஒரு பக்கசார்பாக பேசாமல் ஒரு பொறுப்புள்ள தொழிற்சங்கவாதியாக இருந்து நாட்டின் பொருளாதாரத்தையும் தொழில்துறையின் பொருளாதாரத்தையும் பாதிக்காத வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய உயரிய கடப்பாட்டைக் கெண்டிருக்கிறோம். அந்த ரீதியில் இதை பார்க்க வேண்மே தவிர வெறுமனே கோரிக்கையாக முன் வைத்து

மேசையில் அடித்து சத்தம் போடும் தொழிற்சங்கவாதியாக இருக்க விரும்பவில்லை. யதார்த்த ரீதியாக ஒரு சமூகத்தின் வாழ்க்கைப் பிரச்சினை அடிமட்டத்தில் இருந்து வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்க்கக்கூடிய வழிவகைகளை காண்பதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

வெறுமனே கோரிக்கைகளை விடுத்து இதன் மூலம் அரசியல் இலாபம் அடைய விரும்புகிறவர்கள் அல்ல நாம். ஒரு சமூகத்திற்காக பேரம் பேசுவதென்றால் என்னவென்று பலருக்கு புரிவதில்லை. முன்வைத்த சம்பளத்தை அதே அளவில் பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோருகிறார்கள். இல்லாவிட்டால் ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கூறுகிறார்கள்.

சந்தைக்கு சென்று மரக்கறியை பேரம் பேசுகிறோம். பேசிப்பேசி ஒரு முடிவுக்கு வருவோம். அது போலத்தான் இந்தக் கூட்டு ஒப்பந்தமும். நாம் ஒரு கோரிக்கையை முன் வைத்தோம். 500 ரூபா கேட்டபோது முதலாளிமார் சம்மேளனம் 12 1/2 வீதம் சம்பள உயர்வையே தருவதாக கூறுகின்றார்கள். முதல் வருடத்தில் 330 ரூபாவாகவும் இரண்டாம் ஆண்டு காலத்தில் 360 ரூபாய் தருவதாக கூறினார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ள வில்லை.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டன. இடையில் தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து கொண்டது. பேச்சுவார்த்தையின் போது ஒளிவு மறைவின்றி பேசுகின்றோம். மலையகத்தைப் பொறுத்தவரை தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் ஏழு பேர் சேர்ந்தால் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க முடியும். இன்று எழுபதுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.

மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்ததால் 65-70 வீத தொழிலாளர்களை உள்ளடக்கி இருக்கிறது. எமது அங்கத்தவர்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகள், தரவுகள் இன்னும் அவர்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதன் அடிப்படையில் 500 ரூபா சம்பள உயர்வை முன்வைத்தோம்.

இன்றைய சூழ்நிலையில் தேயிலை விலை சீராக இருக்கிறது. ஆனால் உற்பத்திதான் குறைந்திருக்கிறது. பேரம் பேசுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திலேயே பேசியிருக்கலாமே எனக் கேட்கிaர்களே?

அப்போது பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்தால் 300 ரூபா கூட கிடைத்திருக்காது. பேரம் பேசுவதற்கான சூழலை நாம் எதிர்பார்த்திருந்தோம். அதுதான் மிகவும் முக்கியமானது. அதற்கு ஒத்துவராத சூழலில் பேரம் பேசுவதில் எதுவித பயனும் இல்லை. பேரம் பேசத் தெரியாதவர்கள்தான் அப்படி பேசுவார்கள். இன்று அந்த சூழல் உருவாகியிருக்கிறது. உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கென்யா போன்ற வறட்சியை எதிர் கொண்டுள்ள நாடுகளிலிருந்து உலக சந்தைக்கு தேயிலை வருவது மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்த விலையேற்றம் இன்னும் சிறிது காலத்திற்கு தொடரும் என்றே நம்புகின்றோம்.

இந்நிலையில் சிறிய தொழிற்சங்கங்களின் பங்களிப்பு பற்றி....

தொழிற்சங்கங்கள் என்றால் என்னவென்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மலையகத்தைப் பொறுத்தவரையில் குடும்ப தொழிற்சங்கங்கள் அதிகரித்து வருகின்றன. இன்னும் சிலர் தொழிற்சங்கங்களின் வரைவிலக்கணம் தெரியாமல் இருக்கின்றனர். சில தொழிற்சங்கங்கள் வியாபாரமயமாகிவிட்டன. சில விலைக்கு வாங்கப்பட்டு குட்டி முதலாளிமார்களால் நடத்தப்படுகின்றன.

தொழிற்சங்கம் எந்த உயரிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதோ அதன் பலனை தொழிலாளர்கள் அனுபவிப்பதற்கு பதிலாக வீழ்ந்த தொழிற்சங்கத்தை பணம் கொடுத்து பெற்றுக் கொண்டவர்கள் தாங்கள்தான் தலைவர்கள் என கூறிக்கொண்டு அடிமட்டத் தொழிற்சங்க நடவடிக்கைக ளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தொழிற்சங்கமாகும்.

தொழிலாளர் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் தொழிற் சங்கங்களுக்கு பாரிய கடப் பாடு உள்ளது. எனவே தொழிற் சங்கங்களில் அங்கத்தவர்க ளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போதுதான் பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கும்.

பேரம் பேசும் ஆற்றல் மலையக தொழிற்சங்கங்க ளின் மத்தியில் பலவீனப் படுத்தப்பட்டுள்ளது. தொழிற் சங்கங்களின் அதிகரிப்பே இதற்குக் காரணமாகும். தமது அரசியல் நோக்கத்திற்காக வும், தாம் வாழ்வதற்காகவும் பெட்டிக்கடைகளைப் போல் தொழிற்சங்கங்கள் உருவாகி யிருக்கின்றன. நீண்ட வரலாற்றைக் கொண்ட தொழிற்சங்கத்திலிருந்து விலகிப் போனவர்கள் இக் கூட்டு ஒப்பந்தத்தை மரண சாசனம் என்றார்கள். கூட்டு ஒப்பந்தத்தை கிழித்தெறி வோம் என்கிறார்கள். இ.தொ.காவிலிருந்த போது அதற்காக கை தூக்கி ஆதரித்துப் பேசியவர்கள் தற்போது அங்கிருந்து விலகிச் சென்றதும் விமர்சிக்கிறார்கள்.

சிறிய தொழிற்சங்கங்களு க்கு பேரம் பேசும் ஆற்றல் இல்லாவிட்டாலும் கூட பேரம் பேசும் போது அந்த அமைப்புக்கள் உந்து சக்தியாக இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஆலோசித்து தொகையை தீர்மானித்தோம். சாதாரண அரச ஊழியர்களு க்கு 11,500 என 13,500 ரூபா வழங்கப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்தே 500 ரூபா என முன் வைத்தோம். 500 ரூபா, 600 ரூபா என கோருபவர்கள் அடிப்படைக் காரணம் எதுவும் இல்லாமல் வெறுமனே வெற்றுக் கோஷம் போடுகிறார்கள்.

பேரம் பேசும் தொழிற் சங்கங்களை காட்டிக் கொடு ப்பவர்கள் என்கிறார்கள். இதுவரை நாம் எதை காட்டிக் கொடுத்திருக்கி றோம்? நாம் ஏற்படுத்திய இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட எந்த சலுகை களையேனும் அவர்கள் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்களா? அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் சந்தா பணத்தைப் பெற்றுக்கொள் வதற்காக வீடு விடாகச் சென்று 25, 50 சதமென வசூலித்துக்கொண்டு அலுவ லகத்திற்கு வருவார்கள். இன்று செக்ரோலில் பணம் அறவிடப்பட்டு காசோலை மூலம் நேரடியாக சங்கங்களுக்கு அனுப்பப்படுகிறது. சேவையாற்றுவதற்கு சிறந்த கொள்கை இருக்க வேண்டும்.

அதைப் போன்று சிறந்த நிர்வாகத் திறமை இருக்க வேண்டும். நிதி வளம், ஆளணி இருக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கிறோம் எனக் கூறுபவர்கள் சந்தா வேண்டாம். நீங்கள் பெற்றுத்தரும் எதுவும் எமக்கு வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்களா? கூட்டு ஒப்பந்தத்தை குறை கூறுபவர்கள் தோட்டங்களில் தொழில் தகராறுகள், பிணக்குகள் குறையவும், ஏதேனும் செய்ய முடிந்திருக்கிறதா?

தொழிற்சங்க ரீதியாக கூட்டு ஒப்பந்தத்தினூடாக தொழிலாளர் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. 25 வீத தொழிலாளர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் அங்கத்தவர்களாக இல்லாத நிலையே தற்போது காணப்படுகிறது. இதனால் பேரம் பேசும் ஆற்றலும் சக்தியும் குறைந்திருக்கிறது. சம்பளப் பிரச்சினை பேசுவதற்கு மட்டும்தான் தொழிற்சங்கம் தேவை என நினைப்பது தவறு.

தொழிலாளர்களின் ஒத்து ழையாமைப் போராட்டம் தொடர்கிறதா?

சம்பள உயர்வு விடயத் தில் மிகவும் ஆழமாக யோசித்தோம். சூழல், தொழி லாளர்கள் மிகவும் சந்தோ ஷமாக கொண்டாடும் ஒரு பண்டிகை தீபாவளியாகும். அடுத்த மாதத்தில் தீபாவளி வருகிறது. தொழிலாளர்களை பாதிக்காத வகையிலும் அதே நேரம் முதலாளிமார், தோட்டக் கம்பனிகளுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற ரீதியிலும் தான் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தோம்.

வழமை போன்று தொழிலாளர்கள் தங்கள் வேலையை செய்கின்றனர். தோட்ட நிர்வாகம் கொடுக் கும் கட்டளைகளை ஏற்க மறுக்கிறோம். நிர்வாகங்களின் மேற்பார்வைகளை நிறுத்தி எங்களை நாங்களே நிர்வகிக்க முடியும் என்பதை இப்போரட்டத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறோம். உற்பத்தி செய்யப்படும் தேயிலையை தொழிற்சாலை களிலேயே முடக்கி வைத்திருக்கிறோம். சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததும் தேயிலையை வெளியில் கொண்டு செல்ல அனுமதிப்போம். இதனூடாக தோட்டக் கம்பனிகளுக்கு கொடுத்த பலத்த அழுத்தத் தினால் தற்போது அவை மிரண்டு போயுள்ளன.

திடீரென ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான வித்தியாசமான தொரு போராட்டம் தாக்க த்தை ஏற்படுத்தாது என்பது அவர்களது எண்ணமாகும். பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இப்போது நன்கு உணர்ந்திருக்கின்றனர். தேயிலையை வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதிக்குமாறும் இல்லாவிட்டால் வங்கிகளுக்கு கடன் செலுத்தவோ, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவோ முடியாதுள்ளது எனக்கூறி வருகின்றனர்.

தொழிற்சங்கங்களின் கூட்டுத் தீர்மானங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?

மூன்று அமைப்புகளுக்கும் சமனாக பங்களிப்பை செய்கின்றன. தொகையை தீர்மானிப்பதிலிருந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது, கையொப்பம் இடுவது வரையான அனைத்து விடயங்களிலும் மூவரும் பேசி ஒருமித்து தீர்க்கமான முடிவுடனேயே செயற்படுகிறோம். ஒரு பொறுப்பான தொழிற்சங்கம் என்ற வகையில் கூட்டுத் தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2009 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.

webmanager@lakehouse.lk